Thursday, September 22, 2011

கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையா?

கூடங்குளம் அணு மின் நிலையம் — சில கேள்விகளும் , சில பதில்களும்.

Written on:September 22, 2011
Comments
Add One
நம் நாட்டுக்கு அணு மின் நிலையம் தேவையா?
தேவை ( சில விதிகளுக்கு உட்பட்டு)
கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையா?
தேவை இல்லை.
ஏன்?
தமிழ்நாட்டின் மின்சாரப் பற்றாக்குறையை, இவ்வளவு காசு போட்டு, அரதப்பழசான ரஷியதொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட அணுமின் நிலையம் அமைத்துத்தான் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
விளக்கம் ப்ளீஸ்.…
தமிழ்நாட்டின் மொத்த மின்சார உற்பத்தி 10237 MW.
நமக்கு எங்கிருந்து மின்சாரம் கிடைக்கிறது?
  • TNEB க்குச் சொந்தமான மின்நிலையங்கள் மூலம் — 5677 MW
  • தனியார் மின் நிலையங்கள் மூலம் — 1180 MW
  • மாநிலத்தில் இயங்கும் பொதுத்துறை மின்சார நிலையங்கள் மூலம் — 2861 MW
  • தனியார் நிறுவனங்கள் , சொந்த உபயோகத்துக்காக உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் உபரியை, மாநிலத்துக்கு விற்பதால் கிடைக்கக் கூடியது — 214 MW
  • மற்றும் பிற (வெளி மாநிலங்களில் வாங்குவது எட்செட்ரா) — 305 MW
ஆனால், இதெல்லாம், மின்சார உற்பத்தி நிலையங்கள் 100% சீராக இயங்கினால் மட்டுமே கிடைக்கும். நடைமுறையில் தோராயமாக 8000 MW என்று வைத்துக் கொள்ளலாம் ( சென்ற ஆண்டு கணக்குப் படி).
ஆக, நம்முடைய உற்பத்தி 8000 MW
தேவை : 10,500 MW — 11,500 MW
பற்றாக்குறை : 2500 MW – 3500 MW
இந்தப் பற்றாக்குறையை கூடங்குளம் அணுமின் நிலையம் மொத்தமாகத் தீர்த்து விடாது. கூடங்குளத்தின் திட்ட அளவு 2000 MW ( அதிலே முதல் கட்டமாக 1000 MW, இன்னும் சில மாதங்களில் இயங்க இருக்கிறது.) இந்த 2000 MW மின்சாரத்தில் நமக்குக் கிடைக்கவிருக்கும் பங்கும் 925 MW மட்டுமே.
அப்படியானால் நம் பற்றாக்குறையை எப்படி ஈடுகட்டுவது?
தற்போது ஏழு பெரிய மின்சார திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளன ( கூடங்குளம் திட்டம், கல்பாக்கம் விரிவாக்கத் திட்டம் அடக்கம்) . இவை 2012 இறுதியில் மின்சார உற்பத்தியைத் துவங்கும். இதன் மூலம் நமக்குக் கிடைக்க இருப்பது 4640 MW. இதிலிருந்து கல்பாக்கம், கூடங்குளம் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை (925 MW + 167 MW) ஐக் கழித்து விட்டாலும், கிடைக்க இருப்பது, 3548 MW. சில திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்க தாமதமானாலும், உறுதியாக 2500 MW கிடைக்கும்.
இதைத் தவிர, புதிதாக திட்டமிடப்பட்டு ஆனால், கட்டுமானத்துக்கு எடுத்துக் கொள்ளப் படவிருக்கும் திட்டங்கள் 5. இதன் மூலம் 2015 ஆண்டு இறுதியில் கிடைக்க இருக்கும் மின்சாரம் 5600 MW. இதையும் தவிர, அமைச்சகத்தின் அனுமதிக்காக வேண்டி காத்து நிற்கும் பெரிய திட்டங்கள் நான்கு. எல்லாம் ஒழுங்காக இருக்கும் பட்சத்தில், இத்திட்டங்கள் 2013 ஆம் ஆண்டில் பூர்வாங்க வேலைகளைத் துவங்கினால், 2016 ஆண்டு இறுதியில் மின்சார உற்பத்தியைத் தொடங்கும். இதன் மூலமாகக் கிடைக்க இருக்கும் மின்சாரம் 3800 MW.
