Sunday, December 26, 2010

“என்.எச்.47- தக்கலை” - ஜெயமோகன்

நாகர்கோயிலில் இருந்து தக்கலை வரும் பாதை மிக ரம்மியமானது , பலவகை ஏரிகள், குளங்கள், சிற்றோடைகள், தாமரை தடாகங்கள், ஊற்று நீர்ச் சுனைகள், பரந்த வயல் வெளிகள், மேகம் போர்த்திய வேளிமலை, சில்லென்ற காற்று என்று மனதை ஒவ்வொரு முறை போகும் போதும் அடுத்தமுறை எப்பொழுது பார்க்கலாம்  என்ற ஏக்கத்தைத் தரும் ...                       


- பத்மநாபபுரம் அரவிந்தன் -   

 

 

 

என்.எச்.47- தக்கலை -  ஜெயமோகன் -

தேசிய நெடுஞ்சாலை தக்கலையை நெருங்கும்போது இன்னும் பசுமை கொள்கிறது. விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைபப்டங்களைப் பார்க்கும்போது ஆரல்வாய்மொழியை ஒட்டிச் செல்லும் மேற்குமலைகளின் சுவருக்கு அப்பால் தமிழ்நாடு இளம் தவிட்டு நிறத்திலும் இப்பால் குமரிமாவட்டம் அடர்பச்சை நிறத்திலும் துல்லியமாக பிரிக்கபப்ட்டிருப்பதைக் கண்டு வியப்பு ஏற்படுகிறது. அதை ஒவ்வொரு குமரிமாவட்டத்தினரும் உணர்ந்திருப்பார்கள். தமிழ்நாட்டில் இருந்து ஆரல்வாய்மொழிக் கணவாயை நெருங்கும்போதே ஈரம் நிறைந்த குளிர்ந்த காற்று வந்து முகத்திலறைவதை உணர முடியும்.
ஆனால் குமரிமாவட்டத்தினருக்கு இந்த மாவட்டத்துக்குள்ளேயே ஒ எல்லைப்பிரிவினை உண்டு. தோட்டிகோடு -சுங்கான்கடையில் ஒரு மலைக்கணவாய் வருகிறது. அதற்கு தெற்கே உள்ள விளவங்கோடு கல்குளம் பகுதிகளில் பெய்யும் மழையில் முக்கால்பங்குதான் இப்பால் உள்ள தோவாளை அகஸ்திஈஸ்வரம் பகுதிகளில் பெய்யும். வெயிலில் வந்து தோட்டிகொட்டை தாண்டும்போது சாரலுக்குள் நுழையும் அனுபவம் அடிக்கடி நிகழும். சிலசமயம் மழையின் அந்த எல்லைக்கோட்டையே கண்ணால் காண முடியும்.
வேளிமலை ஒரு கிண்ணம்போல தென்மேற்கு பருவக்காற்றை தடுத்து நீரை நிறைக்கிறது இப்பகுதியில். வேளிமலையின் கீழே எப்போதும் பசுமை கொப்பளிக்கும் வயல்வெளிகளை பார்ப்பது கண் நிறையும் அனுபவம். கண் ஆத்மாவின் வாசல்.
தக்கலை அருகே ஒரு நீர்நிலை


சாலையோர இயக்கி

ஆயிரப்பறை கண்டம். தக்கலை. மகாராஜாவால் அளிக்கபப்ட்ட வயல் ஒரு ப்றை என்பது நூறு மரக்கால்

மகாராஜா காலத்து வாய்க்கால். தக்கலை. இப்போது ஆறுபோல ஆகிவிட்டது. தெக்கே புதுக்கால் என்று பெயர்


குளங்கள். மலைநீரை சேமிக்க மலையைச்சுற்றி குளங்கள் வெட்டுவது அக்கால மன்னர்கள் வழக்கம். தூர்த்து பிளாட் போடுவது ஜனநாயகம்
 புலியூர்குறிச்சி அருகே பிரியும் கிராமச்சாலை


