Monday, February 14, 2011

மருதநாயகம் பிள்ளை புலி சுட்டக் கதை - அத்தியாயம் - 4

- அத்தியாயம் - 4

மருதநாயகம் பிள்ளை எண்ணை தேய்க்கப்படும் சுகத்தில் லயித்திருந்தார் . கடுவா கேட்டார் , ஒம்மக்கிட்டே எத்தன உண்டைகோ இருக்கு                         ( தோட்டாக்கள்) , என்கிட்டே ஆறு உண்டைகோ இருக்கு .. நாலண்ணத்தச் சுட்டுப் போட்டேன்", என்றார்.
தன் லயிப்பிலிருந்து  மீண்ட மருதநாயகம் பிள்ளை கடுவாவிடம், " என்ன சவத்தச் சுட்டே? ... சொல்லவே இல்ல..  என்றார்.
" எனத்தய சொல்லுகதுக்குவேளி மலைக்கு துப்பாக்கியும் துக்கிற்றுப்  போனேங்  பாத்துக்கிடும்... எனத்தயாவது  சுட்டுக் கொண்டுவரணும்ணு.. தொணைக்கு அந்தத் தாயளி முத்துக் கருப்பனும் வந்தாங் ..சரக்கோணம் தாண்டி மேல ஏறயிலே ஒரு செரியான மிளா புல்லுதின்ணுக்கிட்டு நின்ணு... பதுங்கிப் பதுங்கிப் பக்கத்திலேப் போய்ட்டோங்... ஒரு பத்து அடிதாங் ... அந்த எளவு குண்டியைக் காட்டிட்டு நிக்கி..  கொஞ்ச நேரம் குறிபாத்து நாங் சுடப் போகையிலே .. இந்த முத்துக் கருப்பங்...  மயிராண்டி .., ‘ ஓய்..ய்..கொட்டையில சுடும்வேண்ணு..’ போட்டாங்  ஒரு அவயம், நாங் இவங் போட்ட அவயத்துல அதுக்க எடது தொடையில வச்சிருந்த குறி மாறிப்போச்சு.. சத்தத்துல சரக்கு எடுத்து பாரும் ஓட்டம்.. உண்ட எளவு எங்கப் போச்சுண்ணு தெரியல்லே..
அடுத்த உண்டைப் போட்டு ஓடிக்கிட்டே சுட்டேங்.. சரியா அதுக்க முன்னால இருந்த மரத்துலப் பட்டு மரம் ஓட்டயாப் போச்சு.. மிளா ஓடிப்போச்சு... வந்த ஆத்திரத்துல அந்தத் தாயளி முத்துக் கருப்பனுக்க செள்ளயிலக் குடுத்தேங் ஒண்ணு.., " பொலயாடி மோனே... எனக்கக் கன்னி வேட்டயில மண்ணளிப் போட்டுட்டியேலேண்ணு... ", திருப்பியுங் ஒண்ணு குடுக்கப் போவையிலே அவங்    சொல்லுகாங்...," ஓய் அடிச்சாதிரும்.. நீரு அதுக்க  தொடயிலயாக்கும் குறி வச்சேரு.. தொடையில உண்ட பட்டாலும் அது பாட்டுக்கு வேளிமலைக்க இந்தப் பக்கம் கெயறி அந்தப் பக்கம் வர ஓடும்.. ஓம்மளாலே அத ஒரு மயிரும் பிடிச்ச முடியாது.. கொட்டையில சுட்டா... சரக்கு அங் கெடக்கும்... அதுனாலயாக்கும் சொன்னேன்ணா..",  படுக்காளிப் பய சொன்னதும் சரிதாண்ணு தோணிச்சு", என்று கடுவா மூர்த்தியா பிள்ளை சொல்லி முடிக்கவும் மருதநாயகம் பிள்ளை விழுந்து, விழுந்துச் சிரித்தார்.. கக்கோடன்  தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு  சிரித்தான். மருதநாயகம் வெற்றிலை  மடித்துப் போட்டுக்கொண்டார், கடுவாவும் வெற்றிலை போட்டார். கக்கோடன் இருவரும் வெற்றிலை துப்ப வசதியாக கோளாம்பியுடன் நடுவில் வந்து நின்றான்.

