Friday, March 16, 2012

‎11-03-12 - திண்ணை இணைய இதழில் வெளியான என் இரு கவிதைகள்.

‎11-03-12 - திண்ணை இணைய இதழில் வெளியான என் இரு கவிதைகள்.
- பத்மநாபபுரம் அரவிந்தன் -
 
 
 
தொடர்பறுதல்
 
                                              - பத்மநாபபுரம் அரவிந்தன் -
 
ஏகாந்த இரவொன்றில் வான்பார்த்து
 
மாடியில் படுத்தபோது தென்பட்ட
 
நட்சத்திரங்கள் ஒவ்வொன்றின் இடையேயும்
 
விரிந்துக் கிடக்கிறது ஏகப்பட்டத் தொலைவு
 
எனை விட்டுத்
 
தொடர்பறுந்துப் போனவர்கள் போல..   
 
ஒன்றாய்ப் படித்துசுற்றிய நண்பர்கள் ...
 
நெருக்கமாய்ப் பழகிய தொடர் கடிதத் தோழிகள்
 
பக்கத்து வீடுகளில் குடியிருந்துப் போனவர்கள்
 
நெருக்கமாய் இருந்த தூரத்து உறவுகள் 
 
இலக்கியம் பேசி உணர்ச்சி வசப் பட்டவர்கள் ... 
 
பலருடனும் இற்றறுந்துப் போயிற்று தொடர்பு..
 
முகநூலிலும்ஆர்குட்டிலும் தேடித் தேடி 
 
அலுத்தப் பின்பும்   அழிபடாமல்
 
மனதுள் விரிகிறது அவர்களுடனான
 
எனது நாட்கள் ..
 
புதிது புதிதாய்க் கிடைக்கும் தொடர்புகளும்
 
சிறிது நாளில் தொடர்பறுகிறது
 
கைபேசி அழைப்புகளும் பயனற்று போனபின்பு 
 
எண்களை அழித்துவிட்டு   .. எதிர் நோக்கிக் காத்திருக்க
 
ஒன்று மட்டும் புரிகிறது 
 
தொடர்பறுதல் தொடர்ந்துகொண்டேயிருக்கும்    
 
என் தொடர்பு 
 
புவியறுக்கும் காலம் வரை..  
                                                                                 
- பத்மநாபபுரம் அரவிந்தன் -
 
 

 
 
 
 
  
உளத் தீ ..
 
                                   - பத்மநாபபுரம் அரவிந்தன் -
 
 
சிறிதொரு தீப்பொறி மனதுள்
 
வைத்துசொற்களால் ஊதிப்
 
பெருந் தழலாக்கினாய்   நீ
 
உன் சொற்களின் சூடும்
 
வார்த்தைகளின் வெம்மையும்   
 
பொசுக்கிப்  போட்டதென் மனதைப் பலமுறை
 
ஆறாமல் போன  ரணங்களில் தவித்ததென் மனம்
 
காரணம் புரியாமல்  
 
குடிக்குள் புகுந்தென்னை சுருக்க முயன்றேன் 
அதுவே காரணமாய் ஊர் முன்   
நிலை நாட்டினாய் உன்னை..   
 
எல்லோர்  நிலைபாடும் என்னைக்
 
குறையூற்றி சிறுகச் சிறுகவாய்க் கொன்றொழித்துக்
 
கொண்டிருக்க உனக்கு மட்டுமேத்
 
தெரியும் எனக்குள் நீ வைத்தத் தீயே 
 
என்னை எரித்துக் கொண்டிருப்பதும்
 
இப்பொழுதெல்லாம் தீயையே நான் ரசித்துக்
 
கொண்டிருப்பதும்..  

