Thursday, November 21, 2013


வல்லமை இணைய இதழில் 22-11-13  வெளியான என் கவிதை




எண்ணை வயலில் எண்ணப் பூக்கள்
 
                                                              - பத்மநாபபுரம் அரவிந்தன் -
 
பாற்கடலைக் கடைந்து
 
அமுதெடுத்தப் புராணக்கதை படித்ததுண்டு
 
ஆழ்கடலைக் குடைந்து
 
எண்ணை எடுக்கும் வேலை எமக்கின்று...
 
எங்களுக்கு இரு குடும்பங்கள்
 
ஒன்று கடலோடு.. மற்றொன்று கரையோடு..
 
இரண்டுக்கும் எம் வாழ்வில் சரிபங்குண்டு...
 
வருடத்தில் சரிபாதிக் கடலோடும்
 
 மீதத்தைக் கரையோடும் களிக்கும்
 
நாங்கள் கரையில்ப் பிறந்தவரா
 
இல்லை கடலின் புத்திரரா?
 
பணி முடித்து ' உலங்கு வானூர்தியில்*'
 
கடல்மீது பறக்கும் போது மனது
 
களிக்கப் போகும் விடுமுறை நாட்களை
 
 கனாக் கண்டு கண் மூடும்...
 
இருபத்தெட்டு நாட்களுக்குப் பிற்பாடு

கரை தொட்ட மகிழ்ச்சியில் மனம் கூத்தாடும்..
 
விடுப்பின் நாட்கள்
 
நொடிகளாய்க் கடந்து மீண்டும்
 
கடல் நோக்கி அமையும் எமது பயணம்...
 
முதல் சில நாட்கள்
 
கரையின் மணமே மனதுள் கமழும்
 
மெல்ல, மெல்ல கடலோடிணையும்...
 
எண்ணையூற்றின் கண்களைத் துளைத்து
 
திளைத்தெழும் எண்ணையில்
 
ஒளிவிட்டெரிகிறது எங்கள் வாழ்வு..
 
பாற்கடல் கடைந்து அமுதெடுத்து
 
 சாகாவரம் பெற்றனர் அவர்கள்..
 
ஆழ்கடல் குடைகையில் தவறேதும் நிகழ்ந்தால்
 
 சாகும் வரம் பெற்றிடுவோம் நாங்கள்...
 
இங்கு ஒருவர் செய்யும் பிழை
 
தனக்கு மட்டுமன்றி
 
சகலருக்கும் வைத்துவிடும் உலை...
 
நாத்திகம் என்பதற்கு சாதியமே இல்லாமல்
 
ஒவ்வொருவரும் வேண்டிக்கொள்வர்
 
தத்தம் கடவுளை.... வந்தது போல்
 
நல்லபடி
 
திரும்பிச் செல்ல வேண்டி.சிறு காயம் கூட இன்றி..
 
மனதும், உடலும், உணர்வும்
 
ஒன்றிச் செய்யும் இவ்வேலை
 
காமத்தையொத்தது...ஓய்வு நேரத்தில்
 
மனவோரம் மறைந்திருக்கும்
 
 குழந்தைகளின் முகமும்
 
மனைவியின் சுகமும் படர்ந்தெழும் எம்முள்..
 
தொலைபேசியும், மின்னஞ்சலும்,
 
முகநூலும் குடும்பத்தோடு இணைக்கும்..
 
இவை கிடைக்காத போது
 
அந்நாட்கள் வதைக்கும்..
 
நாங்கள் கடலில் உழைப்பது - எம் குடும்பம்
 
கரையில்த் திளைக்கவே..
 
ஒன்றினை இழந்தால்த் தான்
 
மற்றொன்றைப் பெறமுடியும்
 
என்ற சித்தாந்தம்- மற்றவர்களை விட
 
எங்களுக்கு சற்று ஆதிகமாய்ப் பொருந்தும்...
 
 
 
 * உலங்கு வானூர்தி - HELICOPTER
 
( பி.கு - இக் கவிதைக்கு தலைப்பிட்டவர் எங்கள் Rig Manager - சேலம் ஸ்ரீதர் )
 

திண்ணை -10-11-13 இதழில் வெளியான என் கவிதை



என்னுலகம்     
 
- பத்மநாபபுரம் அரவிந்தன் -
 
 
பன்னீர்க் குடத்துள் மிதக்கும்
 
சிசுவின் ஏகாந்த நிலைபோல
என் மனதுள் விரிந்து சுருங்கிச்
 
சுழலும் சலனங்கள்..
 
சலனங்கள் சங்கமித்து உருக்கொண்டு
 
வெளிவரும் என் வார்த்தைகள்
 
புரியவில்லையென்று சொல்லித் திரியும்
 
நீ பலமுறை கேட்டிருக்கிறாய்
 
நான் எங்கிருக்கிறேன் என்றோ,
 
எவ்வுலகில் இருக்கிறேனென்றோ..
 
உன் கேள்விக்கு பதிலற்று நான்
 
நோக்கும் பார்வை உனை நோக்கியே
 
இருப்பினும் பார்வைக்குள் விழுவது நீயல்ல...
 
உனை ஊடுருவி வெளியேறி
 
அது பயணித்துக் கொண்டிருக்கும்
 
பெருந் தொலைவு... நீ நினைத்துக் கொள்வாய்
 
வார்த்தைகள் இல்லையெனினும்
 
பார்வையாவது கிடைக்கிறதென்று....