கக்கோடன் நீட்டிய கோளாம்பியில் வெற்றிலைச் சாற்றை துப்பிவிட்டு மருதநாயகம் பிள்ளை கடுவாவிடம் கேட்டார், " மிச்சம் ரெண்டு உண்டயோ.. எங்கப் போச்சு? , அதற்கு கடுவா பதில் சொல்லத்  துவங்கும் முன் கக்கோடன் கோளாம்பியை நீட்டினான். துப்பிவிட்டு கடுவா சொல்ல ஆரம்பித்தார்..," ஒரு அவயாங் கெடந்து வீட்டில பயங்கர சல்லியம் பாத்துக்கிடும், நம்ம பொஞ்சாதி ஒரே கொறதான்...சவத்தக் கொண்ணுப் போடச் சொன்னா.. அவயானக் கொல்ல வெலக் குடுத்து வாங்கின துப்பாக்கி உண்டைய செலவளிக்கணுமான்னு எம்பாட்டுக்கு இருந்தேங்... ஏளவுடுத்தவளுக்க புறுபுறுப்புத் தாங்க முடியல்ல.. அப்பொதாங்.. நம்மோ முத்துக் கருப்பங் வேளி மலைலேருந்து  வடிச்ச ஒண்ணாந்தரச் சாராயமும்மொயலுப் பொரியலுங் கொண்டாந்தாங் .., அரக் குடுக்கைய குடிச்சதும் பயங்கர வீரம் வந்துட்டு...எடுத்தேங் துப்பாக்கிய..... துப்பாக்கிய சுட்டுப்  பாத்தாலையும் ஆச்சு..  எளவுடுத்தச் சனியன கொண்ணு போட்டாலையும் ஆச்சுன்னுப் போனேங் பொடக்களக்கி .. நல்ல நெலவு ... பதுங்கி இருந்தேங்... சவம் நல்ல பண்ணிக் குட்டிக்க அளவு இருந்து பாத்துக்கிடும்.. முன்னங் காலால சரப்புறசரப்புறண்ணு  மண்ணு மாந்த தொடங்கிச்சு...எங்குறி அதுக்க நடு மார்ல இருந்து.. கெவனமா பாத்துச் சுட்டெங் .. செரியா  சவத்துக்க மாறிலப்  பட்டு ஒடம்பு ரெண்டு துண்டாப் பொளந்து  தனித்தனியா விட்டுட்டுப் பாத்துக்கிடுங்.. தலையுங் நெஞ்சுக் கூடும் சேந்து ஒரு துண்டாட்டுங்வயறுங் வாலுங் சேந்து ஒரு துண்டாட்டும்... கொடலு பாதி இதிலையும்... பாதி அதிலயுமாட்டு... சவத்து மூதி என்ன எளவு காரியம்  செய்து தெரியுமாபொடக்களயில இருந்து தலையும் ரெண்டு காலுங் மாறுமாட்டு குடு குடுன்னு ரெத்தம் வடிய வடிய நேரா வீடுக்குள்ள ஓடியாந்துட்டு.. நம்ம பொஞ்சாதி ஒரே அவயம் .. பத்தாயத்துக்க மேல ஏறி நிக்கா...,”  இடைமறித்தார் மருதநாயகம் பிள்ளை..
" ஓய் ஒம்ம பொஞ்சாதினு சொல்லும் ..  அவ எனக்கும் கொழுந்தி மொறயாக்கும் ... எசகுபிசகாயிரும்.." சொல்லி மருதநாயகம் பிள்ளை சத்தமாய்ச் சிரித்தார். அசட்டு சிரிப்பு சிரித்தபடியே கடுவா மூர்த்தியா பிள்ளைத் தொடர்ந்தார்,... ” அந்த சனியங் சாவாம ஒரு முக்குலப் போய் இருந்துட்டு என்னப் பாத்து வாய 'ஊஹினுதொறந்துட்டு பல்லக்காட்டுகு... எனக்கு ஈரக்கொல பதறிப் போச்சு பாத்துக்கிடுங்.. அடுத்த உண்டையப் போட்டு தரையோட தரையா இருந்து அதுக்க வாயப் பாத்து துப்பாக்கிய வச்செங்.. சவம் பாதி ஒடம்போட ஓடி வந்து துப்பாக்கி கொளாய்க்க வாயக் கடிச்சி வச்சிருக்கு... அதுக்கு சாவக் கூடிய  வெப்ராளம்..  கண்ண மூடிக்கிட்டுச் சுட்டேங்.. சுக்கு சுக்கா செதறிப் போச்சு.. வீடக் கழுவி  தொடச்சிப்.. போரும் போருன்ணு ஆயிப்போச்சு...பொஞ்சாதிக்க ஏச்சும்  கெடச்சு.. ரெண்டு உண்டாயோ அவயானோட போயும் போச்சு...." என்று சொல்லிவிட்டு வாய் விட்டுச் சிரித்தார் கடுவா மூர்த்தியா பிள்ளை
