Saturday, May 18, 2013


பெருமாள்முருகன்

எருமைச் சீமாட்டி - ஆனந்த விகடன் சிறுகதை

அம்மாவின் கத்தல் சத்தம் கேட்டு எல்லாரும் எழுந்துவிட்டார்கள்கோடை நிலவின் குளிர் ஒளியில் வாசலில் கட்டில் போட்டுப் படுத்திருந்தார்கள். ‘அம்மா…  என்னம்மா… என்னம்மா’ என்று பெரியவன் உலுக்கிக் கேட்டதும் அழத் தொடங்கினார்.  ‘எருமப் பித்துப் புடிச்சுக் கத்தறாடா உங்கம்மா’ என்று சலிப்போடு சொல்லிவிட்டு அப்பன் அவர் கட்டிலில் போய் உட்கார்ந்து பீடியைப் பற்ற வைத்தார்அம்மாவின் முகத்தை நிமிர்த்தி  ‘அழுவாத சொல்லும்மா.எதுனாக் கனா கண்டயா’ என்றான் பெரியவன்பயந்து சின்னவனும் அழ ஆரம்பித்தான்அவனை வாரித் தன்னோடு சேர்த்துக்கொண்ட அம்மா  ‘எருமச் சீமாட்டி வந்து கத்திக் கூப்புட்டாடா’ என்றாள்.  

ஆமாஎரும வந்து கூப்பட்டா  எமன் வந்து கூப்பட்டான்னு அர்த்தம்அது வாலப் புடிச்சுக்கிட்டே போய்ச் சேரு சீக்கரம்’ என்று முனகியபடி எச்சிலைக் காறித் துப்பினார் அப்பன்நள்ளிரவில்  தூக்கம் முற்றாகக் கலைந்துவிட்ட எரிச்சல்.இடையில் விழிப்பு வந்துவிட்டால் மறுபடியும் அவ்வளவு சீக்கிரம் அவருக்குத் தூக்கம் வராது.
 ‘கெழட்டெரும நெனப்புலயே இருந்திருப்பஅதான் அப்பிடிக் கெனா வந்திருக்குது’ என்று சமாதானம் சொன்னான் பெரியவன்.
இல்லடா கூப்ட்டாதீனி போடச் சொல்லிக் கேக்கற குரல்லயே கூப்ட்டா’ என்று அழுத்திச் சொன்னாள் அம்மா
கிழட்டெருமையை விற்று ஒரு வாரமாகிவிட்டதுவாங்கிய ஏவாரி வெள்ளிக்கிழமை பொழுதிருக்கவே பிடித்துச் சென்றுவிட்டார்அப்போது அம்மா வீட்டில் இல்லைஏதோ வேலையாகக் காட்டுப்பக்கம் போவது போல மத்தியானம் கிளம்பியவள் வரவேயில்லைகயிற்றில் கோத்திருந்த திருகாணியைக் கழற்றிக்கொண்டு எருமையைப் பிடித்து ஏவாரி கையில் கொடுத்தார் அப்பன்மறுநாள் சனிக்கிழமைமணியனுர் மாட்டுச் சந்தை.எருமையைச் சந்தைக்கு அனுப்புவதன் வேதனை அப்பன் முகத்திலும் தெரிந்தது.வீட்டு மனுசி அதுஆனால் என்ன செய்வது?
கல்யாணமாகி வந்தபோது அம்மா தன்னோடு  சீராகக் கொண்டு வந்தார்.அப்போது ஒருவருசக் கன்றுக் குட்டிமேல் முழுக்கச் செம்பட்டை மயிர்கள் படர்ந்திருக்கும்வயிறு மட்டும் தாழி போலப் பெருத்திருக்கும்தீனியில் கெட்டி.எதைப் போட்டாலும் தின்று விடும்இங்கே வந்து அம்மா பட்ட கஷ்டங்கள்,சந்தோசங்கள் எல்லாம் அதற்குத் தெரியும்.  அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆசை ஆசையாய்ப் பேசுவார் அம்மா. ‘இவ எரும இல்லடா… என்னயக் காப்பாத்த வந்த சீமாட்டி’ என்பாள். ‘என்னக் குடுத்துக் காப்பத்துனா?’ என்றால் அம்மாவுக்கு முகம் இறுகிவிடும்அப்படிக் கேட்டவர்களைத் தண்டிப்பது மாதிரி கொஞ்ச நேரம் எதுவும் பேச மாட்டார்அப்புறம் பேச ஆரம்பித்தால் பெருவேகக் காற்று சுழன்றடிக்கும்.