இவை, அதிகரிக்கும் தேவையையும் சேர்த்து ஈடுகட்டும்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை விட்டால் தமிழ்நாடே இருளில் மூழ்கும் என்கிற கருத்து தவறானது.
கூடங்குளம் எல்லா விதிகளுக்கும் உட்பட்டுத்தான் கட்டப் படுகிறதா?
தனியாரோ, பொதுத் துறையோ, மாநில மின்சார வாரியமோ யாராக இருந்தாலும், மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஏகப்பட்ட விதிமுறைகள் உண்டு. எந்த வகை மின்சாரம் ( அனல், நீர், சூரியசக்தி…) என்பதைப் பொறுத்து விதிகள் மாறும், ( யார் அமைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அல்ல) . நிறைய விதிமுறைகள் இருந்தாலும், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கான விதிகள் தான் கடுமையானவை. இதிலே முக்கியமானவை இரண்டு.
மின்நிலையம் அமைக்க முடிவு செய்து ( இந்த இடத்திலே கூடங்குளம்) , பூர்வாங்க வேலைகள் முடிந்ததும், அந்தத் திட்டத்தை ( திட்ட மதிப்பு, நில தேவை, சூற்றுச்சூழல் பாதிப்பு, அதற்கான பரிகாரங்கள்: உள்ளிட்ட) , குறிப்பிட்ட for­mat இலே, சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தை, அதற்கென அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஆராய்ந்து திருத்தங்கள் சொல்லும். திருத்திக் கொண்டு அப்பீல் செய்ய வேண்டும். பிறகு மீண்டும் திருத்தங்கள், இப்படி சில மாதங்கள் ஓடும். ஏழெட்டு வருடமாக, இந்த நிலையிலேயே இருக்கும் மின்சார திட்டங்கள் ( தனியார் & பொதுத்துறை) ஏராளம். ஒரு வழியாக, அவர்களுக்குத் திருப்தி வந்ததும், அதை, மாநில, நிபுணர் குழுவிடம் பரிந்துரைப்பார்கள்.
மாநில நிபுணர் குழு, ஒரு சாங்கியத்துக்கு, மேலிடம் கேட்ட கேள்விகளையே கேட்டுவிட்டு, pub­lic hear­ing என்ற சடங்கு செய்யப் பணிப்பார்கள். pub­lic hear­ing என்பது, எந்த இடத்தில் அந்த மின்நிலையம் கட்டப் பட இருக்கிறதோ, அங்கு வசிக்கும் மக்களை அழைத்து அவர்களுக்கு ஏதேனும் ஆட்சேபம் இருக்கிறதா என் கேட்கும் ஒரு நடைமுறை. சுற்றுப்புறச் சூழலுக்கு ( அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் உட்பட) பாதிப்பு ஏற்படுத்தும் அனைத்து பெரிய திட்டங்களும் இந்த pub­lic hear­ing நடைமுறையைக் கடந்துதான் வரவேண்டும். pub­lic hear­ing நடப்புகளுக்கு விளக்கம் கேட்க யாரும் வரவில்லை என்றால், சில வழக்குகளில் அளிக்கப்படும் எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு போல, யாருக்கும் ஆட்சேபம் இல்லை என்று NOC பெற்று வேலையைத் துவங்கி விடுவார்கள்.
