Sunday, December 19, 2010

மருதநாயகம் பிள்ளை புலி சுட்டக் கதை - பத்மநாபபுரம் அரவிந்தன் -

'ஊரில் இருந்த பொழுதுக் கேட்ட பல வாய் வழிக் கதைகளின் தாக்கம் என்னை   இக் கதையை எழுத வைத்தது. தங்களை வீரர்களென்று முன்னிலைப் படுத்த பல கோமாளித்தனங்களை பலரும் செய்துள்ளனர். வெள்ளைக் காரனை பகைத்துக் கொண்டால் தங்கள் சொத்து பறிபோய்விடும் என்ற பயமும், அந்தமான் சிறையில் அடைக்கப்படுவோம் என்ற கவலையும் இதில் வரும் கதா நாயகன்  மருதநாயகம் பிள்ளையைப் போல பலருக்கும் இருந்திருக்கிறது ... எனவே தங்களுக்கு முடியாத, விரும்பாத பல வேலைகளையும் அவர்கள் செய்யவேண்டியக் கட்டாயம்.. தாங்கள் வீரர்கள் என்று ஊர் முன்பு காட்டாவிட்டால், யாருமே தங்களை மதிக்க மாட்டார்கள் என்பதனால் பல நாடகங்களை இவர்கள் ஆட வேண்டியது வந்தது.. அதில் ஒன்று இது... இது தொடரும்.... '    


மருதநாயகம் பிள்ளை புலி சுட்டக்  கதை 

- பத்மநாபபுரம் அரவிந்தன்



மருதநாயகம் பிள்ளை புலி சுட்டக்  கதை 

- பத்மநாபபுரம் அரவிந்தன்
                                                                    - 1 -                                   
முதன் முறையாய் இரு வெள்ளைக் காரர்களை இவ்வளவு பக்கத்தில் பார்த்ததும் மருதநாயகம் பிள்ளை தன் நிறத்தை  நினைத்துக் கொண்டார். ' நிறத்துல என்ன எளவு இருக்கு? ... ராத்திரியானா இருட்டிலே அவுத்துப் போட்டா.. எல்லாம் ஒரு நெறம் தாலா ...எல்லா எளவும் கருப்புதா..',. வீட்டில் வெறும் கோமணம் மட்டுமேக் கட்டித் திரியும் அவருக்கு வெள்ளைக்காரர்கள் போட்டிருந்த உடைகள் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது ..’ எளவுடுத்தானுவ ... இவளவு துணிகள எப்படித்தாம் போட்டுகிட்டு அலையானுவளோ ... நமக்கு இங்க கோமணத்துக்கு மேல ஒரு முண்டக் கெட்டி, வேற வழியத்துப் போய் உடுப்பும் போட்டாலே வெசர்த்துக் கொட்டுகு.....’ என்று மனதுள் எண்ணிக் கொண்டார்.           


மருதநாயகம் பிள்ளைக்கு நேற்று காலை  இரணியல் கொட்டாரத்தில் இருந்து ஒருவன் தகவல் கொண்டு வந்தான், இன்று மாலை ராஜாவும் பிரிட்டிஷ் கோழிக்கோடு ரெஜிமென்ட் கமாண்டர் ரிங்கோ மற்றும் அவனது  மைத்துனன் ரூபனும் பத்மநாபபுரம் கொட்டாரதிற்கு  வருவதாகவும், அங்கிருந்து மறுநாள் அதிகாலை கிளம்பி கீரிப்பாறை வனப்பகுதியில் புலி வேட்டைக்குப்  போவதாகவும் சொன்னான். ராஜாவும், ரிங்கோவும், ரூபனும் வருவதிலோ ,புலி  வேட்டைக்குப் போவதிலோ மருதநாயகம் பிள்ளைக்கு எந்தக்  கவலையும் வரவில்லை.     ஆனால் தகவல் கொண்டு வந்தவன் சொன்ன கடைசிச் செய்தி, 'டிலனாய் கோட்டையில்
செய்த பீரங்கிஅவரது நெஞ்சில்  வெடித்தது போல இருந்தது. ‘ தம்புரான்  
 வேட்டைக்குப் போவாது..பதிலா தங்களும், தங்களுட கூட்டாளி கடுவா மூர்த்தியா பிள்ளையும் அவ்வளோட போவணும்.. தொணைக்கு பின்னயும் ஒரு ஆளை வச்சிகிடணும்... இது தம்புரானுக்க வாக்காக்கும்..." என்றான்.

வெறும் கோமணம் மட்டுமே கட்டிக்கொண்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த மருதநாயகம் பிள்ளைக்கு வியர்க்கத் துவங்கியது... கைத்துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டார்வெற்றிலையைப் புளிச்சென்று முற்றத்தில் துப்பினார் ..

" சரி.. சரி நாள பாக்கலாம் .. இன்னும் ஒரு நா தாலா கெடக்கு .. நா...... தம்புரானுக்கிட்ட பேசுகேன் ... நீ போ  இப்போ", என்று  தகவல் சொன்னவனை அனுப்பினார். அவரது வீட்டின் தலைமை வேலைக்காரன் மற்றும் அந்தரங்க உதவியாளன் கக்கோடனை அழைத்தார்," லே.. கக்கோடா ...ஒடனே போய் அந்த கடுவா மூர்த்தியா பிள்ளைய வரச்சொல்லு ... ராசாவுக்கு வேற வேல மயிரே கெடயாது ...புலி  வேட்டைக்குப் போவணும்னா அவரு கூடப் போவ வேண்டியது தாலா...... நம்ள யாம்டேய் கோத்து விடுகாரு? ", என்றார்

கக்கோடன் சொன்னான், " ஏமானே .. இது ஒரு நல்ல சந்தர்ப்பமில்லா... தொரமார கூட போயிற்று பேருக்கு அங்க இங்க சுட்டுப்பிட்டு... அவமாரு கொண்ணுப் போடுக புலிய ... ஏமான்தாங் கொண்ணதாயிற்று தூக்கி வந்துரலாம்லா ... இஞ்ச எவனுக்குத் தெரியப் போவு?... " என்றான்.  

" போலே ... மயிராண்டி .. சவத்துக்குப் பொறந்த பயலே ... போறது எங்க தெரியும்லா .... கீரிபாறைக்காக்கும் ... எளவு எம்புடு புலிவோ திரியுண்ணு தெரியுமாலே? ... தொரைமாருக்கு .. பயமும் இல்ல மயிரும் இல்ல... பொறக்கயிலேயே ... அவனுவள தண்ணி  தொளிச்சு  உட்டுருவாளுவ ....   நமக்கு எளவு புலிய.. கூட்டுக்குள்ள பாத்தாலே மூத்திரம் முட்டும்.....  இந்த லட்சணத்திலே காட்ல நேர்ல பாத்தா பேண்டாலும்  பேண்டுருவெண்டே ..", என்று சொல்லி சிரித்தார். இதை சொல்லும் போதும் தன் தடிமனான மீசையை நன்கு முறுக்கி மேல் நோக்கி வைத்துக் கொண்டார்.  மருதநாயகம் பிள்ளை தன்னைப் பற்றிய அனைத்து உண்மைகளையும்   சொல்வது கக்கோடன் மற்றும் கடுவா மூர்த்தியா பிள்ளை இருவரிடம் மட்டுமே.. அவர்கள் இல்லாமல் இவருக்கு எதுவும் செய்ய முடியாது என்பதாலும், இந்த இருவருக்கும் மருதநாயகம் பிள்ளையைப் பற்றி எல்லாம் தெரியும் என்பதாலும்.... இவரை பற்றிய பொய்யான பல வீரக் கதைகளை ஊரில் பரவ இவர்கள் விடுவதாலும் இவர்கள் இருவர் மேலும் மருதநாயகம் பிள்ளைக்கு ஒரு அக்கரையாருக்கும் அரையணா கொடுக்காத இவர் கக்கோடன் கேட்கும் முன்பே எல்லாம் கொடுப்பார்.