பத்மநாபபுரம் தாண்டிச்சென்று முடிகிறது வேளிமலை. ஒரு காட்சி

வேளிர்மலை முருகன் கோயில் அல்லது குமாரகோயில் செல்லும் பாதை

தோட்டிகொடு அருகே மலை. வேளிமலையின் குழந்தைகளில் ஒன்று

 வேளிமலையும் அதன் ஊற்றுநீர் பெருகும் ஒரு குளமும்

மூலம்திருநாள் சத்திரம். மகாராஜா மூலம் திருநாள் தன் ராமேச்வர யாத்திரையின் நிறைவாக குளங்களையும் சத்திரங்களையும் வழியோரமாகக் கட்டினார். நாகர்கோயில் தக்கலை வழியோரமாக மூன்று சத்திரங்கள் உள்லன. ஒன்று கோயிலாக. மீதி இரண்டும் தனியார் நிலங்களில். இடிந்த நிலையில்

வரலாற்று சிறப்பு மிக்க உதயகிரி கோட்டைக்குச் செல்லும் வழி.

கடந்த சில வருடங்களாக போக்குவரத்து பெருகி இச்சாலையில் ஒருகணம்கூட வாகன ஓட்டம் நிலைப்பதில்லை


புகைப்படங்கள் ஜெ.சைதன்யா

கணியாகுளம்-ஆலம்பாறை: என் மாலைநடை வழி -ஜெயமோகன்

என்ன அழகான இயற்கையின் வனப்பு? எங்குபோய்த் தேடுவேன் சென்னையில்? - பத்மநாபபுரம் அரவிந்தன் -

 

 

கணியாகுளம்-ஆலம்பாறை:என் மாலைநடை வழி

 பேச்சிப்பாறை வாய்க்கால் பார்வதிபுரம் வழியாகச்செல்கிறது. அதன் கீழ்க்கரையில் இருந்த வயல்வெளியில் உருவானது நான் குடியிருக்கும் சாரதா நகர். வாய்க்காலின் கரையிலேயே செல்கிறது கணியாகுளம் வரைச்செல்லும் தார்ச்சாலை.நான் குடிவரும்போது அது ஒரு சிறு மண்சாலையாகவே இருந்தது. இப்போது பாறையடிமலையடிவாரத்தில் மூன்று எஞ்சீனியரிங் கல்லூரிகளும் இரண்டு கல்குவாரிகளும் வந்துவிட்டன. அவர்களின் உடைப்புவேலை காரணமாக போக்குவரத்து அதிகமாகி தார்ச்சாலை போட்டுவிட்டார்கள். நான் எட்டுவருடம் முன்பு கண்ட சாலையோரக்காட்சிகள் இப்போது இல்லை என்றாலும் அழகான ஒரு நடைபயன வழியாகவே உள்ளது இந்தச்சாலை.
திருவனந்புரம் ரயில்பாதை சாலையை  முறித்துச் செல்கிறது. கீழே கால்வாயில் நீரோடை.


பொதுவாகவே நாகர்கோயில் திருவனந்தபுரம் ரயில்சாலை அழகானது. பெரும்பாலும் இருபக்கமும் பசுமையான வயல்கள் வரும். நான்கு ஆறுகள் ஏராளமான ஓடைகள் முறித்துச்செல்லும்.

இது ஆடிமாதம். ஆவணி பிறப்பதுவரை குமரிமாவட்டத்தில் வானம் மேகம்மூடித்தான் இருக்கும். அதிகாலையின் வெலிச்சமும் குளிரும் பகல் முழுக்க உண்டு. ஆனியாடிச் சாரல் என்று இதைச் சொல்வார்கள். குமரிமாவட்டத்தில் இருந்து ரப்பர் போன்ற சில பயிர்களை நெல்லைபக்கமாகக் கொண்டு சென்று நடுகிறார்கள் என்று சொல்லப்பட்டபோது பாலராமவர்மா மகாராஜா ‘எதைக் கொண்டுபோனாலும் அனந்தபத்மநாபனையும் ஆடிச்சாரலையும் கொண்டுபோக முடியாதே’ என்று சொன்னதாக அய்யப்பண்ணன் டீக்கடையில் அமர்ந்து ஒருமுறை சொன்னார். ஆடிமாதம் நடை போவதற்கு ஏற்ற காலம்.  10-8-2008 ,காலை பதினொரு மணிக்கு நானும் அஜிதனும் ஆஸ்தான புகைபப்டக்காரர் சைதன்யா தொடர சென்றோம். புகைப்படத்துக்கு வெளிச்சம் இல்லை என்று சிணுங்கல் பின்பக்கம் ஒலித்துகொண்டே இருந்தது

இருபக்கமும் விரிந்த வயல்களுக்கு ஆயிரம் வருட வரலாறுண்டு. நாஞ்சிநாட்டு ஏலா என்று சொல்லபப்டும் இவ்வயல்வெளி சோழர்காலத்திலேயே உருவாக்கபப்ட்டது.
 