எல்லாக் குடுத்தவ அவதான்இவ இருக்கறப்ப ஒன்னும் கொண்டு வராதவன்னு என்னய ஆராச்சும் ஒருவார்த்த பேச முடியுமாதங்கன்னுவளுக்குப் பாலுக் குடுத்தாளோ இல்லயோஎம் பசவளுக்கு அவதான் இன்னைக்கு வரைக்கும் பாலுக் குடுக்கறாஅவளாலதான் பட்டி பெருகுச்சுவரத்தரயாக் கெடந்த கட்டுத்தர நெறஞ்சுச்சுஇந்தக் குடிய ஒசத்தினது அவதான்எந்தாயா நின்னு என்னயத் தாங்கறவதான் இந்தச் சீமாட்டி’ என்று ஆவேசத்தோடு பேசிவிட்டு அழுவாள்எந்தப் பேச்சையும் அழுகையில்தான் அம்மா முடிப்பார்.
சிந்தித் தடவித்தடவி செவுரு முழுக்கச் சளி ஒழுவிக் கூரையெல்லாம் ஊளமூக்காக் கெடக்குதுஎங்கிருந்துதான் வருமோ இவளுக்குபனமரத்துப் பாள ஊறறாப்பல’ என்று அப்பன் பேசும் ஏகடியத்தைச் சட்டை செய்ய மாட்டார் அம்மா. ‘எம்பாரத்த மூக்கச் சிந்தித்தான் கொறைக்கோணும்சீமாட்டி மட்டும் எங்கூட வல்லீனா இங்கயா இருந்திருப்பன்எப்பவோ வாழாவெட்டியா எங்கூருக்குப் போயி அங்க மூக்கச் சிந்திக்கிட்டு இருந்திருப்பன்’ என்பார்.  
வந்த இடத்திற்கு ஒரு குறையும் வைக்கவில்லை அதுஅம்மாவைப் போலவே.கன்று ஈன்றபின் நாலாம் மாதம் பயிராகிவிடும்சினை உறுதியான பின் பாலுக்கு நிற்காமல் உதைத்துக் கொண்டு போயிற்று என்னும் பேச்சேயில்லைஅடுத்த கன்று ஈனும் வரைக்கும்கூடப் பீய்ச்சிக் கொண்டேயிருக்கலாம்ஏழாம் மாதம் முடிந்ததும்  ‘பாலு அப்பிடியே சீய்யாட்டம் வருதுஆனாலும் நிக்கறா பாரு.சீமாட்டின்னாலும் எருமைங்கறது செரியாத்தான் இருக்குது’ என்று செல்லமாகத் திட்டிக்கொண்டே பீய்ச்சாமல் நிறுத்திவிடுவார் அம்மா.
இதுவரைக்கும் வீட்டுக்குப் பால்தயிர்மோர்நெய் எல்லாம் அது கொடுத்ததுதான்மூன்று மாதம் கறவை இல்லாத சமயத்தில் தவித்துப் போவார்கள்அது தரும் பாலின்  வாசம் பழக்கமானதில் வேறு கறவைகளின் பால் வாசனையே பிடிப்பதில்லைஅம்மா  வேறெங்கு போய்ச் சாப்பிட்டாலும் பாலோ தயிரோ வேண்டாம் என்று சொல்லிவிடுவார்.  ‘சீமாட்டி பாலக் குடிச்ச வாயிக்கு மத்ததெல்லாம் காமாட்டி பாலுத்தான்’ என்பார்.  
இதுவரைக்கும் அது ஈன்ற கன்றுகளில் மூன்று மட்டும் கிடாமற்ற எல்லாமே கிடாரிதான்எல்லாக் கன்றுகளையும் வளர்ப்பார்கள்ஏதாவது ஒரு காரணத்தால் அவற்றை விற்க நேரும்ஒருபோதும் சீமாட்டியை விற்கும் எண்ணம் யாருக்கும் வந்ததில்லைஇப்போது கட்டுத்தரையில் நிற்பவை எல்லாம் அதன் வர்க்கம்தான்.இளம்வர்க்கம் பெருகப்பெருகச் சீமாட்டியை அம்மாவைத் தவிர எல்லாரும்கெழட்டெரும’ என்று சொன்னார்கள்அம்மா ஒருபோதும் அப்படிச் சொன்னதில்லை. ‘சொல்றவிய ஆருக்கும் வயசாவதயா போயிரும்?’ என்பதோடு நிறுத்திக்கொள்வார்.