கக்கோடன் சொன்னான் "   ஏமானே.. நீரு சலம்பாதியும்...அவமாரு பாத்துக்கிடுவினும்... நம்ம சும்மா பேருக்கு ஒப்புக்கு சப்புப் போனா ,....வரும்போ.. நல்ல பேரு உண்டகும்லா ... சரி நான் போய் அங்கத்தைய  கூட்டிட்டு வரேன் ",என்று சொல்லி கக்கோடன் கிளம்பினான்.

" ஏய்.... நுள்ளியமே... ஏய் புள்ள ....", அடுக்களை இருந்த மேற்குப் பக்கம் பார்த்து தன் மனைவியை அழைத்தார் மருதநாயகம் பிள்ளை....  சத்தம் கேட்டதும்   நுள்ளியம்மை  அடுக்களையில் இருந்து வேகமாய் வெளியே வந்தாள். அவள் குள்ளமாக இருந்தாள்மருதநாயகம் பிள்ளையின் கீழிருந்து மூன்றாவது விலா எலும்பின் உயரத்துக்கு அவள் இருந்தாள்.  
வென்னிப் போடு.. நல்ல ஏளஞ் சூடில போடு ... நாங் கக்கோடனும், கடுவாவும் வந்ததும் எண்ணை தேச்சு குளிக்கப் போறேன் ",என்றார். மற்றொரு வேலைக்காரன் வேலப்பனை அழைத்து முக்காலியை எடுத்து மாமரத்து நிழலில்ப் போடச் சொல்லி அதில் போய் அமர்ந்தார். வேலப்பனிடம்   மேலே மாடிக்குச் சென்று ஆணியில் மாட்டி வைத்திருக்கும்  தன் வேட்டைத் துப்பாக்கியை எடுத்து வரச் சொன்னார்..... 


                                 - 2 -

வேலப்பன் அந்த கனத்த இரட்டைக்  குழல் துப்பாக்கியை பவ்யமாக எடுத்து வந்து மருதநாயகம் பிள்ளையின் கையில்க் கொடுத்தான்முக்காலியில் இருந்தபடியே அதை அவர் வாங்கினார், தன் மனதுள் நினைத்துக் கொண்டார், ' இந்த கருமத்த ஒரு தொரகிட்டே இருந்து பவிசுக்கா சுட்டி ஐநூறு ரூபா கொடுத்து வாங்கினேன்... எளவ ஒரு நாளாவது  சுட்டிருக்கேனா?...பேச்சிப்பாற காணிக் காரனுவ மறச்சு, ஒளிச்சு எடுத்துட்டு வந்து காசு வாங்கிட்டு தார மிளாத் தலையும் புலித் தோலும் ,காட்டெருமைத்  தலையும் , கொம்பும் நானே கொன்னு கொண்டு வந்ததாட்டு... பொண்டாட்டிய  வரைக்கும் நம்ப வெச்சுப் போட்டேன்.. வாங்கின பத்து உண்டைகளும் ( குண்டுகள்) பெட்டிகுள்ள அப்படியேக் கெடக்கு.. கக்கோடனுக்கு  மட்டும் உண்மை தெரியும் .. பய சொல்லமாட்டான் யாருக்கிட்டையும்...   நெறைய குடுத்திருக்கொம்லா...   மட்டுமில்லாமே பய செறு பிராயத்தேலேருந்தே நம்மாக் கூடத்தால திரியாங்...நம்பிக்கையான பய தாலா...' கக்கோடன் முதன் முறையாக மருதநாயகத்துக்கு அறிமுகமானதை அவர் யோசித்துப் பார்த்தார்......



அப்பொழுது மருதநாயகம் பிள்ளைக்கு பதினெட்டு வயது .. ஒத்த சரீரமாய் வளர்ந்திருந்தார். மீசை கறு கறு வென வளர ஆரம்பித்திருந்தது. இரவானால் அவருக்கு பயங்கரமாய் வறட்டு இருமல் இருந்தது. தொண்டை கமறிக் கமறி இருமல்.. தொண்டையில் ஈரமே இல்லாமல் வறண்டு , மூசுக் குழாய் காய்ந்து உறுத்தலுடன் விடாத இருமல்களாய் வெளிவரும். தூக்கமே இல்லாமல் இருமி,இருமி கண்கள் சிவந்துதேகம் சோர்ந்து எப்பொழுதும் சோகமாகவே இருந்தார்பகலில் குறையும் இருமல் இரவானதும் முழு வீச்சுடன் அவரை புரட்டி எடுக்க ஆரம்பிக்கும்

மருதநாயகம் பிள்ளையின் அப்பாமகாராஜாவின் விசுவாசமான கணக்கராகப் பணி புரிந்துக் கொண்டிருந்தார்அவருக்குத் தன் மகனின் இந்த தணியாத வறட்டு இருமல் பெரும் வருத்தத்தை தந்ததுபல வைத்தியர்களும் பல மருந்துகளைக் கொடுத்ததும் சற்றும் குறையவே இல்லைஓரிரு வைத்தியர்கள், " நெஞ்சில் கபம் ஒண்ணும் இல்ல பாத்துக்கிடும் ..... ஏமானே .. இது ஒடம்பு சுடுனாலே வாரதாகும்..சின்ன ஏமாங் வயசு தெகஞ்சு நிக்கேருல்லா ... அதாக்கும் இந்த செமைக்கக் காரணம்நல்ல தாறா முட்டைய அவிச்சி  தெவசவும் காலேலெ வெறுங் வயத்திலக் குடுக்கணும் .. நெல்லிக்கா அரச்சி தலேலெ வாரத்துக்கு ரெண்டு நாளு நல்லத் தப்பளம் போட்டு எளஞ் சூட்டு வென்னியிலேக் குளிக்கணும் பாத்துக்கிடுங்கோ", என்றனர் இவை எல்லாம் செய்தும் ஒரு பலனும் இல்லை
நாளுக்கு நாள்   மருதநாயகம் பிள்ளை  இளைத்துக் கொண்டிருந்தார்அவர்  கண்கள் எங்கோ குண்டுக்குள் கிடப்பான போல இருந்ததுகன்னங்கள் ஒட்டி .  மார்பு கூடிதோள் மற்றும் கழுத்து எலும்புகள் புடைத்து, விகாரமானத் தோற்றம் கொண்டிருந்தார்... ஒரு தேவாங்கின் சாயலுக்கு வந்து விட்டார். தன் இயலாமை அவருக்கு எல்லோர் மீதும் கடுமையான கோபத்தை உண்டாக்கியது..  இருமல் இல்லாத நேரங்களில் அவர் வேலைகாரர்களை காரணமே இல்லாமல் கெட்ட வார்த்தைகளில்  திட்டிக் கொண்டிருந்தார்திட்டி முடியும் முன் மீண்டும் இருமல் ஆரம்பித்து விடும்தூக்கம் இல்லாமல் பைத்தியக் காரன் போல சுற்றி வந்தார்இரவில் இருந்த இருமல் இப்பொழுது பகலிலும் தொடர ஆரம்பித்ததுமருதநாயகத்தின் அப்பா அவரை மயிலாடி வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்அதிகாலை நான்கு மணிக்கே வில் வண்டியில்ப் புறப்பட்டனர்வண்டியை மருதநாயம் பிள்ளையின் அப்பாவின் அந்தரங்க உதவியாளன் முத்துக் கறுப்பன் ஓட்டினான். காலையில் பதினொன்று மணிக்கெல்லாம் மைலாடி வந்து விட்டனர். மைலாடி வைத்தியருக்கு ஏற்கனவே தகவல் கொடுக்கப் பட்டிருந்தது. வில் வண்டி வரும் முன்பே அவர் வெளியே வந்து காத்துக் கொண்டிருந்தார். மைலாடி வைத்தியர் நல்ல கறுப்பு நிறம்குள்ளமாய் இருந்தார்அவரது உள்ளங் கைகள் தடித்துக் குட்டையானதாக இருந்தனஒரு வெள்ளை துண்டை மட்டுமே இடுப்பில்க் கட்டி  இருந்தார். அவரது வைத்திய சாலை தென்ன ஓலைகளால் வேயப்பட்டு  பெரிய குடிசை போன்ற அமைப்பில் இருந்ததுதரை நன்றாக சாணி போட்டு மெழுகப் பட்டிருந்தது. வைத்திய சாலைக்குள் நுழைவதற்கு முன்பாகவே பல வித மூலிகை மற்றும் எண்ணெய் கொதிக்கும் மணம் காற்றில் கலந்து இதமாக வந்தது. வைத்திய சாலை முன்பாக இரு புறங்களிலும் வேப்ப மரங்களும்பூவரசு மரங்களும் நின்றன. வலப்புறம் ஒரு மாட்டுத் தொழுவம்அதில் இரண்டு வெள்ளைப் பசுக்களும்  ஒரு கன்றுக் குட்டியும்  கட்டப்பட்டிருந்தனமருதநாயம் பிள்ளைக்கு அந்த வைத்திய சாலையின்  சூழல் மிகவும் பிடித்ததுமனதுக்குள் வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு விதமான சந்தோஷத்தை உணர்ந்தார்.  