மருதநாயகம் பிள்ளை சிரித்துக் கொண்டே சொன்னார்.., எங்கிட்ட வாண்டுன பத்து உண்டயளும் அந்தாக்கில கெடக்கு..இந்தத் தடவ எளவுல அம்புட்டையும் சுட்டுத் தீத்துரணுங்... சவம் நமுத்துப் போயிருக்குமோண்ணு  தெரியாது...ஒரு மொயலயாது கொல்லணும்ணு ரொம்ப ஆச பாத்துக்கோ..இல்லாம இந்தக் கனங் கனக்க சாமானத்த வச்சிக்கிட்டு எனத்துக்கு?  ... சாவதுவர ஒரு புலியோ சிறுத்தையோ சுடுவோம்னு தோணல்லே.. அதுகளச் சுடதுக்கு பயங்கர தைரியமும் நெஞ்சூக்கமும்  வேணுண்டே ... அதெல்லாங் தொரமாருக்குதாங் .. பண்டைய நம்ம ஆளுவளுக்கு இருந்து.. நம்மோ பவிசுக்கா சுட்டி இந்த சனியன வாண்டி வச்சிருக்கோம்..", மருதநாயகம் பிள்ளை சொன்னதற்கு கடுவா சிரித்தபடியே ஆமோதித்து சொன்னார்," நீரு சொல்லது சரிதாங்.. இந்த எளவு இருக்கனால தாலா ஊரு பயலுவோ கொஞ்சமாது பயந்து  நடக்கானுவோ...', 
மருதநாயகம் பிள்ளைச் சொன்னார்," இந்த வெள்ளக் காரப் பயலுவள பகச்சுக்கவும் முடியாது.. அவனுவோ சொன்னா சொன்னது தாங்.. புலி சுட வரலேண்ணு சொன்னா ஒடனே துப்பாக்கிய நம்மளப் பாத்து நீட்டுவாங்.. செவனேண்ணு சொல்லதக் கேட்டுட்டு.. நம்ப பாட்டுக்கு இருந்தா ஒரு கெரகமும் இல்ல.. வேலுருல இருந்த எம்பேருடயாங் மருதநாயகம் பிள்ள கத  தெரியுமுல்லா... வெள்ளக் காரப் படையில சுபேதார இருந்தவரு.. கான் சாய்ப்புன்னு பேரையும் மதத்தையும் மாத்திக்கிட்டாரு, பொறவு   அவர வச்சித்தாங் பல சண்டையள்ள இவனுவோ செய்ச்சானுவோ..ஒரு கட்டத்துல வெள்ளக் காரனுவ போக்குப் பிடிக்காம இவரே தனிப் படையோட  அவனுவளையும் ஆற்காடு நவாப்பையும் எதுத்தப்போ என்ன ஆச்சுசதி செய்து பிடிச்சு தூக்கிலப் போட்டதோட, ஒடம்ப துண்டு துண்டா வெட்டி தலைய திருச்சிராப் பள்ளிலேயுங்கைகள பாளையங் கோட்டலேயுங்ஒருக் கால தஞ்சவூரிலயுங்இன்னொரு கால திருவாங்கூரிலயுங் வீசிப் போட்டானுவோ..  அவருக்கப் பேரத்தாலா எங்க ஐயா எனக்கு விட்டேரு..", என்றார்.    உடனே கடுவா நக்கலாய்  ... ," அது கொண்டுத் தாலா ஒமக்கு வீரம் வெளயாடுகு.. ," என்றார்.
மருதநாயகம் பிள்ளை சற்றே கோபப்பட்டார். " லேய் மைத்தாண்டி ராசராசண்ணு பேர வச்சிட்டா ஒருத்தங் ராசராச சோழனாக முடியுமாலே.. அதெல்லாம் ஒரு தனிப் பொறப்புடேய்...", மேலும் தொடர்ந்தார்..," திப்பு சுல்தாங் எம்புடு பெரிய வீரங்.. வெள்ளக் காரனுவோ கொட்டயக் கைலப் பிடிச்சிட்டுல்லா ஒடுனானுவோ அவரப் பாத்து.. ஆனா சமயம் பாத்து நெத்திப் பொட்டுல சுட்டுக் கொண்ணுப் போட்டானுவோ.. ஆக நம்மளப் போல நம்ம ராசாவப் போல..  அவனுவளுக்கு அடங்கிக் கெடந்தா நமக்கும் நல்லது .. நம்ம சொத்துக்கும் பிள்ளையளுக்கும் நல்லது... அந்தமான் செயிலுக்கும் போவண்டாங்... துப்பாக்கி உண்டைக்கு சாவவும் வேண்டாம்... அவனுவள்ட்ட வேற என்னக் கொற இருக்குடேஎம்புட்டு பாத போடுவானுவரயிலு வண்டி கொண்டாந்தானுவோ..இப்போ எண்ண இல்லாம வெளக்கு கொண்டுவாரானுவோ.. அவனுவோ வரலேண்ணா.. நாமோ தேய்லயுங் காப்பியும் பாத்திருப்போமா?     சுருட்டு இழுத்திருப்போமா? ... பிளசரு காரிலப் போவ முடிஞ்சிருக்குமா?   சக்கடா வண்டியும்,வில்வண்டியும், குதிரவண்டியும் மட்டும் தாலா இன்னும் ஓடியிருக்கும்...“, என்றார்.