சோழர்கால ஏரி ஒன்று இங்கே இப்போது சதுப்புவெளியாக கிடக்கிறது

வேளிமலையின் தொடக்கம் கணியாகுளம்,பாறையடிதாண்டி கடுக்கரையில் இருந்து. அதற்கு அப்பால் தாடகைமலை தொடங்குகிறது. சாலை திரும்பியதுமே பச்சைவயல்களுக்கு அப்பால் வேளிமலையில் முகம் தென்படுகிறது. மடிப்புகளில் பசுமை பரவி இறங்கியிருக்கும். எப்போதுமே மழைமேகம் சூடியிருக்கும் மலையின் சிரம்

 சாலையின் அருகே தூரத்தில் சவேரியார் கல்லூரி குன்று பச்சை வயல்களுக்கு அப்பால்


வேளிமலையின் முகம் .
 
வேளிமலை தாய்மிருகம் குழந்தையை முகர்வதுபோல சவேரியார்கல்லூரி குன்றை நோக்கி நீன்டிருக்கிறது
 
நடைமுழுக்க வேளிமலையை நோக்கியபடித்தான்

சாலையோர அரசமரம். இப்பகுதி முன்பு அரசமரங்கள் அடர்ந்ததாக இருந்திருக்கிறது. இப்போதும் அரசமரங்கள் சில உள்ளன.



 இலந்தையடி முக்கு திரும்பினால் ஒரே காட்சியாக வேளிமலை விரிகிறது.வேளிமலைக்கு எப்போதுமே ஒரு நீலமூட்டம் உண்டு. மேகம் காரணமாக ஒருபோதும் அது தெளிந்திரு இருப்பதில்லை. மேமாதம் ஒருவிதமான மஞ்சள்நிற தெளிவு உண்டு


தெற்குகுளம் போகும் சாலை


மழை கனத்த மேகம். குளிர் நிறைந்த காற்று. ஆடிச்சாரல்…
புகைப்படங்கள்:ஜெ.சைதன்யா

Google Buzz

கணியாகுளம்,பாறையடி…

'நாங்கள் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கும் காலத்தில்.... இந்த கணியா குளம் தாண்டி பாறையடி வந்து, அங்கிருந்து வலப்பக்கம் போகும் சாலையில் ஒரு வீட்டில் சில பனை மரங்கள் சுற்றி நிற்கும்.  நல்ல 'கள்' அங்கே கிடைக்கும், வாடகைக்கு சைக்கிள் எடுத்துக் கொண்டு  வந்து இரண்டு மூன்று சொம்பு 'கள்' குடித்து விட்டு இந்தக் கால்வாயின் அருகில் அமர்ந்து மலையை ரசித்தபடி பல கதைகள் பேசி இருப்போம்... உண்மையில் நாங்கள் கலூரியில் படித்ததை விட இங்கு அமர்ந்துப் பேசி கற்றுக் கொண்டது அதிகம்.. இன்னமும் அந்த பார்வதிபுரம்.. இறச்ச குளம்  வழிப் பாதையும், அற்புதமான வயல் வெளிகளும்.. மலையும் ..சில்லென்ற காற்றும் மனதை வருடுகிறது. கள்ளின் மணமும், அங்கே கிடைக்கும் வறுத்த சாளை மீன் மணமும் இன்னமும் மனதை விட்டு அகலாமல் நிற்கிறது..  '                                                    

 -   பத்மநாபபுரம் அரவிந்தன் - 

 

 

 ஜெயமோகன் தான் ரசித்த இந்த இடத்தைப் பற்றி கூறுகிறார் .. அழகிய புகைப் படங்களுடன்..  