வைத்தியர் மருதநாயகத்திடமும் அவர் அப்பாவிடமும் அனைத்து விபரங்களையும் கேட்டு அறிந்துக் கொண்டார்மருதநாயகம் பிள்ளையின் அப்பாவை அங்கேயே இருக்க சொல்லிவிட்டுமருதநாயகத்தை மட்டும் உள்ளே ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார்
அந்த அறையில் நீளமான ஒரு மரப் படுக்கை இருந்ததுமருதநாயகத்தின் வேட்டியையும்கோமணத்தையும் அவிழ்க்கச் சொன்னார்மருதநாயகம் பிள்ளை சற்றே வெட்கப்பட்டார். " என்னத்துக்கு வெக்கப் படுகு... எல்லாருக்கும் கெடக்கது தாலா..", என்று கூறி வைத்தியர் பலமாகச் சிரித்தார்
மருதநாயகம் பிள்ளை சகலத்தையும் அவிழ்த்தப் பின்னர் அவரை வைத்தியர், அந்த  மரப் படுக்கையில் ஏறிப் படுக்கச் சொன்னார்வைத்தியர் மருதநாயகத்தின் விதைக் கொட்டைகளை தன் கைகளால் லேசாக அழுத்திப் பிடித்தபடி அவரை இருமச் சொன்னார்.  மருதநாயகம் இரும ஆரம்பித்தவர் நிறுத்த முடியாமல் இருமிக்கொண்டே இருந்தார். வைத்தியர் ஒரு பச்சிலைச்  சாற்றினை அவருக்கு குடிக்கக் கொடுத்தார்அது துளசி மற்றும் தூதுவளை மணமும்... கசப்புமாய் இருந்தது. வைத்தியர் மருதநாயகத்திடம், " தப்பா ஒண்ணும் நெனச்சாண்டாம்... இப்படி செமைக்கும்போ.. கொட்டயோ ... வயத்துக்குள்ளக் கெயறிப் போயிரும். அதாக்கும் நா பாத்தேங் .... சரக்கு நல்லாதாங் கெடக்குவு..  என்று கூறியவர்  மெதுவாக மருதநாயகத்திடம் கேட்டார்," கண்டமானம்  வாணம் விடுமோ? ... இந்த வயசுலே அதெல்லாங் சர்வ சாதாரணங் தாங் ... எண் ணாலுங் ... கொஞ்சங் கொறச்சணுங் கேட்டேளா,.. என்றார்மருதநாயகம் பிள்ளை எதுவும் சொல்லாமல் நின்றார்

 வைத்தியர் மருதநாயகத்திடம் கோமணத்தையும்வேட்டியையும் கட்டிக் கொள்ளச் சொன்னார்அவர் கட்டிக் கொண்டிருக்கும் போது வைத்தியர் கேட்டார்," எத்தன குட்டியளத் தள்ளிருக்கும் இது வர?"

மருதநாயகம் பிள்ளைக்கு இக் கேள்வி எரிச்சலையும்கோபத்தையும், வெட்கத்தையும் உண்டாக்கியதுஅவர்," ஒம்ம ஒம்மச் சோலியப் பாரும் .. வேய் .. நாங் ஒத்தக் குட்டியள இதுவர தொட்டதில்லப் பாத்துக்கிடும்..  வெறுதே.. அதுங் இதுங் சொல்லாண்டாங் ..", என்றார்.
வைத்தியர்..இது கேட்டுச் சிரித்தார், “வெள்ளைக்காரப் பயக்க கைலேருந்து தங்க மெடல் வாண்டுனவனாக்கும்   இந்த மைலாடி வைத்தியன் . நமக்கிட்டே... ஏமாத்தலாம் எண்ணு நெனச்சாண்டம்... இருவது எங்கிலும் கேறிட்டுண்டு',.. என்று சொல்லி மருதநாயகத்தின் முகத்தையேப் பார்த்தபடி நின்றார் மைலாடி வைத்தியர். மருதநாயகம் பிள்ளை எதுவுமே சொல்லாமல் வெட்கத்துடன் அசட்டுச் சிரிப்பு சிரித்தார். " ஐயா கிட்ட சொல்லிப் போடாதயும் ", என்றார்.  
வைத்தியர் அவரை அழைத்துக் கொண்டு முன்னறைக்கு வந்தார்.    
வைத்தியர் மருதநாயகம் பிள்ளையின் அப்பாவைப் பார்த்து," எல்லாங் சரியாக்கிப்  போடலாங் ..நாங் குடுக்கப் போற மருந்தக் குடிச்சதுக்கு நல்ல மன ஒறப்பு வேணும்.. சின்னவருக்க மன ஒறப்பு எப்படி?", என்று கேட்டார்அதற்கு  அவர், " என்ன வைத்தியரே ... பயலுக்கு வாயிலே  எனத்தப் பீயக் கலக்கியா ஊத்தப் போறிரு?... என்ன எளவாங் கசப்பு கஷாயத்தையும்எண்ணயயுங்  குடுப்பீரு ... அதெல்லாங் குடிச்சிப் போடுவாங் ... பய யமகாதகனாக்கும் ... ", என்றார்.  
" இது கசக்க கூடிய சாமானமில்ல... ஆனா நாறுங்..கொமட்டுங்... எலைக்குங்... ஆனா துப்பீரவோகக்கீரவோப் பிடாது ..மூச்சியப் பிடிச்சுக்கிட்டு குடிசிப்  போடணுங்... சவங்.. குடிச்சு ஒரு மணிக்கூறு வர எதுக்களிச்சுக்கிட்டு வருங்.. பிராலு வாட அடிக்குங்...  குடிச்சு முடிச்சதுங் ஒரு துண்டு இஞ்சியக் கடிச்சி  சாத்த ஏறக்கணுங்.... அப்பிடி நாப்பத்தொண்ணு நாளு.... வெறுங் சைவச் சாப்பாடுதாங் சாப்பிடணுங்....  காட்டு நெல்லிக்காய அடிக்கடிப் பச்சையாத் திங்கணுங்...நாப்பத்தொண்ணு நாளு குடிச்சிப் போட்டா... இந்த செம்மத்துக்கு மட்டுமில்லேஅடுத்த செம்மத்துக்கும்... எளவு செமைங்கதே வராது பாத்துக்கிடுங்", என்றார் வைத்தியர்.   
 " அடுத்த செம்மத்துக்கக் கத எல்லாங் அப்போப் பாத்துக்கிடலாங்.... நீரு மருந்து என்ன எளவு... அதச் சொல்லும் ", என்று மருதநாயகத்தின் அப்பா வைத்தியரைப் பார்த்துக் கேட்டார். மருதநாயகம் பிள்ளை வைத்தியர் சொல்லப் போகும் மருந்து என்னவாக இருக்குமோ என்று சிந்தித்தபடியே பேய் முழி  முழித்துக் கொண்டிருந்தார்.
வைத்தியர் சொல்ல  ஆரம்பித்தார்," தெவசமுங் காலைலே  வெறும் வயத்திலே பதினெட்டு வயல் நண்டுவள உசிரோட ஒரலிலப் போட்டுப்  பூணிலாத்த  ஒலக்க வச்சி நல்ல இடிச்சணும்....   நண்டுவோ குஞ்சாவுங் இருக்கப்பிடாதுமுத்திக் கெளடானதாட்டுங்  இருக்கப்பிடாது....எடத்தரமா இருக்கணுங்...அதாயிது... எளசா இருக்கணுங்... நண்டுவோ தெனமுங்  அதிராவிலப் பிடிச்சதாயிற்று இருக்கணுங்...  யாமுண்ணாக்கி...   