‎ திண்ணை இணைய இதழில் வெளியான என் கவிதை

‎15-01-12 திண்ணை இணைய இதழில் வெளியான என் கவிதை
 
ஓர் இறக்கை காகம் 

                                           - பத்மநாபபுரம் அரவிந்தன் - 

முட்டை விரிந்து வெளிவரும் போதே 
ஒற்றை இறக்கை இல்லாமல் இருந்தது 
அக்காகக்  குஞ்சுக்கு ... சக முட்டைகள்  விரிந்து 
அத்தனைக் குஞ்சுகளும் இரட்டை சிறகடிக்க 
இக்குஞ்சு மட்டும் ஒற்றை சிறகடித்து எதுவும் புரியாமல் 
மறுபக்கம் பார்த்தது .. சிறகு இருக்கும் இடத்தில்
வெறுமொரு சிறு முளை மட்டுமே அதற்கு..   
பறக்கத் துவங்கிய குஞ்சுகள் கண்டு  
ஒற்றை சிறகினை ஓங்கி வீசி எம்பிப் பார்த்தது ..
முடியாது போக கூட்டுக்குள்ளே முடங்கிப் போனது..
தாய்க் காகம் அதற்கு கொண்டு கொடுத்தது 

சக காகங்கள் சொல்லும் ஊர் கதைகள்
 கேட்டு ஆசை ஊற்றெடுக்க  
ஒருநாள் 
கூட்டிலிருந்தது தாவிக் குதித்து தரைக்கு வந்தது.. 
மிகத் துரித நடையது தானாய் பழகி 
அடிமரப் பொந்தொன்றில் தனக்கானக் 
கூட்டை தானே அமைத்தது ..

காலை முதல் மாலை வரை 
நடந்து நடந்தே இரை தேடித் திரிய 
ஊர்மக்கள் கவனம் அதன்மேல் திரும்பி 
ஒவ்வொரு வீடும் அன்பாய் அதற்கு உணவுகள் 
கொடுக்க .... பறக்கும் காகங்கள் பொறாமையில் 
எரிந்தன... நடந்தே திரியும் காகத்தை ஒழிக்க  
திட்டங்கள் தீட்ட கூட்டங்கள் போட்டன ...அவற்றால் 
ஒன்றும் செய்ய முடியாமல்ப் போக 
எதனையும் பொருட்படுத்தாது 
நடந்து நடந்தே வாழ்ந்து முடித்து 
போய்ச் சேர்ந்தது ஓர் இறக்கைக் காகம் ..

பறக்கும் காகங்கள் சாதாரணமாய்ப் போக 
நடக்கும் காகத்தை ஊர் தேடி அலைந்தது 
அது மரணித்த பின்பும் பரம்பரை பரம்பரையாய் 
கதை வழி இன்னும் வாழ்கிறது மனதுள்.... 
 
‎22-01-12 திண்ணை இணைய இதழில் வெளி வந்த எனது கவிதை - பத்மநாபபுரம் அரவிந்தன் -

இறந்து கிடக்கும் ஊர்

பத்மநாபபுரம் அரவிந்தன்

பெருங் கோட்டைச் சுவர் தாண்டி
உள் நுழையத் தேரோடும் தார் சாலையின்
இருமருங்கும் புது வீடுகள்..
முப்பது ஆண்டுகளுக்கு முன்பான
ஊர் நெஞ்சுள் விரிகிறது..
நிரம்பித் தழும்பும் பெருமாகுளம்
இக்கரைக்கும் அக்கரைக்கும் நீந்திப்
போகும் சிறுவர் கூட்டம்.. குளம்
களிப்படைந்துப் போயிருந்த பொற்காலம்..
கரையோர அரசமரத் திண்டில் காற்று வாங்கிக்
களைப்பாறும் வேளிமலை விறகு வெட்டிகள்
ஓயாதப் பறவைகளின் குரல்
சவக் கோட்டை மேல்ப் பறக்கும்
பருந்துக் கூட்டம்..
மாலையில் நாற் தெருவும் குழந்தைகள்
இளைஞர்கள் விளையாட்டு …
திடீரென வரும் சண்டை .. சற்று நேரத்தில் சமாதானம்
பள்ளிக்கூட நடையில் இரவெல்லாம்
உலகலசும் விவாதங்கள்
அதிகாலை ராமசாமி கோவில் சுப்ரபாதம்
ஊர் வாழ்ந்துக் கொண்டிருந்தது…
இன்றும்
ஊரில் மக்கள் வாழ்கிறார்கள்
ஊர் செத்துக் கிடக்கிறது….
- பத்மநாபபுரம் அரவிந்தன்-