( இந்த வேலைக்கு மொத்தப் பொறுப்பாளியான அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், தன் வேலையை சீரியஸாக எடுத்துக் கொண்டு vedanta , Lavasa, Jin­dal, POSCO போன்ற பெருமுதலாளிகளுக்கு இம்சை கொடுத்ததால், அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ஜெயந்தியக்காவை அந்த இடத்திலே உட்கார்த்தி வைத்துவிட்டார்கள் என்பது ஒரு கிளைக்கதை )
கூடங்குளம் விவகாரத்தில், இரண்டு யூனிட்டுகள் ( 1000 MW) கொண்ட முதல் கட்டத்துக்கு இந்த pub­lic hearing நடந்ததா, முடிவு என்ன என்பது குறித்து என்னிடம் தகவல்கள் இல்லை. அதே அளவிலான இரண்டாவது கட்டத்துக்கு, திட்ட வரைவு, கடந்த வருட மத்தியில் மத்திய சுற்றுப் புறச் சூழல் அமைச்சகத்துக்குச் சமர்ப்பிக்கப் பட்டு, அது முதல் கட்ட அனுமதியைப் பெற்றது. இரண்டாம் கட்ட அனுமதி இன்னும் நிலுவையில் உள்ளது.
அணுமின் நிலையம் அமைப்பதிலே செலவு அதிகம் என்கிறார்களே? நிசமாகவா? வேறு சீப்பான வழிகள் என்ன என்ன?
உண்மைதான். அனல் / நீர் மின்சாரம் போல் அல்லாமல், அனல் மின் நிலையத்துக்கு ஏகப்பட்ட முஸ்தீபுகள் செய்ய வேண்டும். மிக அதிக அளவு நிலம் வேண்டும். நுட்பமும், உபகரணங்களும் விலை அதிகம். கூடங்குளம் முதல் கட்டத்துக்கு இது வரை ஆன செலவு சுமாராக 15 ஆயிரம் கோடி ( அனைத்தும் உள்ளிட்டது). அதாவது ஒரு மெகாவாட்டுக்கு 15 கோடி ரூபாய். ஆனால், நிலக்கரி அனல் மின்சாரத்தை , 5 — 5.5 கோடி ரூபாய் / மெகாவாட் என்ற விலையில் உற்பத்தி செய்யலாம். ஆனால், நிலக்கரி மின்சாரத்தின் மூலம் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகளும் அதிகம். நிலக்கரி பற்றாக்குறையும் நிலவுகிறது. அரசு மின் நிறுவனங்கள் சட்டீஸ்கார், ஜார்க்கண்ட் ஒரிசா மாநிலங்களில் உள்ள நிலக்கரி சுரங்கங்களிடம் coal link­age க்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். தனியார்கள், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். தமிழ்நாட்டில் மின்சார திட்டங்களின் தாமதத்துக்கு நிலக்கரி இருப்புக்குறைவும் ஒரு முக்கியக் காரணம். உலகெங்கும், நிலக்கரி மின்சாரத்தைக் குறைக்க முனைப்பு காட்டுகிறார்கள். ஆனால், நம் நாட்டில் ( உடனடியாக ) முடியாது என்பதால், தீங்கு குறைவான super crit­i­cal technology மூலம் அனல் மின் நிலையங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முறைசாரா எரிசக்தி நம் மின்சாரப் பற்றாக்குறையை தீர்க்க முக்கியமானதொரு வழி.
காற்று மின்சாரம் : நாம் கடந்த ஆண்டு, உற்பத்தி செய்த மின்சாரத்தில் கிட்டதட்ட 4000 MW , காற்றாலை மூலமாக வந்தது. காற்றாலை மின்சாரத்தில், தமிழ்நாடு தான் முன்னோடி. இதிலே, சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. காற்று மின்சாரத்துக்கு அடிப்படைத் தேவையான தட்ப வெப்பச் சூழலை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பதோடு, தட்ப வெப்பத்தைக் கணிக்கக் கூடிய நுட்பம் ( wind forecasting) தற்போதுதான் நடைமுறைக்கு வந்துள்ளன.