கடுவா மூர்த்தியா  பிள்ளைக்கும் தெரியும் ..அவனும் சொல்லமாட்டான்... எம்ணா அவங் கதைய நானோ, கக்கோடனோ ... ஊரு முழுக்க சொல்லிப் போடுவமொண்ணு பயம், அந்தப் பயலுக்கு ' கடுவா மூர்த்தியா பிள்ளைன்னுஎப்படி பேரு வந்து?........ நா ஊரில இல்ல... இருந்திருந்தா அந்த  பய சொன்ன கதைய நா சொல்லி கடுவா பட்டத்தையும் எனக்கே வச்சிக்கிட்டு ... கடுவா மருதநாயகம் பிள்ள அப்பிடில்லா  எல்லா பயலுவளும்  கூப்பிட்டிருப்பான்....
நா ஊரில இல்ல... கோழிக்கோடு போயிருந்தே.. இவங் ஒரு பெரிய கதைய அவுத்து உட்டுட்டாங்...இவங் கொல்லைக்குப் போயிட்டு கழுவப் பட்டாணி கொளத்துல எறங்கியிருக்காங் ...அதும் மாட்டு கடவுல... இவங் கொளத்துல இருந்து கரையப் பாத்துக் இருந்து கழுவையில..எதுத்தாப்புல தோப்புக்குள்ள இருந்து அந்த எளவு கடுவா எதாவது மாடு கீடு கெடைக்குமான்னு கொளக்கரைக்கு ஏறி வந்திருக்கு .... இவங் குண்டி கழுவிட்டு எந்திரிக்கப் போகயில பாத்துட்டாங் ... ஒரு பய இல்லாத சாயங்கால நேரம் ..கோமணம் தோளிலக்  கெடக்கு ...இவங் கொஞ்சம் அசைஞ்சாலும்.. அது உறுமிச்சாம்... மொட்டக் குண்டிய தண்ணியில வச்சிட்டு எவளவு நேரம் இருக்கது? .. அந்த மயிரும் போறப் பாடு இல்ல...    கொளத்துத் தணுப்பு குண்டியோடையும், காலோடையும் ஏற... வேற நிமர்த்தி இல்லாம இவங் ஒரே தாவாத் தாவி கடுவாய்க்க கழுத்தப் பிடிச்சிருக்கான்... எளவு சரியான கடுவால்லா.. வலது கையால ஓங்கி ஒண்ணு.. மூஞ்சிலப் போட்டிருக்கு ... சொள்ளமாட சா..மீ.. .....ண்ணு அலறிட்டு தெறிச்சிப் போய் கொளத்துல விளுந்துருக்காங் ... இவம் போட்ட சத்தத்திலேயும்,தொபக்கடிர்ண்ணு கொளத்துல விளுந்ததிலையும்... கடுவா பயந்து ஓடியேப் போச்சாம் ..இவங் கடுவாக்கிட்ட வாங்கினது வீர அடியாம் ... பேரெடுத்துப் போட்டாங்  பய..இவஞ் சொன்ன கத இப்படி ... ஆனா வேளிமலையிலப் போயி வடிச்ச சாராயம் குடிச்சிக்கிட்டு.. சுட்ட கெளங்கும் அரச்ச காந்தாரி மொளகும் வாழ எலைல வச்சி தின்னுக்கிட்டே தள்ளாடித் தள்ளாடி வரையில நாலஞ்சி கொரங்குவோ...  கெளங்கப் பறிக்க அவனக் கீளத் தள்ளிப்போட்டு மொகத்துல பரண்டி நெஞ்சிலக் கடிச்சு ஓடுனத .. விறகுவெட்டி பயலுவோ    பாத்துப் போட்டானுவோ.. இவங் அவனுவள்ட்ட ," டேய் .. யாருக்கிட்டையும்                                                சொல்லிப்போடாதிங்கோ..  நாளைக்கி வீட்டுக்கு வாங்கடே .. ஆளுக்கு பத்து தேங்கியா தாரேன்னு ,” சொல்லி அமுக்குனது எனக்குத் தெரியும்.. அதோட விட்டானா? .. ‘அது கடுவா அடிச்சப் புண்ணாக்கும்னு கெளப்பிப் போட்டான்... அண்ணையில இருந்து ' கடுவா மூர்த்தியா பிள்ளண்ணு' பேரும் வச்சிக்கிட்டாங் .... நாங் கோழிகோடுக்குப் போவியில வெறும் மூர்த்தியா பிள்ளையா திரிஞ்ச பய, வரியில கடுவா மூர்த்தியா பிள்ளையா மாறிட்டான்நமக்கு வாச்ச சரியான கூட்டாளிதான்... தாயளி .. புலி சுடக் கூப்பிட்டா வருவானா.. அந்த மேனிக்கு பறஞ்சிருவானா? ... தம்புரானுக்க வாக்கு.. அதனால வருவான் ..' மருதநாயகம் பிள்ளை இப்படி எல்லாம் எண்ணிக்கொண்டிருந்தார்.. கக்கோடனும், கடுவாவும் வீட்டு முற்றத்துள் நுழைந்தனர்....         
துப்பாக்கியும் கையுமாய் கோமணத்துடன் இருக்கும் மருதநாயகம் பிள்ளையைப் பார்த்த கடுவா சிரித்துக் கொண்டே... "துப்பாக்கி வச்சிக்கிட்டு சொள்ளமாடன்..இருக்கது போலேலா இருக்கு.. இப்பமே தயாரெடுப்பில எறங்கியாச்சா? பாத்தா ... எளவு பத்து புலியளச் சுட்டுத் தள்ளிருவேரு போலெல்ல இருக்கு   " என்றார்.    
                                                            