கணியாகுளம்,பாறையடி… ஜெயமோகன்

கணியா குளம் கிராமம் பார்வதிபுரத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம். வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் இது. நாயக்கர்காலத்திலேயே இந்தக் கிராமம் உருவாகிவிட்டது. பல போர்களைக் கண்ட கிராமம் இது. எல்லா கேரள வரலாற்றிலும் இந்த இடம் உண்டு. நாகர்கோவிலில் இருந்து ஆளூர் வழி பத்மநாபபுரம் செல்லும் சாலை இந்த கிராமம் வழியாக சென்றது. பார்வதிபுரம் வழியாகச் செல்லும் இப்போதைய நெடுஞ்சாலை திவான் மாதவராயர் நூறு வருடம் முன்பு அமைத்தது. அத்துடன் கணியாகுளம் கைவிடப்பட்டு சிற்றூராக ஆகியது. கணியாகுகளம் போரில்தான் திருவிதாங்கூரின் வீரநாயகனாக கதைப்பாடல்களில் வாழ்த்தப்படும் இரவிக்குட்டிப்பிள்ளை  திருமலைநாயக்கர் படைகளுடன் போரிட்டு உயிர்துறந்தார். அவரது நினைவுக்கல் சற்று அப்பால் வயலுக்குள் உள்ளது
கணியகுளம் ‘ஜங்ஷன்’


செல்லும் வழியெங்கும் கூடவே வருகிறது கால்வாய். நீரின் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது, உற்சாகமான சிறுமிகளின் சிரிப்பு போல

கணியாகுளம் ஊர்
 
 எருமைகள் இந்தப்பகுதியின் தட்பவெப்பநிலைக்கு ஏற்ற உயிர்கள்.சேற்றில் விவசாயம்செய்ய இன்றியமையாதவை. நாஞ்சில்நாட்டு சிலுசிலு மழையை பாண்டியநாட்டுக்காரர்கள் ‘எருமைமழை’ என்பார்கள். நாஞ்சில்நாட்டுக்காரர்கள் எருமைபோல மழையை பொருட்படுத்தாமல் செல்வார்கள் என்று பொருள்


 கணியாகுளம் ஏரி. நாயக்கர்கல் வெட்டியது. இப்போது நீர் நிரப்பப்படுவதில்லை. காரணம் சுற்றிலும் பல மாளிகைகள் வந்துவிட்டன. நீர் நிரம்பினால் பங்களாக்காரர்கள் ஆள் வைத்து தோண்டிவிட்டுவிடுவார்கள். விவசாயிகள் வந்து ரத்தக் சிவந்த கண்களுடன் சண்டை போடுவார்கள். ஆனால் பெரியாட்களிடம் மோத முடியுமா என்ன?


குளிர்ந்த காற்று அடர்ந்து வீசுவது கணியாகுளம் சாலையின் சிறப்பியல்பு. ஆடியில் கார்று சமயங்களில் பிடித்து தள்ளிவிடும்.ஆனால் தூசு அனேகமாக இருககது. நீர்த்துளிகள்தான். பொதுவாக வேறு பகுதிக்காரர்களுக்கு சளி பிடிக்கும்


 பாறையடி பாலம். கால்வாய்.பாலம் மீது அமர்ந்தாலே வேதசகாயகுமாருக்கு கால்டுவெல் நினைவுவந்து பேச ஆரம்பித்துவிடுவார்

வேளிமலைச்சிகரம். மேகத்தால் மெல்ல தழுவப்படும்போது மலைகளில் நிறையும் அமைதி….

தூண்பாறை. பாறையடிக்கு அப்பால் செங்குத்தாக நிற்கும் இந்த சிகரத்துக்குமேல் ஒரு சிறுகாடும் உண்டு




 
திரும்பும் வழியில்அவ்வழியாகச் சென்ற  பிளெஸியும் அவள் தம்பியும் அதீத வெட்கத்துடன் ”அக்கா ஒரு போட்டோ எடுப்பியளா?”என்று சைதன்யாவிடம் கேட்டார்கள். தந்தை கொத்தனார் வேலை செய்கிறார். பிளெஸி நான்காம் வகுப்பு தம்பி ஒன்றாம் வகுப்பு. ஆங்கில மீடியம் தனியார் பள்ளிதான்.