Sunday, September 18, 2011

ராசிப் பிரசவங்கள் & புராதனத் தொடர்ச்சி -கவிதைகள்

ராசிப் பிரசவங்கள் 
                              
                                    - பத்மநாபபுரம் அரவிந்தன் -

நாள் கிழமைப் பார்த்து

டாக்டருக்குச் சொல்லிவிட்டால் 

கோள் ராசி பயமில்லை....டாக்டரின் 

கத்திக்குள் நட்சத்திரங்கள் ஒளிந்திருக்கும் ...

மிகச் சிறந்த ராசியதில், சுத்த நட்சத்திரத்தில் 

அற்புதமான நாளன்று - அறுவை முறை கலையோடு 

அக் குழந்தை அவதரிக்கும் .. குழந்தை பிறக்கும் நேரம்

இயற்கையின் கை விட்டு கத்திக்கும், காசுக்கும்  கைமாறி 

காலங்கள் ஆகிப் போச்சு..

என்  குழந்தை பிறந்த நாள் இதென்று சொல்லாமல் 

பிறப்பித்த நாள் இதுவென்று சொல்லவேண்டும்..

டாக்டர்கள் இனிமேல் பஞ்சாங்கமும் பயில வேண்டும்...

சோதிடமும் தெரிய  வேண்டும்..  ராகு, கேது, குரு பெயற்சி

தவறாமல் சொல்ல வேண்டும்...

நல்ல நாள் பார்த்து, அறுத்தெடுத்து அத்தனை

சேய்களையும் நாடாளச் செய்ய வேண்டும்..

பிறப்பவை அத்தனையும் நாடாள வந்து விட்டால் 

குடி மக்கள் என்றிங்கு எவர் தான் இருப்பாரோ?   
-------------------------------------------------------------------------------------------------




புராதனத் தொடர்ச்சி 
                                           - பத்மநாபபுரம் அரவிந்தன் -

( 25-09-2011  திண்ணை இணைய இதழில் வெளி வந்தது  )
புராதனச் சம்பவங்கள் புத்தியில் 

படிமமேறி  நிகழ் வாழ்வில் நெளிந்து 

உட்ப்   புகவும்,  வெளி வரவும் முடியாது  

உறக்கமற்ற சூனியத்தை ஒளிப் பிழம்புகளாய்

சுருட்டியள்ள .. நிலை குலைந்து புராதனமனைத்தும்  

துடைத்தெறியும் வெறியில் புதியன பலவும்

படித்தறிந்து புகுத்தி வைக்க எத்தனிக்கும் மனதில்

புதியன எதுவும் புராதனத்துடனே ஒப்பிட்டு நிற்கும்...

தன்னுள்ப் புலம்பும் மனம்...

' புதியனவென்று எதுவும் இல்லை .. எல்லாம்,எல்லாம்

புராதனத்தின் தொடரே.... '

No comments:

Post a Comment