Wednesday, October 30, 2013

தானே விஸ்த்தரித்தப் பெருஞ் சிறகுகள்


 பத்மநாபபுரம் அரவிந்தன்
 
அந்தமான் கடலின்
கிராமியக் கரையொன்றில் 
முட்டையுடைத்து வெளிவந்தது 
அந்த சீகல் குஞ்சு...

சுற்றியக் கடல் வெளியில் இரைதேடி 
கரைசேரும் கூட்டத்தினிடையே 
இது மட்டும், கடலினை வியந்தது...
 
இப்பெரும் சமுத்திரத்தில்,
ஏன் நாம் இங்கேயே சுற்ற வேண்டும்? 
என்றே எண்ணியபடி...
தொலைதூரக் கடல் நோக்கி
 குறிக்கோளைக் குறித்தது..


சிந்தை மொத்தமும் 
கடலுள் பதித்தது
உதவத் துணையின்றி 
தானே தன் சிறகுகளை விஸ்த்தரித்து 
பலமான காற்றில் எதிர் நோக்கிப் பறந்தது

முடியுமென்ற மனபலம் உடலையும் உந்தியது.. 
சிந்தனை வேறன்றிக் குறிக்கோளே
குறிகொண்டு தீப்பொறியாய்க் கனன்றது....
காற்றின் துணை கொண்டு நெடுந்தூரம் பறந்தது....
ஓய்விற்காய் சிலநேரம் தண்ணீரில் மிதந்தது..

பேரலைகள் தாலாட்ட 
கொடுங்காற்று தலைகோத 
கடலினை மற்றொரு பரிமாணத்தில் 
அது ரசிக்க ஆரம்பித்தது..
கண்டங்கள் கடந்ததனின் 
பயணங்கள் தொடர்ந்தன..

தன் கூட்டத்துப் பறவையெல்லாம் 
அங்கேயே இருந்தபோது...
இதுமட்டும் எங்கேயோ இருந்தது......
தன் குறிக்கோளைத் தழுவியபடி

தொலைதூரம் பறந்தது
துவண்டு வருகையிலே 
அதன் துணைப்பறவை அதன் 
கோதலாலும்,கூடலாலும் 
புத்துயிர்ப்பை அளிக்கிறது..

ஓய்வின்றி அதனால் 
அப்பறவைப் பறக்கிறது
துணைப்பறவை தூண்டுதல்
இல்லையெனில் ஒருவேளை 
அப்பறவை போதுமென்று நின்றிருக்கும்... 

இந்த சீகலின் சிறுகவிதை..இங்கே 
கமோடர் கேப்டன் வேலுவிற்கு சமர்ப்பணம்.. 

கடலோடும் எங்களுக்கு 
கரையேப் புதிர்.. நாங்கள் 
கடலினை கடலில் நின்று பார்ப்பவர்கள்.. 
தினந்தோறும் உதயமும் 
அஸ்தமனமும் கண்டு ரசிப்பவர்கள்...
பவுர்ணமிப் பெருநிலவில்
கடல் ஜொலிக்கும் பேரழகை 
விழுங்கி செரிப்பவர்கள்

எங்கள் வாழ்வின் சுகமும்,
சோகமும் கரை நின்றுக் கடல் நோக்கும் 
பலருக்கும் புரியாது..

கடலில் இருக்கின்ற 
எல்லா சிப்பிக்குள்ளும் முத்து விளைவதில்லை..
இவர் போன்ற சிப்பிகள் முத்துக்களை
உருவாக்கும் சிற்பிகள்..
குறிக்கோளை சென்றடைய 
இவர் குறிக்கோளாய் மாறியவர்...

இவர் ஓய்வு பெற்றப் பிறகும் கூட 
இவர் பணி புதிய கடலோடிகளுக்குத் தேவை.  

இவர் அத்தான் என்ற முறைதாண்டி 
எனக்கு வாய்த்த நல்லதொரு 
கடல் பற்றிய வழிகாட்டி
இவர் விரல் பற்றி நானின்று 
தோள்வரை எட்டியிருக்கிறேன்..

இனி நான் எத்தனை மேல் சென்றாலும் 
கீழ் நின்று இவரை.... 
அண்ணாந்து மேல் நோக்கவே ஆசை...
அண்ணாந்து 
மேல் நோக்கவே ஆசை...