 " நீ போடே.. இந்த எளவத் தூக்கதுக்கே  பெருங் கஷ்டம்.. இதையும் தோளிலப் போட்டுக்கிட்டு, கீரிப்பாற காட்டுக்குள்ள   அந்த சவத்துப் பயலுவோ எம்புட்டு தூரம் அலைய வைக்கப் போறானுவளோ? .. ராசா சொன்னா தட்டவும் முடியாது.. தடவவும் முடியாது.. என்ன எளவச் செய்யச் சொல்லுகீரூ? "  என்று கடுவா மூர்த்தியா பிள்ளையைப் பார்த்துக் கேட்டார் மருதநாயகம் பிள்ளை.
கடுவா தொண்டையைச் செருமிக்கொண்டு," போவோம்... அவனுவ பின்னாலேப் போவம் ... அவனுவோ .. அதில அந்த ரிங்கோ இருக்கானே ... செரியானவங் .. நல்ல சுடுவாங்.. நம்ம ஆளுகள எத்தனப் பேர அவங் குறி தப்பாம சுட்டிருக்காங்? ... அவனுக்கு புலியோ ஒரு காரியமே கெடயாது ... சுடது அவனுவோ ...ஆனா பேர நம்மோ அடிச்சுப் போடணும்...நாங் வாரதுன்னு முடிவு கெட்டியாச்சு..," என்றார்.
" ஆமா.. இவரு வரமாட்டேன்னு சொன்னேருன்ணா, தொரமாரும்,ராசாவும் சேர்ந்து மொத்த சொத்தையும் புடுங்கிப் போடுவானுவோன்ணுத் தெரியும்...பொறவு.. கடுவா மூர்த்தியா பிள்ள, பிச்சாண்டி மூர்த்தியா பிள்ளயாத் திரியணும் ", என்று சொல்லிவிட்டு மருதநாயகம் பிள்ளை வாய்  விட்டுச் சிரித்தபடி தன் பருத்த தொப்பையை ஒரு தட்டு தட்டினார்அது சிறிது நேரம் ஆடி அடங்கியது ..   " லேய்.. கக்கோடா ... அந்த மடக்குக் கசெரைய எடுத்து கடுவாக்குப் போடுலே ..அங்ஙத்த இருக்கட்டும்.." என்றார். கக்கோடன் ஓடிப் போய் அந்த மடக்கு நாற்காலியை எடுத்து வந்துப் போட, கடுவா அதில் அமர்ந்தார்கக்கோடன் ஓரமாய் கை கட்டி நின்று கொண்டிருந்தான்.  
நுள்ளியம்மை ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய் எடுத்துக் கொண்டு வந்து கக்கோடனிடம்  கொடுத்தாள். நுள்ளியம்மையைப் பார்த்துக் கடுவா கேட்டார் ," மயினி.. இண்ணு  என்ன சாப்பாடு?..." நுள்ளி யம்மை சிரித்துக்கொண்டேச் சொன்னாள்.., "மொச்சகொட்டத் தீயலுவாழப்  பூ தொவரங், சாள மீனு பொரிச்சது.. கொழுந்தன் சாப்பிட்டுத் தாங் போவணும்.. என்று சொல்லிவிட்டுத் திரும்பப் போனவள்.. மருதநாயகத்தை நோக்கிச் சென்று அவர் காதருகேக் குனிந்து சொன்னாள்," கோமணத்த ஒழுங்கா கெட்டணும் .. எல்லாங் தெரியி... ", மருதநாயகம் பிள்ளை தன் கோமணத்தை இறுக்கினார்அவளிடம்," யே புள்ள ..ஒனக்குத் தெரியுமா?.. நாளக்களிச்சி .. அதிராவிலே  நாங்கோ தொரமாரோட புலி வேட்டைக்குப் போறோம் ...எங்க கேட்டியா?.. கீரிப்பாறைக்காக்கும் ... " என்றார்.  
நுள்ளியம்மை ஒரு பாவனையும் காட்டவில்லை..,"  என்ன சாப்பாடு  கெட்டணும்ஒங்க  மூணு  பேருக்கும் தாலா? புளியோதர கெட்டினாப் போருமா? ..  தொரமாருவோ பன்னு,ரொட்டின்னு தின்னுப் போவாங்கோ ... உங்களுக்கு  அது ரசிக்காதில்லா?",என்றாள். " நீ ஒரு அஞ்சு நேரத்துக்கு மூணு பேருக்குமா..  புளியோதர கெட்டு..தனித்தனி பொதியாட்டு வேணும்.. மாங்கா  ஊறுகாயும்மோர்மொளகும் வறுத்து.. தனியா ஒரு பாத்திரத்திலப் போட்டு   வை.. மிச்சம்  அங்கப் போய்ப் பாத்துக்கிடலாம் ", என்றார் மருதநாயகம் பிள்ளை. கடுவா,"  மைனி.. நெல்லிக்கா அச்சாறும் வைக்கணும்", என்றார்கக்கோடன் காந்தாரி மிளகாய்  பறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்நுள்ளியம்மை சரியென்று தலையாட்டிவிட்டுத் திரும்பிப் போனாள். அவள் மனதுள் நினைத்துக் கொண்டாள்...  “வாய் சவடாலுக்கு ஒரு கொறச்சலும் இல்ல.. கோமணத்த ஒழுங்கா கெட்டாம எல்லாத்தையும் காட்டிக்கிட்டு... ஒரு மரப் பட்டியைக் கூட சுட்டதுக் கிடையாது ..புலியைச் சுடப்  போறாராங்..... ஓயாம வீட்டுத் தகரத்தில ராத்திரியானா மரப் பட்டிகோ ஓடிட்டுத் திரிகி ... தொம்மு, தொம்முன்னு சாடுகு ... ஒறங்க நிமர்த்தி இல்ல ... அதுகளச் சுட்டுக் கொல்லச் சொன்னா .. கமுந்தடிச்சிப் படுத்துக்கிடுகாரு.. துப்பாக்கியும் .. வாயும்  தான் பெரிசு.. என்ன எளவாங் செய்யட்டும்.."
அவள் உள்ளேப் போனதும் கக்கோடன் தன் கை நிறைய நல்லெண்ணெய் ஊற்றி மருதநாயகத்தின் தலையில் தப்பளம் போட்டான்.
" டேய் கடுவா ... இந்தத் தொரமாருவோ அடிக்கடி... ஃபக்கின்ஃபக்கின்             அப்பிடின்னு சொல்லுகானுவல்லா...  அதுக்கு என்ன அர்த்தம்டே...என்னப் பாத்து  அடிக்கடி சொல்லுகானுவ... போன தடவ இந்த ரிங்கோவ, நான் டிலனாய் கோட்டைலப்  பாத்தப்போ... நாலஞ்சுத் தடவ சொன்னான்  பாத்துக்கோ.. ", கடுவாவைக் கேட்டார் மருதநாயகம் பிள்ளை
அது ஒண்ணுமில்ல ஓய்.. அவனுவோ கொஞ்சம் தமிழ் படிக்கானுவோ..  ஒம்ம மீசையப் பாத்தா அவனுவளுக்கு பக்குன்னு இருக்கு அதத்தாங் .. அப்பிடிச் சொல்லுகானுவோ", என்றார் கடுவா.
அப்பிடியா சங்கதி? ....நாளக்கி கொட்டாரதுக்குப் போகயிலே  நல்ல நெய் தேய்ச்சு..இன்னும் முறிக்கிற்று போவணும்..எத்தன ஃபக்கின் சொல்லுகானுவப் பாப்போம்.." என்றபடியே தன் மீசையை மீண்டும் முறிக்கிக்கொண்டார்....
"ஓய்... மொச்சைக் கொட்டத் தீயலு வாசனைத் தூக்குகு... கொறச்சுத் திண்ணும்... நாளக்கி ராசாவப் பாக்கப் போவில... குசுவா வந்து தொலச்சிரும்...  "  கடுவா சொல்லி பயங்கரமாய் சிரித்தார்.  

