Thursday, January 12, 2012

சிலை - கவிதை - பத்மநாபபுரம் அரவிந்தன்



08-01-2012 திண்ணை இணைய இதழில் வெளியான எனது கவிதை..... 


சிலை
பத்மநாபபுரம் அரவிந்தன்


அக் கிராமத்தின் சிற்றோடைக்
கரையோரம் கால் முட்டிப் பாகம்வரை
செஞ்சேற்றினுள் அமிழ்ந்து.. தேகமெங்கும்
சகதித் தீற்றுடன் மல்லாக்கக் கிடந்தது அச்சிலை...


கண்களிலும் உதட்டிலும் புன்னகைப் பூவிரிக்க 
கச்சை கட்டிய கூர் முலையும்வடிவேயான 
இடையுடனும் .. யாரையோ எதிர் நோக்கும் 
 பாவனையில் ... இடக்கை  நாடி தாங்க 
வலக்கை இடையில் வைத்து காத்திருக்கும் அச்சிலையின் 
கை விரல்கள் சிலவற்றை காணவில்லை..காலச் சுழற்சியில் 
உடைந்தவை உதிர்ந்திருக்கலாம்....


அற்புதமான அச்சிலை எக்காலம் செய்ததென்றோ
எப்படியங்கு வந்ததென்றோ யாருக்கும் தெரியவில்லை...
வயதான ஒருவர் சொன்னார் ... 
தன் சிறு பிராயத்தில்
கரையோரம் நின்றிருந்து.. காலப் போக்கிலது  
 நிற்க முடியாமல்ப் படுத்ததென்று...
யாரோ துப்பிய வெற்றிலை எச்சில் 
உறை ரத்தம் போல்  தலைக் கிரீடத்தில்...


சிதைந்துக் கொண்டிருப்பது    
வெறுமொரு கற்சிலயல்ல...
சிந்தையுள் காதலுடன் ..
யாரையோ நினைவிலேற்றி 
மனமுழுக்க வடிவமைத்து 
விரல்கள் வழி மனமிறக்கி 
உளிகளில் உயிர் கொடுத்து 
பலநாட்கள் பாடுபட்டுச்
செய்தெடுத்த ...
எக்காலமோ வாழ்ந்திருந்த ஓர்
அற்புத சிற்பியின் காதலுடன்
கூடிய கலையும்உழைப்பும் தான் ...




- பத்மநாபபுரம் அரவிந்தன்-