சூரிய சக்தி : இது கொஞ்சம் பரபரப்பாக உள்ளது. இதிலே உள்ள முக்கியமான சிக்கல், உபகரணங்கள், உள்நாட்டில் தேவைப்படும் அளவில் கிடைப்பதில்லை என்பதோடு, விலையும் அதிகம். ஒரு மெகாவாட்டுக்கு குறைந்த பட்சம் 15 கோடி ரூபாய்கள் ஆகும். ஆனால், அரசு அவ்வளவு விலை கொடுத்து மின்சாரத்தை வாங்காது. இந்தச் சிக்கலைக் களையவும், சூரிய மின்சார உற்பத்தியைப் பெருக்கவும், அரசு, ஒரு சலுகை திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. குஜராத், ராஜஸ்தான், ஒரிசா போன்ற , solar radiation அதிகமாக உள்ள மாநிலங்கள் ஓரளவு பரபரப்பாக இருந்தாலும், தமிழ்நாட்டில் கொஞ்சம் மந்தம் தான். அரசு சலுகைகள் எல்லாம் இல்லாமல், சூரிய மின்சாரத்துக்கான உபகரணங்களின் விலை குறைந்தாலும், அவற்றின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தாலும், தனியார் இதிலே முதலீடு செய்ய முன்வருவார்கள். ( இன்னும் விளக்கலாம், ஆனால், இந்த மேட்டரின் நோக்கத்துக்கு அப்பாற்பட்டது)
கடலலை மின்சாரம் ( Tidal Power) , geot­her­mal energy போன்றவை இன்னும் R and D லெவலில் தான் இருக்கிறது. நடைமுறைக்கு வந்தாலும், நம் மொத்தத் தேவையில் 1% பங்களிக்கும். அவ்வளவே.
மின்சார விநியோகத்தைச் சீராக்கினாலே அனைத்தும் சீராகும் என்கிறார்களே உண்மையா?
இது முழு உண்மை அல்ல.
கொஞ்சம் அடிப்படையில் இருந்து பார்ப்போம். இந்த மின்சாரக் கட்டமைப்பு மொத்தம் மூன்று படிநிலைகளை உள்ளடக்கியது.
1. Gen­er­a­tion ( உற்பத்தி)
2. Trans­mis­sion ( மின் கடத்தலா?)
3. Distribution ( விநியோகம்) .
மூன்று இடங்களிலுமே சேதாரம் ஏற்படலாம்.
ஒரு 500 MW மின்நிலையம் 90% capac­ity இலே இயங்கினால், வெளியே வருவது 450 MW. உற்பத்தியில் ஏற்படும் சேதாரம். இந்த மின்சாரத்தை, உயர் அழுத்தக் கம்பிகள் மூலம் அங்கங்கே ட்ரன்ஸ்மிஷன் டவர்கள் அமைத்து அரசு மின் வாரிய grid க்கு அனுப்புவார்கள். அங்கங்கே டிரான்ஸ்பார்மர்கள் அமைத்து மின்சாரத்தை பார்சல் செய்யும் பொழுது இயல்பாகவே கொஞ்சம் வீணாகும். இது ட்ரான்ஸ்மிஷன் மூலம் ஏற்படும் சேதாரம். grid ஐ வந்தடைந்த மின்சாரத்தை நுகர்வோருக்கு அனுப்புவதற்குப் பெயர் விநியோகம். இங்கே திருட்டு மூலம் கொஞ்சம் சேதாரம் ஆகும்.
Aggre­gate Tech­ni­cal & Com­mer­i­cal Loss ( AT &C) என்று இந்த மூன்று வகையான நட்டத்தின் மூலமும், நாம் கடந்த ஆண்டு இழந்தது மொத்த உற்பத்தியில் 18.5 % தான். ஆகவே, இந்தச் சேதாரங்களைத் தவிர்த்தால், எல்லாம் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்பது முழு உண்மை அல்ல.
வேறு என்ன தான் வழி?
Demand Response Management.