-       2 -
மருதநாயகம் பிள்ளை எண்ணை தேய்க்கப்படும் சுகத்தில் லயித்திருந்தார் . கடுவா கேட்டார் , ஒம்மக்கிட்டே எத்தன உண்டைகோ இருக்கு?                                                            ( தோட்டாக்கள்) , என்கிட்டே ஆறு உண்டைகோ இருக்கு .. நாலண்ணத்தச் சுட்டுப் போட்டேன்", என்றார்.
தன் லயிப்பிலிருந்து  மீண்ட மருதநாயகம் பிள்ளை கடுவாவிடம், " என்ன சவத்தச் சுட்டே? ... சொல்லவே இல்ல..  என்றார்.
" எனத்தய சொல்லுகதுக்குவேளி மலைக்கு துப்பாக்கியும் தூக்கிற்றுப்  போனேங்  பாத்துக்கிடும்... எனத்தயாவது  சுட்டுக் கொண்டுவரணும்ணு.. தொணைக்கு அந்தத் தாயளி முத்துக் கருப்பனும் வந்தாங் ..சரக்கோணம் தாண்டி மேல ஏறயிலே ஒரு செரியான மிளா புல்லு தின்ணுக்கிட்டு நிண்ணு... பதுங்கிப் பதுங்கிப் பக்கத்திலப் போய்ட்டோங்... ஒரு பத்து அடிதாங் ... அந்த எளவு குண்டியைக் காட்டிட்டு நிக்கி..  கொஞ்ச நேரம் குறிபாத்து நாங் சுடப் போகையிலே .. இந்த முத்துக் கருப்பங்...  மயிராண்டி .., “ ஓய்..ய்..கொட்டையில சுடும்வேண்ணு..” போட்டாங்  ஒரு அவயம், நாங் இவங் போட்ட அவயத்துல அதுக்க எடது தொடையில வச்சிருந்த குறி மாறிப்போச்சு.. சத்தத்துல சரக்கு எடுத்து பாரும் ஓட்டம்.. உண்ட எளவு எங்கப் போச்சுண்ணு தெரியல்ல..
அடுத்த உண்டையைப் போட்டு ஓடிக்கிட்டே சுட்டேங்.. சரியா அதுக்க முன்னால இருந்த மரத்துலப் பட்டு மரம் ஓட்டயாப் போச்சு.. மிளா ஓடிப்போச்சு... வந்த ஆத்திரத்துல அந்தத் தாயளி முத்துக் கருப்பனுக்கச் செள்ளயிலக் குடுத்தேங் ஒண்ணு.., " பொலயாடி மோனே... எனக்கக் கன்னி வேட்டயில மண்ணளிப் போட்டுட்டியேலேண்ணு... ", திருப்பியுங் ஒண்ணு குடுக்கப் போவையிலே அவங்    சொல்லுகாங்...," ஓய் அடிச்சாதிரும்.. நீரு அதுக்க  தொடயிலயாக்கும் குறி வச்சேரு.. தொடையில உண்ட பட்டாலும் அது பாட்டுக்கு வேளிமலைக்க இந்தப் பக்கம் கெயறி அந்தப் பக்கம் வர ஓடும்.. ஓம்மளாலே அத ஒரு மயிரும் பிடிச்ச முடியாது.. கொட்டையில சுட்டா... சரக்கு அங்ஙண கெடக்கும்... அதுனாலயாக்கும் சொன்னேன்ணா..",  படுக்காளிப் பய சொன்னதும் சரிதாண்ணு தோணிச்சு", என்று கடுவா மூர்த்தியா பிள்ளை சொல்லி முடிக்கவும் மருதநாயகம் பிள்ளை விழுந்து, விழுந்துச் சிரித்தார்.. கக்கோடன்  தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு  சிரித்தான். மருதநாயகம் வெற்றிலை  மடித்துப் போட்டுக்கொண்டார், கடுவாவும் வெற்றிலை போட்டார். கக்கோடன் இருவரும் வெற்றிலை துப்ப வசதியாக கோளாம்பியுடன் நடுவில் வந்து நின்றான். கக்கோடன் நீட்டிய கோளாம்பியில் வெற்றிலைச் சாற்றை துப்பிவிட்டு மருதநாயகம் பிள்ளை கடுவாவிடம் கேட்டார், " மிச்சம் ரெண்டு உண்டயோ.. எங்கப் போச்சு? , அதற்கு கடுவா பதில் சொல்லத்  துவங்கும் முன் கக்கோடன் கோளாம்பியை நீட்டினான். துப்பிவிட்டு கடுவா சொல்ல ஆரம்பித்தார்..," ஒரு அவயாங் கெடந்து வீட்டில பயங்கர சல்லியம் பாத்துக்கிடும், நம்ம பொஞ்சாதி ஒரே கொறதான்...சவத்தக் கொண்ணுப் போடச் சொன்னா.. அவயானக் கொல்ல வெலக் குடுத்து வாங்கின துப்பாக்கி உண்டைய செலவளிக்கணுமான்னு எம்பாட்டுக்கு இருந்தேங்... ஏளவுடுத்தவளுக்க புறுபுறுப்புத் தாங்க முடியல்ல.. அப்பொதாங்.. நம்மோ முத்துக் கருப்பங் வேளி மலைலேருந்து  வடிச்ச ஒண்ணாந்தரச் சாராயமும்மொயலுப் பொரியலுங் கொண்டாந்தாங் .., அரக் குடுக்கைய குடிச்சதும் பயங்கர வீரம் வந்துட்டு...எடுத்தேங் துப்பாக்கிய..... துப்பாக்கிய சுட்டுப்  பாத்தாலையும் ஆச்சு..  எளவுடுத்தச் சனியன கொண்ணு போட்டாலையும் ஆச்சுன்னுப் போனேங் பொடக்களக்கி .. நல்ல நெலவு ... பதுங்கி இருந்தேங்... சவம் நல்ல பண்ணிக் குட்டிக்க அளவு இருந்து பாத்துக்கிடும்.. முன்னங் காலால சரப்புறசரப்புறண்ணு  மண்ணு மாந்த தொடங்கிச்சு...எங்குறி அதுக்க நடு மார்ல இருந்து.. கெவனமா பாத்துச் சுட்டெங் .. செரியா  சவத்துக்க மாறிலப்  பட்டு ஒடம்பு ரெண்டு துண்டாப் பொளந்து  தனித்தனியா விட்டுட்டுப் பாத்துக்கிடுங்.. தலையுங் நெஞ்சுக் கூடும் சேந்து ஒரு துண்டாட்டுங்வயறுங் வாலுங் சேந்து ஒரு துண்டாட்டும்... கொடலு பாதி இதிலையும்... பாதி அதிலயுமாட்டு... சவத்து மூதி என்ன எளவு காரியம்  செய்து தெரியுமாபொடக்களயில இருந்து தலையும், ரெண்டு காலும், மாறுமாட்டு குடு குடுன்னு ரெத்தம் வடிய வடிய நேரா வீடுக்குள்ள ஓடியாந்துட்டு.. நம்ம பொஞ்சாதி ஒரே அவயம் .. பத்தாயத்துக்க மேல ஏறி நிக்கா...,”  இடைமறித்தார் மருதநாயகம் பிள்ளை..
" ஓய் ஒம்ம பொஞ்சாதினு சொல்லும் ..  அவ எனக்கும் கொழுந்தி மொறயாக்கும் ... எசகுபிசகாயிரும்.." சொல்லி மருதநாயகம் பிள்ளை சத்தமாய்ச் சிரித்தார். அசட்டு சிரிப்பு சிரித்தபடியே கடுவா மூர்த்தியா பிள்ளைத் தொடர்ந்தார்,... ” அந்த சனியங் சாவாம ஒரு முக்குலப் போய் இருந்துட்டு என்னப் பாத்து வாய 'ஊஹினுதொறந்துட்டு பல்லக்காட்டுகு... எனக்கு ஈரக்கொல பதறிப் போச்சு பாத்துக்கிடுங்.. அடுத்த உண்டையப் போட்டு தரையோட தரையா இருந்து அதுக்க வாயப் பாத்து துப்பாக்கிய வச்செங்.. சவம் பாதி ஒடம்போட ஓடி வந்து துப்பாக்கி கொளாய்க்க வாயக் கடிச்சி வச்சிருக்கு... அதுக்கு சாவக் கூடிய  வெப்ராளம்..  கண்ண மூடிக்கிட்டுச் சுட்டேங்.. சுக்கு சுக்கா செதறிப் போச்சு.. வீடக் கழுவி  தொடச்சிப்.. போரும்...போருன்ணு ஆயிப்போச்சு...பொஞ்சாதிக்க ஏச்சும்  கெடச்சு.. ரெண்டு உண்டாயோ அவயானோட போயும் போச்சு...." என்று சொல்லிவிட்டு வாய் விட்டுச் சிரித்தார் கடுவா மூர்த்தியா பிள்ளை
மருதநாயகம் பிள்ளை சிரித்துக் கொண்டே சொன்னார்.., எங்கிட்ட வாண்டுன பத்து உண்டயளும் அந்தாக்கில கெடக்கு..இந்தத் தடவ எளவுல அம்புட்டையும் சுட்டுத் தீத்துரணுங்... சவம் நமுத்துப் போயிருக்குமோண்ணு  தெரியாது...ஒரு மொயலயாது கொல்லணும்ணு ரொம்ப ஆச பாத்துக்கோ..இல்லாம இந்தக் கனங் கனக்க சாமானத்த வச்சிக்கிட்டு எனத்துக்கு?  ... சாவதுவர ஒரு புலியோ சிறுத்தையோ சுடுவோம்ணு தோணல்லே.. அதுகளச் சுடதுக்கு பயங்கர தைரியமும் நெஞ்சூக்கமும்  வேணுண்டே ... அதெல்லாங் தொரமாருக்குதாங் .. பண்டைய நம்ம ஆளுவளுக்கு இருந்து.. நம்மோ பவிசுக்கா சுட்டி இந்த சனியன வாண்டி வச்சிருக்கோம்..", மருதநாயகம் பிள்ளை சொன்னதற்கு கடுவா சிரித்தபடியே ஆமோதித்து சொன்னார்," நீரு சொல்லது சரிதாங்.. இந்த எளவு இருக்கனால தாலா ஊரு பயலுவோ கொஞ்சமாது பயந்து  நடக்கானுவோ...', 
மருதநாயகம் பிள்ளைச் சொன்னார்," இந்த வெள்ளக் காரப் பயலுவள பகச்சுக்கவும் முடியாது.. எதுத்துப் பேசவும் முடியாது
அவனுவோ சொன்னா சொன்னது தாங்.. புலி சுட வரலேண்ணு சொன்னா ஒடனே துப்பாக்கிய நம்மளப் பாத்து நீட்டுவாங்.. செவனேண்ணு சொல்லதக் கேட்டுட்டு.. நம்ப பாட்டுக்கு இருந்தா ஒரு கெரகமும் இல்ல.. வேலுருல இருந்த எம்பேருடயாங் மருதநாயகம் பிள்ள கத  தெரியுமுல்லா... வெள்ளக் காரப் படையில சுபேதார இருந்தவரு.. கான் சாய்ப்புன்னு பேரையும் மதத்தையும் மாத்திக்கிட்டாரு, பொறவு   அவர வச்சித்தாங் பல சண்டையள்ள இவனுவோ செய்ச்சானுவோ..ஒரு கட்டத்துல வெள்ளக் காரனுவ போக்குப் பிடிக்காம இவரே தனிப் படையோட  அவனுவளையும் ஆற்காடு நவாப்பையும் எதுத்தப்போ என்ன ஆச்சுசதி செய்து பிடிச்சு தூக்கிலப் போட்டதோட, ஒடம்ப துண்டு துண்டா வெட்டி, தலைய திருச்சிராப் பள்ளிலேயுங்கைகள பாளையங் கோட்டலேயுங்ஒருக் கால தஞ்சவூரிலயுங்இன்னொரு கால திருவாங்கூரிலயுங் வீசிப் போட்டானுவோ..  அவருக்கப் பேரத்தாலா எங்க ஐயா எனக்கு விட்டேரு..", என்றார்.    உடனே கடுவா நக்கலாய்  ... ," அது கொண்டுத் தாலா ஒமக்கு வீரம் கெடந்து   வெளயாடுகு.. ," என்றார்.
மருதநாயகம் பிள்ளை சற்றே கோபப்பட்டார். " லேய் மைத்தாண்டி ராசராசண்ணு பேர வச்சிட்டா ஒருத்தங் ராசராச சோழனாக முடியுமாலே.. அதெல்லாம் ஒரு தனிப் பொறப்புடேய்...", மேலும் தொடர்ந்தார்..," திப்பு சுல்தாங் எம்புடு பெரிய வீரங்.. வெள்ளக் காரனுவோ கொட்டயக் கைலப் பிடிச்சிட்டுல்லா ஒடுனானுவோ அவரப் பாத்து.. ஆனா சமயம் பாத்து நெத்திப் பொட்டுல சுட்டுக் கொண்ணுப் போட்டானுவோ.. ஆக நம்மளப் போல, நம்ம ராசாவப் போல..  அவனுவளுக்கு அடங்கிக் கெடந்தா நமக்கும் நல்லது .. நம்ம சொத்துக்கும் பிள்ளையளுக்கும் நல்லது... அந்தமான் செயிலுக்கும் போவண்டாங்... துப்பாக்கி உண்டைக்கு சாவவும் வேண்டாம்... அவனுவள்ட்ட வேற என்னக் கொற இருக்குடேஎம்புட்டு பாத போடுவானுவரயிலு வண்டி கொண்டாந்தானுவோ..இப்போ எண்ண இல்லாம வெளக்கு கொண்டுவாரானுவோ.. அவனுவோ வரலேண்ணா.. நாமோ தேய்லயுங், காப்பியும் பாத்திருப்போமா?     சுருட்டு இழுத்திருப்போமா? ... பிளசரு காரிலப் போவ முடிஞ்சிருக்குமா?   சக்கடா வண்டியும், வில்வண்டியும், குதிரவண்டியும் மட்டும் தாலா இன்னும் ஓடியிருக்கும்...“, என்றார். அதற்கு கடுவா, “அதெல்லங் சரிதாங் ... ஆனா கள்ளப் பயலுவோ யாவாரம் செய்ய வந்தவனுவோ.... நமக்கிட்ட இருந்து வரி கறக்கேல்லச் செய்யானுவோ ..  திருவாங்கூர் ராஜக்கமாரு..அவுனுவளுக்கு ஆத்தியமே நெறைய எடங் குடுத்துப் போட்டாங்கோ ... அது கொண்டு தாலா இப்போ இவமாரு  இந்த ஆட்டமும் அதிகாரமும் செய்யானுவோ.., அது போக துலுக்க ராசக்கமாரு வடக்க இருந்து இங்க வந்து கொள்ள அடிச்சிற்றுப் போன கோவில் ஆபரணங்களும்வைர வைடுரியமுங் போக மிச்சம்  மீதி இருந்த அம்புடயுங் பொலயாடி  மக்க, அங்க... லண்டனுக்கு  கொண்டுல்லப் போறானுவோ.. என்னதாங்  நம்மோ மீசையும்தாறும் பாச்சினாலுங்  நமக்கு அவமார எதுக்கதுக்கு அண்டி ஒறப்பு இல்ல பாத்துக்கிடும், என்றார்.                       
 கக்கோடன் கைகளைக் கட்டியபடியே நின்று இவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு இருவரின் வீரக் கதைகளும் பயங்கரச் சிரிப்பினை வரவைத்தாலும் தன் வேலை போய்விடுமே என்ற பயத்தால் அவர்கள் இருவரும் சிரிக்கும் போது மட்டும் சத்தமாய் சிரித்துவிட்டு மற்ற நேரங்களில் மனதுள் விழுந்து விழுந்துச் சிரித்தான். 