போன ஈற்றுச் சினையானபின் அது பட்ட பாட்டைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லைவயிற்றுச் சுமையோடு படுத்து எழுவதற்குள் கண்களில் நீர் முட்டிவிடும்தீனி எடுத்துக் கடிக்க முடியவில்லைபற்கள் சிதைந்துவிட்டன.கன்றுக்குச் சரியான ஆகாரம் போய்ச் சேரவில்லைஎலும்பும் தோலுமாகக் கன்றை  ஈன்றுவிட்டு அதற்குப் பால் கொடுக்கக் கூட எழுந்து நிற்கவில்லை.சுடுதண்ணி வைத்துக் கழுவிவிட்டார் அம்மாகம்பை வேக வைத்துத் தின்னக் கொடுத்தார்அருகில் உட்கார்ந்து கொண்டு கையில் எடுத்து எடுத்து ஊட்டினார். ‘எங்காலம் முடியங்காட்டி அனாதயா உட்டுட்டுப் போயராத’ என்று அழுதார்.
ஒருவழியாக எழுந்து பால் கொடுப்பதற்குள் கன்று பசியால் நுரைதள்ளிவிட்டது.ஆனால் எருமை அடுத்த நான்கு மாதத்தில் சினைக்குக் கத்த ஆரம்பித்தது. ‘கெழடாகியும் இன்னம் ஒடம்பு கேக்குதா உனக்கு’ என்று கோபத்தோடு திட்டியதோடு இனிமேல் அது சினையாக வேண்டாம் என்று அம்மா முடிவு செய்துவிட்டார்.  கிடா சேர்த்தக் கொண்டு போகவில்லைஅது இரண்டு மூன்று நாள் கத்திக்கத்தி ஓய்ந்ததுஆறேழு மாதத்திற்குப் பின் மீண்டும் கத்தியது.அப்போது பாலும் குறைந்ததுஅதை என்ன செய்வதென்று அம்மாவுக்குப் புரியவில்லை.  ‘வித்தர்லாம்’ என்று அப்பன் சொன்ன  அன்றைக்கே அம்மா அழத் தொடங்கினார்.
கிட்டத்தட்ட ஒருமாதம் இருவருக்கும் இதே பேச்சுத்தான்தினம் முன்னிரவில் சண்டை தொடங்கி அழுகைஅடி என்று ஓயும்.  ‘கெழட்டெருமயக் கட்டுத்தரயில வெச்சிக்கிட்டுப் பாவன பாக்க நம்மால முடியுமா’  என்றார் அப்பன்பால் குறைந்து போனதால் காலையில் மட்டும் பீச்சினார் அம்மாஒரு படிக்கு வரும்.பருத்திக்கொட்டைக் குழம்பு போலிருக்கும்.  படிக்குப் படி எனச் சரியாகத் தண்ணீர் சேர்ப்பார்அப்பவும் தண்ணீர் கலந்த மாதிரியே தெரியாது.
கடைசியில் ஒரு படி பாலோடு ஏவாரிக்கு விற்றுவிட்டார் அப்பன்சனிச் சந்தைக்குப் போன எருமை கறிவெட்டுக்குப் போயிற்றோ வத்தப்பால் பீய்ச்ச யாராவது வாங்கிப் போனார்களோ தெரியவில்லைஅது போன பின் கட்டுத்தரை வெறுமையாய்க் கிடந்ததுகட்டுத்தரைப் பூவரசின் அடியில் போய் உட்கார்ந்து எங்கேயோ வெறித்துப் பார்த்திருப்பார் அம்மாயாரிடமும் சரியான பேச்சில்லை.எதைக் கேட்டாலும் சட்டெனக் கண்ணீர் திரண்டு விடும்இரவுத் தூக்கத்தில் திடீர் திடீரென்று இப்படிக் கத்திக் கொண்டு எழுவார்அப்புறம் அவரைச் சமாதானப்படுத்த வெகுநேரம் ஆகும்.