நம் மின்சார விநியோகக் கட்டமைப்பு ஒரு வழிப் பாதை. உதாரணமாக, TNEB, தேவைப்படுகிற நேரத்தில், நம் வீட்டு கிரைண்டரிடம் ‘தொடர்பு’ கொண்டு, தேவைப்படும் மின்சாரத்தை அளிக்கும். ஆனால், அந்த மின்சாரம், கிரைண்டர் இயக்கத்தான் பயன்பட்டதா என்பதை என்பதை , TNEB Grid அறிந்து கொள்ளா வாய்ப்பில்லை. மின்சார அளவைக் கணக்கிடும் தற்கால அனலாக் மீட்டர்களுக்கு அத்தனை புத்திசாலித்தனமில்லை.
அப்படி ஒரு வழி இருந்தால்?
நாம் மின்சாரத்தைச் செலவு செய்யும் விதங்களைப் பதிவு செய்யக் கூடிய ஒரு டிஜிடல் மீட்டர் இருந்தால்? ( smart metering)
யார் யாருக்கு எத்தனை மின்சாரம் தேவைப்படும் என்பதை முன் கூட்டியே கணிக்கக்கூடிய தரவுகள் இருந்தால்?
எதெதெற்கு எவ்வளவு, எப்பொழுது மின்சாரம் தேவைப்படும் என்பதை கணிக்க முடிந்தால்?
எந்த ஏரியாவில் லோட் அதிகம் ஆகும், குறையும் என்கிற pattern ஐக் கண்டு பிடிக்க முடிந்தால்?
எந்த இடத்திலே, மின் திருட்டு நடைபெறுகிறது என்பதை உட்கார்ந்த இடத்திலே கண்டு பிடிக்க முடிந்தால்?
குளிர்சாதன வசதிக்கான மின்சாரத்துக்கு இத்தனை விலை, மிக்ஸி இயக்க தேவையான மின்சாரத்துக்கு இத்தனை விலை என்று ( dif­fer­en­tial pricing) என்று நிர்ணயிக்க முடிந்தால்?
தகவல் நுட்பம் துணை கொண்டு இது அனைத்தையும் சாதிக்க முடியும். இதை smart grid என்று சொல்வார்கள். நம் மின்சார விநியோகக் கட்டமைப்பையே, மொத்தமாகக் கலைத்துப் போட்டு புதிதாகச் செய்ய வேண்டும் என்பதால், இதற்கு ஆகக் கூடிய செலவும், கால நேரமும் அதிகம். என்றாலும், அரசு அளவிலும் , தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இதற்கான முனைப்பு துவங்கிவிட்டது. தொலைத் தொடர்பில் புரட்சி செய்த அண்ணன் சாம் பிட்ரோடா வைத் தலைவராகக் க் கொண்டு ஒரு உயர்மட்ட செயல் குழு ஒன்றை உருவாக்கி, சில பைலட் திட்டங்கள் ( பெங்களூருவில்) செய்து கொண்டிருக்கிறார்கள்.
[ இது ஒரு தொலைநோக்குத் திட்டம், இன்றைக்கு திட்டமிட்டு நாளை செயல்படுவதல்ல]
சிம்பிளாக நாலு வரியில் சொன்னாலும், இந்த இயல், மர்மநாவலுக்கு உரித்தான சுவாரசியமும் விறுவிறுப்பும் கொண்டது. இன்னும் விரிவாக எழுதலாம், ஆனால் எந்த டெக்னலாஜியையும் , techcrunch இலே வந்திருக்கிறதா? ஆண்டிராய்ட் / ஐஃபோன் அப்ளிகேஷனாக சுருக்க முடியுமா என்று யோசிக்கிற சூழல் நிலவும் ‘ITcentric’ தருணத்தில், இதுவே அதிகம்.

1 comment:

  1. நான் BE (2001 ) படிக்கும் போதே போராட்ட அமைப்பு ஆலோசனை கூட்டங்களுக்கு சென்று இருக்கிறேன் . இப்போதைய போராட்டம் தும்பை விட்டு வாலை பிடிக்கும் செயல். நமது வரி பணம் செலவு செய்தபின் ஒரு விபத்தை காரணம் காட்டி போராட்டம் நடத்துவது அறிவார்ந்த செயல் என்று நான் நினைக்கவில்லை .

    ReplyDelete