அவனும் இவர்களுக்கு ஏற்ற மாவீரன்தான்!. கோயிலுக்கு நேர்ந்து விட்டிருந்த 'குறுணி' நடராஜ பிள்ளையின் ஆட்டுக் கிடா  ஊரில் பயங்கர அழிசாட்டியம் செய்துக் கொண்டிருந்தது.. யாரும் அதனை அடக்க முடியவில்லை.. வளைந்து முறுக்கேறியக் கொம்புகளும் தசை புடைத்த வலிமையானக் கால்களும் திமிர் நடையும் குறுந்தாடியுமாக ஆடு யாருக்கும் பயப்படாமல்ச் சுற்றித் திரிந்தது.
ஒரு நாள் வள்ளியாற்றின் மறுகரையில் ஒரு வாழைத் தோட்டத்தில் வைத்து  வாற்றுச் சாராயம் குடித்துக் கொண்டிருந்த போது குறுணி நடராஜனிடம்  கக்கோடன், " ஓய்.. ஒம்ம கிடாவ.. ஒழுங்கா கெட்டிப் போட்டு வையும்... இல்லண்ணா சவத்துக்க சாவு எங் கையாலதான்," என்றான். குறுணி நடராஜ பிள்ளைக்கு பயங்கரக் கோபம் வந்தது.. சாராயம் வேறுக் குடித்திருந்தார்.. ," பட்டிப் பொலயாடிமோனே...ஒனக்கு அண்டி ஒறப்பு உண்டுமானா... அத தொட்டுப் பாரிலே.. ஒன்னாலே அதுக்கப் புடுக்கக் கூடத் தொட்டுக்கிட முடியாதுலே... தயாளி மோனே ..", என்று பயங்கரமாய்த் திட்டி விட்டார்.  கக்கோடன் அந்த அவமானத்தில் கிடாவை எப்படியாவது அடக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.  ஒரு நாள்...  பட்டாணிக் குளம் போகும் வழியில் கலிங்கத்து அம்மன் கோயிலுக்குப் பின்னால் தென்னந் தோப்பில் குருணியின் கிடா.. ஒரு பெட்டை ஆட்டைத் துரத்திக் கொண்டிருந்தது.. கிடாவின் குறி விறைத்து சிவந்து வெளி நீட்டி இருந்தது ... பெட்டையாடு ஒத்துழைக்காமல் விலகி ஓடியது.. கோபமும், காமமும் தலைக்கேறி கிடா ஓடியபோது கக்கோடன் அதன் முன் போய் இடுப்பில் கைவைத்து மாவீரனாய்  நின்றான். ஆட்டுக் கிடா அவனை சட்டை செய்யாமல் வலப்பக்கம் திரும்பி பெட்டையாட்டைத் துரத்த எத்தனித்தது..கக்கோடனின் மனதுள் குறுணி சொன்ன வார்த்தைகள் மீண்டும் கேட்டது, " பலவர ஓளி ஆடெ.. இண்ணு  ஒன்ன நாங்  விட்டனாப் பாத்துக்கோ.."' என்று சொல்லியபடி அதன் கொம்புகளை அழுத்திப் பிடித்து அதன் தலையை வலப்புறமிருந்து இடப்புறமாக முழு பலமும் திரட்டி வளைத்தான். கிடா உடனே சுதாகரித்துக்கொண்டது. பலமாய் அசைத்து உதறியது, கக்கோடனின் பிடி தளர்ந்தது.. அவனது அடி வயற்றில் ஓங்கி  முட்டி அவனை தள்ளிக்கொண்டேப்   போய் கலிங்கத்து அம்மன் கோயில் maadasamy திண்டில் உதறித் தள்ளியது.. ' யப்போய்....' என்று அலறியபடி மல்லாக்க விழுந்த கக்கோடனை வெறித்துப் பார்த்தபடியே இரண்டடி பின்னுக்குப் போய் தலையை தாழ்த்தி சரித்துக் கொண்டு ஓடிவந்து கொம்புகளால் குத்திக் கிழித்துப் போடும் வெறியோடு பாய்ந்தது.. நா வறண்டு வார்த்தைகள் வராமல் குழறினான்  கக்கோடன். கையெடுத்துக் கும்பிட்டான். பாய்ந்து வந்த கிடா என்ன நினைத்தோ .. அவனை முட்டாமல் அவனது வலது தொடையைக் கடித்து கொஞ்சம் சதயைப் பிடுங்கித் துப்பியது ..அது வரையில் ஆடு கடிக்கவும் செய்யும் என்பது யாருக்குமே தெரியாது. ஆட்டிடம் கடி வாங்கிய முதல் ஆள் அந்த வட்டாரத்திலேயே கக்கோடனாகத்தான் இருப்பான். தொடையில் பெரிய கட்டுப் போட்டு, கால்களை அகட்டி விரை வீக்கம் வந்தவனைப் போல் நடந்தக் கக்கோடனிடம் மருதநாயகம் பிள்ளைக் கேட்டார்," லேய்... பட்டி கடிக்கும்..அது எப்பிடிலே  ஆடு ஒன்னக் கடிச்சுப்போட்டு? ", அவன் அதற்கு, " சவத்து மூதி ... பட்டிக்கும் ஆட்டுக்கும் பொறந்த   எளவா   இருக்கும் ... நல்லவேள ... சவம் கடிச்சதோட விட்டே ... அது வந்த வரத்துல முட்டியிருந்தா... எனக்க கொடலுங் கொட்டயுங் தெறிச்சிப் போயிருக்கும்",என்றான்