நல்லா எங்காதுல கேட்டுது  நம்ம சீமாட்டித்தான் கனச்சா’ என்றார் அம்மா. ‘பேசாத படும்மாஎல்லாங் காத்தால பாத்துக்கலாம்’ என்று பெரியவன் அவளைப் பிடித்துச் சாய்த்துக் கட்டிலில் படுக்க வைத்தான்.  ‘இல்லடா எனக்கு நல்லாக் கேட்டுது’ என்று முனகினார் அம்மாஎல்லாருக்கும் தூக்கம் வந்து கண்ணைச் செருகிய நேரத்தில் திரும்பவும் அம்மா கத்திக்கொண்டு எழுந்தார்.  ‘அவதான் .எனக்கு நல்லாக் கேட்டுதுஅவளேதான்’ என்று பிதற்றினார்.
பெரியவனும் சின்னவனும் பிடிக்கப் பிடிக்கக் கையை உதறிக்கொண்டு கட்டுத்தரையை நோக்கி ஓடினார். ‘எருமப் பைத்தியம் புடிச்சே இவளக் கொண்டோயிருமாட்டம்’ என்று சலித்து மறுபடி பீடியைப் பற்ற வைத்தார்.அம்மாவின் பின்னாலேயே இருவரும் ஓடினார்கள்கட்டுத்தரைப் பூவரசின் அடியில் எருமை படுத்து அசை போட்டுக் கொண்டிருந்ததுமுன்று பேருமே அப்படியே நின்றுவிட்டார்கள்.  ‘அவதான்டா வந்துட்டாஎன்னயத் தனியா உட்டுட்டுப் போவமாட்டா’ என்றார் அம்மா மகிழ்ச்சிக் குரலில்.
அவர்களைப் பார்த்துச் சற்றே ஓங்கிய குரலில் கனைத்தது அதுகண்களை நன்றாகத் தேய்த்து விட்டுக்கொண்டு பார்த்தபோதும் எருமை தெரிந்ததுஅம்மா ஓடிப்போய் அதன் கழுத்தைக் கட்டிக் கொண்டார்அம்மாவை நக்கிக் கொடுத்தது.அப்பனும் வந்துவிட்டார்எல்லாருக்கும் ஆச்சரியம்அம்மா தீனியை அள்ளிக் கொண்டு வந்து போட்டார்அதைச் சீண்டவில்லைவரும் வழியில் எங்கேயோ மேய்ந்து வயிற்றை நிரப்பிக்கொண்டிருந்ததுசுகமாக அசை போட்டபடியே எல்லாரையும் பார்த்துக் கனைத்ததுதனக்குரிய இடத்தை வந்தடைந்து விட்ட நிம்மதி அதன் கனைப்பில் தெரிந்தது.  
பூவரசு மர நிழல் இருளில் அதன் கண்கள் மினுங்கினஅவர்களின் சத்தம் கேட்டுக் கொஞ்சம் தூரக் காடுகளில் குடியிருந்த ஆட்கள் எல்லாம் வந்துவிட்டனர்பல கன்றுகள் ஈன்ற எருமை எங்கோ விற்கப்பட்டு வீடு தேடி வந்துவிட்டது சாதாரண விசயமாக இல்லையார் வாங்கிப் போயிருப்பார்கள்,எவ்வளவு தூரத்திலிருந்து தடம் கண்டுபிடித்து வந்திருக்கும்  எனப் பேசிக் கொண்டார்கள்.
கன்றுக்குட்டியாக இருந்தபோது இந்த ஊருக்கு வந்த எருமை ஊர் எல்லையைத் தாண்டிப் போன சந்தர்ப்பங்கள் குறைவுபக்கத்து ஊர்க் கரடுகளுக்கு மேய்ச்சலுக்குப் போய்த் திரும்பியிருக்கிறதுகிடா சேர்த்துவதற்காக இரண்டு ஊர்கள் தாண்டியிருக்கிற மணியாரர் வீடுவரை சில தடவையும் நகரத்துக் கால்நடை மருத்துவமனை வரை ஓரிரு முறையும் போனதுண்டுகட்டுத்தரையும் மேட்டுக்காடுமே அது சுற்றிச் சுழன்ற இடங்கள்.
