Saturday, October 1, 2011

கவிதைகள் - பத்மநாபபுரம் அரவிந்தன் -

02-10-2011
திண்ணை இணைய இதழில் வெளிவந்த என் கவிதைகள்


காத்திருப்பு
                      - பத்மநாபபுரம் அரவிந்தன் -

(02-10-2011
திண்ணை இணைய இதழில் வெளிவந்த என் கவிதை)
குற்றங்களுக் கெதிராக உயர்த்தப்படும்
சாட்டைகள் விளாசப் படாமலேயே  
மெதுவாய்த் தொய்கின்றன.. இடக்கையால் 
பெருந்தொகை வாங்கிக்கொண்டு  
சட்டங்கள் தன்னிருப்பை சுருக்கவும்
விரிக்கவும் கரன்சிப் பகிர்வுகள் தலையசைத்து நடக்கிறது ..
நியாயங்களின் பாதைகளில்  முள்வேலிப் போட்டு
அராஜகப் பெருஞ்சாலை விரிகிறது ...
ஏதோ நினைவுகளில் அழுத்தப் படுகிறது 
வாக்குப் பதிவு இயந்திரத்தின்  பொத்தான்கள் 
உள்ளேப் போவதும்வெளியே வருவதுமாய் 
நகர்கிறது ஐந்தாண்டு... காட்டப்படும்
 சொத்துக் கணக்குகள்
யாருக்குமே குடவோக் குறையவோ இல்லை 
உட்பூசல்களும்வெளிப்பூசல்களுமாய் 
உதிர்ந்து கொண்டிருகிறது நாட்கள் ...பொது மக்கள் சகலரும் 
ஒண்டிக் குடித்தனத்தில் ஒளிந்து கொள்கிறார்கள் 
இலவசமாய் பலதும் கிடைத்தும் ..விலயேற்ற வீரியம் 
கொடுங் கைகள் கொண்டுத் தாக்கித் தகர்க்கிறது 
மீண்டுமொரு மௌன ஐந்தாண்டுத் தவத்தில் 
காத்துக் கிடக்கிறார்கள்  எப்பொழுதும் போலவே .....

 .

பிச்சைக் காரர்கள்
                                      - பத்மநாபபுரம் அரவிந்தன் -

வயோதிகக் கூனால் வளைந்த
நடையுடன்  பஞ்சடைத்தக் கண்களும்
நடுங்கும் உடலுமாய் ... கந்தல் உடையுடன்
கையேந்தி நின்ற அந்தப் பிச்சைக் காரனுக்கு
தேனீர் வாங்கித் தந்து  கையில் பத்து ரூபாய்க்
கொடுத்தபோது ... நெஞ்சம் முழுக்க ஏதோ நிறைந்தது...
மின் விசிறியின் கீழே , சுழல் நாற்காலியில் 
அமர்தபடி மூன்று  முக இணைப்பிற்காய் ரூபாய்
ஐயாயிரம்  லஞ்சமாய்  வாங்கிய அந்த மின் வாரியப் 
பிச்சைக் காரனுக்கு... நானிட்டப்    பிச்சையும்
முழுக் குப்பி  விஸ்கியும்  எத்தனை நினைத்தும்  
கனக்கிறது மனதுள் அழியாமலேயே....



நினைவுகள்
                          - பத்மநாபபுரம் அரவிந்தன் -

திடீரென்று சம்மந்தமே இல்லாப்
பொழுதொன்றில் உன் நினைவுகள்
எழுந்து விரிகிறது மனதில்
இப்பொழுது நீ எங்கிருக்கிறாய்...
எப்படி இருக்கிறாய் எதுவுமேத்  
தெரியாத போதிலும் .. 
கற்பனையில்
துல்லியமாய்த் தெரிகிறாய்
அதே சிரிப்பு.. நிஜத்தில் ஒரு வேளைமாறியிருக்கலாம் 
ஆனால் என் மனதுள் அப்படியே 
இருபதாண்டுகளுக்கு முன்பிருந்த உன் 
முகமும்பேச்சும்சிரிப்பும் சற்றும் மாறாமல்ப்
பளீரிடுகிறது   ...
கல்லூரி வளாகத்தில் முந்திரி மரத்தில்ச் சாய்ந்து
 என் விரல்களைக் கோர்த்தபடி 
நீ சொன்ன வார்த்தைகள் இத்தனை
ஆண்டுகளுக்குப் பிற்பாடு ஏன்
இன்றென்னை
வந்தடைகிறது மீண்டும்?
விரக்தி நேர்கையில் சுகங்களாய்க்
கழிந்த பொழுதுகளை மீண்டும் 
மீட்டெடுக்கத் துடிக்கிறதோ மனம் ? 
எங்கிருந்தாலும் என்னைப்போல்
உனக்கும் என்றாவதுத் தோன்றுமோ 
நாம் தவறவிட்ட வாழ்வின் சுகமானப் 
பொழுதுகளை நினைக்க......


கோமறத்தாடியின் மறுநாட்க் கவலை
                                                                          - பத்மநாபபுரம் அரவிந்தன் -

(02-10-2011
திண்ணை இணைய இதழில் வெளிவந்த என் கவிதை)

ஓங்கி ஒலிக்கும் ஒற்றை முரசின்
தாளத்தில்த் துள்ளும் கோமறத்தாடியின் 
கை இருந்த கமுகம் பூ உதிர்ந்து தெறிக்க
ஆக்ரோஷ ஆட்டத்தில்... பலமாய் வெளிவரும்
அவர் குரலற்ற வேறொன்று...  வியர்த்து விறுவிறுக்க
ஆடும் மாடனுக்கு  சாராயம் கலந்த 
இளநீர்கள் கொடுத்து உக்கிர ஆட்டத்தை 
உச்சத்தில் கொண்டு போய்அதிரும் முரசினை 
சட்டென்று  நிறுத்தி... உருவாகும் அமைதியில் 
கோமறத்தாடியின் உருவில் மாடனின் குரல் மட்டும் 
சத்தமாய் ஒலிக்கும்...நீட்டப்படும்  அவித்த முட்டைகள் தின்று ... மீண்டும் சற்றே 
சாராயம் குடித்து  திருநீறு பூசி குறிசொல்லி முடித்து
சட்டென்று தரையில் மாடன் விலகி, மனிதனாய் சரிய
 தண்ணீர்த் தெளித்து புதுத் துணி உடுத்து
கறிச்சோறு   தின்னும் பொழுதில் நினைப்பார்
' என்றைக்கும் திருவிழா இருந்தால் என்ன சுகம்
நாளை முதல் சாப்பாடு ஒருவேளை ...
இன்று காலில் விழுந்தெழும் பக்தர்கள்
நாளை மீண்டும் சொல்வார்கள் ,
" ஏதாவது சோலி மையிருக்குப் போவும் ஓய்...."



( 02-10-2011
திண்ணை இணைய இதழில் வெளிவந்த என் கவிதை)