Friday, September 9, 2011

அமராவதி ஆற்றில் அரிய பொற்காசு

ஈரோடு கொங்கு நாணய ஆய்வு மையத்தில் இயக்குனராக இருப்பவர் கே.ஏ.திருஞான சம்பந்தம். இவர் தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டு பல அரிய நாணயங்களை கண்டுபிடித்து உள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளாக இந்த நாணய ஆய்வில் ஈடுபட்டு வரும் இவர் சுமார் 12 ஆயிரம் நாணயங்கள் சேர்த்து வைத்து இருக்கிறார்.

இவர் சமீபத்தில் கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றங்கரையில் குழுவினருடன் ஆய்வு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஒரு தங்கக்காசு அவருக்கு கிடைத்தது. 13 கிராம் எடையுள்ள அந்த தங்கக்காசு, சங்க காலமான கி.மு.3-ம் நூற்றாண்டுக்கும், கி.பி.2-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்ததாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த தங்கக்காசில் ஒரு பக்கம் குதிரையின் உருவம் பொறிக்கப்பட்டு இருப்பதாகவும், தண்ணீரில் அடித்து வரப்பட்டதால், அந்த உருவம் சிதைந்து காணப்படுவதாகவும் கே.ஏ.திருஞானசம்பந்தம் கூறினார்.

இதுபோல் அமராவதி ஆற்றங்கரையில் இருந்து ராஜராஜன் காலத்து செம்பு நாணயம் ஒன்றையும் ஆய்வாளர் கண்டுபிடித்து உள்ளார்.

இந்த நாணயம் 11/2 கிராம் எடை உள்ளது. இந்த நாணயத்தில் ஒருபக்கம் நாகரீக எழுத்தில் ராஜராஜ என்று பொறிக்கப்பட்டு உள்ளது.

எனவே இது கி.பி.11-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

நாணயத்தின் இன்னொரு பக்கம் வீரன் ஒருவர் புலியுடன் போரிடும் காட்சி பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த காட்சி தமிழ்நாட்டில் உள்ள பல நடு கற்களில் காணப்படும் காட்சியாகும். ஆனால், ஒரு நாணயத்தில் இது இருப்பது இதுவரை வேறு எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆய்வாளர் திருஞானசம்பந்தம் கூறினார்.

மேலும், திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 5 கிராம் எடையுள்ள ஈய காசு சதுர வடிவில் உள்ளது. இது பிரெஞ்சு நாட்டினர் வெளியிட்டதாகும். காரணம் இந்த காசில் பிரெஞ்சு நாணயங்களில் காணப்படும் 5 பூக்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.

மதுரை வைகை ஆற்றில் 13 கிராம் எடையுள்ள எலக்ட்டிம்(தங்கம்-வெள்ளி கலவை) நாணயம் கண்டெடுக்கப்பட்டது. இந்த நாணயத்தில் மீன் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது. எனவே இது பாண்டியர் காலத்து நாணயமாக இருக்கும் என்று நாணய ஆய்வாளர் கே.ஏ.திருஞானசம்பந்தம் கூறினார்

No comments:

Post a Comment