மணியனூர் சனிச்சந்தை பத்துக் கல் தொலைவுஅவ்வளவு தூரம் டெம்போ வைத்துத்தான் ஏவாரி ஏற்றிப் போனார்சந்தையிலிருந்து வாங்கி வந்தவர்கள் பக்கத்து ஊர்க்காரர்களாக இருப்பார்களோவாங்கிப் போனவர்கள் கயிற்றைக்கூட மாற்றவில்லைதிருகாணி கோத்திருந்தார்கள்கயிறு அறுபடவில்லைஇழுப்பில் அவிழ்த்துக் கொண்டிருக்கலாம்இழுத்து அவிழ்க்க எருமைக்கு வலுவில்லைசரியாக முடிச்சிட்டுக் கட்டியிருக்க மாட்டார்கள்.
ஒருவாரத்தில் வயிறு ஒட்டிப் போயிருந்ததுமுகச் சோர்வு நிலவொளியில் தென்பட்டதுவண்டிசந்தைபுதுக்கட்டுத்தரை என்று அலைந்தாலும் ஒருவழியாய் வந்து சேர்ந்துவிட்ட ஆசுவாசத்தை அது உணர்வதை அசை போடல் காட்டியதுபோன செல்வமெல்லாம் ஒருசேரத் திரும்பிவிட்ட மாதிரி அம்மா உணர்ந்தார்.  ‘வாங்குனவங்க தேடிக்கிட்டு வருவாங்க’ என்று யாரோ சொன்னார்கள்அதைக் கேட்டதும் அம்மாவின் முகம் வாடிப் போயிற்றுஅப்படி யாரும் வரக்கூடாது என்று நினைத்தாள்.
அடுத்த பத்து நாள் வரை ஒருவரும் வரவில்லைவரத்தட்டுக்களைக் கடிக்க முடியாது என்று சோகைகளை மட்டும்  இனுங்கிச் சேர்த்து எருமைக்குத் தின்னக் கொடுத்தார் அம்மாபக்கத்தில் உட்கார்ந்து கொண்டு குழந்தைக்கு ஊட்டுவது போல எடுத்து எடுத்து வாயில் வைத்தார்பெரியவனை விரட்டி எங்கெங்கோ அலைந்து தினமும் சிறுகூடை நிறையப் பச்சைப் புல் வெட்டி வரச் செய்தார்.பச்சையைப் பால் மணக்கக் கொரித்துத் தின்றதுகொஞ்சம் தேறிய மாதிரி தெரிந்ததுஅரைப்படி அளவாகக் குறைந்திருந்த பால் பழையபடி திரும்பியது.வீடு முழுக்கப் பழைய வாசனை வந்து சேர்ந்திருந்தது.
எருமையைத் தேடி இனி யாரும் வரப் போவதில்லை என்று நினைத்திருந்தபோது அந்தப் பதினோராவது நாள் எங்கிருந்தோ ஏழெட்டு பேர் சேர்ந்து வந்து கட்டுத்தரையில் நின்றுகொண்டார்கள். ‘சந்தயில வாங்கியாந்து கட்டுத்தரயில கட்டியிருந்த எருமய ராத்திரியோட ராத்திரியா களவாடிக்கிட்டு வந்துட்டா உட்ருவாமாஞாயத்தக் கேக்க எங்களுக்கும் நாலு பேரு இல்லாதயா போயிருவாங்கதிருட்டுப் பொழப்புக்கு நாண்டுகிட்டுச் சாவலாம்கொழந்தப் பாலுக்கு வேணுமின்னு வத்தக் கறவயாப் பாத்து இந்தக் கெழட்டெருமய வாங்கியாந்தம்இதப் போயித் திருடிக்கிட்டு வந்திருக்கறாங்களே.’
யாரையும் அவர்கள் பேசவே விடவிலைமுந்தானையை வாயில் பொத்திக்கொண்டு அம்மா அழுதுகொண்டிருந்தார்எருமை எதையும் உணராமல் எல்லாரையும் உற்றுப் பார்த்தபடி நின்றதுஅதனருகே போய்ப் பாதுகாவல் போலச் சின்னவன் நின்றுகொண்டான்அவனை மீறி யாரும் எருமைக்குப் பக்கத்தில் போய்விட முடியாதாம்பெரியவன் நகம் கடித்தபடி நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான்அப்பன் அப்போது இல்லை.