            -        3     -
காலையில் மருதநாயகம் பிள்ளை சீக்கிரமே எழுந்துவிட்டார். இரவெல்லாம் அவருக்கு தூக்கமே வரவில்லை.. கண்ணடைத்தால், பாறைகளின் இடைவெளிகளிலிருந்தும், புதர்களின் இடையிருந்தும்  புலிகள் அவர் மேல் பாய்வதும்ஒரு புலி கடுவா மூர்த்தியா பிள்ளையின் குரல் வளையைக் கடித்துக் கொண்டு அவரை தரதரவென இழுத்துக் கொண்டே ஓடுவதும்... கக்கோடனை இரு புலிகள் அங்கும் இங்குமாக கடித்து இழுத்துப் போடுவதும்..   














1 comment:

  1. ஊரில் இருந்த பொழுதுக் கேட்ட பல வாய் வழிக் கதைகளின் தாக்கம் என்னை இக் கதையை எழுத வைத்தது. தங்களை வீரர்களென்று முன்னிலைப் படுத்த பல கோமாளித்தனங்களை பலரும் செய்துள்ளனர். வெள்ளைக் காரனை பகைத்துக் கொண்டால் தங்கள் சொத்து பறிபோய்விடும் என்ற பயமும், அந்தமான் சிறையில் அடைக்கப்படுவோம் என்ற கவலையும் இதில் வரும் கதா நாயகன் மருதநாயகம் பிள்ளையைப் போல பலருக்கும் இருந்திருக்கிறது ... எனவே தங்களுக்கு முடியாத, விரும்பாத பல வேலைகளையும் அவர்கள் செய்யவேண்டியக் கட்டாயம்.. தாங்கள் வீரர்கள் என்று ஊர் முன்பு

    காட்டாவிட்டால், யாருமே தங்களை மதிக்க மாட்டார்கள் என்பதனால் பல நாடகங்களை இவர்கள் ஆட வேண்டியது வந்தது.. அதில் ஒன்று இது... இது தொடரும்....

    - பத்மநாபபுரம் அரவிந்தன் -

    ReplyDelete