எருமைத் திருட்டுப் போய்விட்டது என்று முடிவு செய்து பத்து நாட்களாகவே ஆளாளுக்குச் சுற்று வட்டார ஊர்களுக்கு எல்லாம்  போய் நோட்டம் பார்த்திருக்கிறார்கள்கள் குடிக்க வருபவர் போல ஒருவர் இந்தப் பக்கமும் வந்து கட்டுத்தரையில் எருமை நிற்பதைப் பார்த்துவிட்டார்தனியாள் கேட்டால் தட்டி அனுப்பிவிடுவார்கள் என்று உடனே ஊருக்குப் போய் ஆட்களைக் கூட்டி வந்திருக்கிறார்கிடா மீசையோடு வெள்ளையும் சொள்ளையுமாய் இருந்த ஒருவர் எவரையும் பேசவிடாமல் அவரே பேசிக் கொண்டிருந்தார்பெரும் களவைக் கண்டுபிடித்துவிட்ட சாகசமும் செய்தவர்களைத் தண்டிக்கும் உரிமை தனக்கு இருக்கும் திமிருமாக அவர் பேசினார்.
கண்களைத் துடைத்துக்கொண்ட அம்மா பெரியவனை அருகழைத்து ‘உங்கொப்பன் எங்காச்சும் காட்டுல கள்ளுக் குடிச்சுப்புட்டு உருண்டு கெடப்பான்.எழுப்பிக் கூட்டியா’ என்று அனுப்பினார்அதற்குள் பக்கத்துக் காடுகளில் இருந்தெல்லாம் ஆட்கள் வந்து குழுமி விட்டார்கள்.
என்ன ஒரு தெதிரியம் இருந்தா ஊட்டுக்கிட்டக் கட்டியிருந்த எருமய உள்ள வந்து அவுத்துக்கிட்டு வந்திருப்பாங்கஎருமைக்கு முன்னால நிக்கறானே இந்தச் சின்னப்பயன். . . இவன் மூஞ்சிய பாத்தாலே திருட்டுக்கள தெரியுது’ என்றார் அவர்.
ராமக்காப் பாட்டிதான் குரலெடுத்துப் பேசினார்.  
அட சும்மா தொறக்காதஆரு ஊட்டுக்கு வந்து என்ன பேச்சுப் பேசறகன்னுப் போட்டதுல இருந்து இந்தக் கட்டுத்தரயில இருக்கற எரும இதுஊருக்கே தெரியும்என்னமோ அளக்கறஉன்னெருமைங்கறதுக்கு என்ன அடையாளம்?சொல்லு பாப்பம்’ என்று பாட்டி எகிறயதும்தான் வழிக்கு வந்தார்கள்.
சனிச் சந்தையில் ஏவாரியிடத்தில் அவர்கள் வாங்கிய விவரம் தெரிந்தது.பழையபாளையத்துக்காரர்கள்ஏழெட்டுக் கல் தொலைவுசந்தையில் வாங்கிய எருமையை இந்த வழியாகத்தான் கொண்டு போயிருக்கிறார்கள்எருமை தடம் பார்த்துக் கொண்டதுஎருமை தானாகவே வந்து சேர்ந்துவிட்டது என்பதை அவர்கள் நம்பவில்லைஊரே சொல்லும்போது மறுக்கவும் முடியவில்லை.  
செரி. . . எருமய அவுத்துக் குடுக்கச் சொல்லுங்கஇன்னமே அவுத்துக்கிட்டு வராத பாத்துக்கறம்’ என்று அவர் இறங்கி வழிக்கு வந்தார்சின்னவன் எருமையை நெருங்கி அதனோடு ஒட்டி நின்றுகொண்டான். கண்ணீரை முந்தானையில் துடைத்துக்கொண்டு அம்மா எழுந்தார். எல்லாரையும் பொதுவாகப் பார்த்துச் சத்தமாகப் பேசினார்.
வித்த எரும எங்கட்டுத்தரயத் தேடித் தானாவே வந்திருச்சுநான் வளத்த சீமாட்டி அவஎன்னய உட்டுப் போவ மாட்டீங்கறாதேடி வந்து கட்டுத்தரயில நின்னவள வெரட்டி உடமாட்டன்வாங்குன பணத்தத் திருப்பிக் குடுத்தர்றன்.வாங்கிக்கிட்டுப் போவச் சொல்லுங்கஎருமதான் வேணுமின்னா எஞ்சவத்து மேல ஏறிப் போயிப் புடிச்சுக்கிட்டுப் போவட்டும்.’
பேச்சற்று எல்லாரும் அம்மாவையே பார்த்தார்கள்.