Monday, December 6, 2010

நாஞ்சில் நாடனின் 'கும்பமுநியுடன் ஒரு நேர்காணல்"

நாஞ்சில்நாடன் கும்பமுனியுடன் ஒரு ”நேர்காணல்”     கதையில் சில பகுதிகள்:
கிராப் வெட்டிய ஔவையார் போலக் கூனி நடந்து வந்து “யாரைய்யா?” என்றார் கும்பமுனி.
“சார், நாங்க சென்னையிலேருந்து வாறோம். ப்ரியா டிவி. கும்பமுனி சாரைப் பாக்கணும்!”
”அவனை என்னத்துக்குப் பாக்கணும்? அவன் லங்கோடு கிழிஞ்சிருக்காண்ணு பாக்கணுமா?”
கிளமெண்ட் இதையெல்லாம் எதிர்பார்த்ததுதான். பவ்யமாகக் கேட்டான். “நீங்க ஆரு?”
“நான்தான்யா கும்பமுனி, கும்பாத முனி, வெம்பமுனி, வெம்பாத முனி, சும்ப முனி, சும்பாத முனி எல்லாம்… என்ன வேணும் சொல்லு?”
“ப்ரியா டிவிக்கு ஒரு நேருக்கு நேர்…”
xxxxx
ஐயா வணக்கம். ப்ரியா தொலைக்காட்சி நேயர்கள் சார்பிலும் எங்கள் சார்பிலும் வணக்கம். நீங்கள் ‘கும்பமுனி’ என்று எப்படி பெயர் வைத்துக் கொண்டீர்கள்?”
“பேர்லே என்னய்யா இருக்கு? உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்ணு மாணிக்கவாசகன் சொன்னது தெரியுமா? கும்பமுனி இல்லேண்ணா வாயுலிங்கம் அவ்வளவுதான். இதைப்பத்தி இம்மானுவேல் கான்ட் என்ன சொல்றாருண்ணா…”
xxxxxxx
ஐயா எத்தனை வயதிலிருந்து எழுதுகிறீர்கள்?”
”நான் எங்கய்யா எழுதினேன்? எழுத்துப் பயிற்சி செய்து கொண்டிருந்தேன். இப்பவும்தான். எழுதி அழித்து, அழித்து எழுதி, எழுதி எழுதி, அழித்து அழித்து, எழுதி எழுதி, எழுதியும் அழித்தும், அழித்தும் எழுதியும், எழுதாமலும் அழித்து, அழிக்காமல் எழுதி.. அன்னமாச்சார்யா கீர்த்தனை கேட்டிருக்கியா?”
xxxxx
நவீனத்துவம், பின்நவீனத்துவம், மேஜிகல் ரியலிசம் என்றெல்லாம் வந்துள்ள புதிய இலக்கியக் கோட்பாடுகள் பற்றி ப்ரியா நேயர்களுக்குக் கொஞ்சம் சொல்ல முடியுமா?”
“ஏன்யா? உம்ம நேயர்ங்கிறவன் யாரு? எல்லாம் முலை குலுக்கி, குண்டியாட்டி டான்ஸ் பாக்கப்பட்ட பயலுவோ… அவனுகளுக்கு என்னத்துக்கு நவீனத்துவம் – பின்நவீனத்துவம், கருமாதி எல்லாம்? திருக்குறளையாவது சரியாப் படிச்சிருக்கானுகளா? எல்லாம் வாறவனுக்கும் போறவனுக்கும் ஜே போடுக பயலுகோ. முப்பது ரூவா குடுத்தா மூக்கப்பனுக்கு ஜே.. காலேஜ் தமிழ் வாத்தியாருக்கே கான்ட் தெரியுமா, தெரிதா தெரியுமா? ஃபூக்கோண்ணா தெரியுமா? நல்லா புரோட்டா சால்னா திங்கத் தெரியும். இதுலே உம்ம நேயரு, மயிரு, வாரியக் கொண்டைக்குப் பட்டுக் குஞ்சலம்… படிக்கணும்வே.. எல்லாம் படிக்கணும். தமிள் வாள்கன்னு சங்கு பொட்ட சத்தம் போட்டாப் போராது.”
xxxxxxxx
முற்பகுதியை எடிட் செய்து கொள்ளலாம் என்று எண்ணினான் கிளமென்ட். ஓட்டு வெக்கை உடம்பில் இறங்கி வியர்வை ஊறிப் பெருகியது. சுதாகரன் விளக்கின் வெப்பம் வேறு. கும்பமுனிக்கு அது ஒரு தொந்தரவாக இல்லை போலும். அவர் தாயுமானவருடன் ஒரு சம்பாஷணையில் இருந்தார். ‘அகம்’ என்பது உண்மையில் என்ன என்றொரு கேள்வி முளைத்திருந்தது.
கிளமென்ட், டாக்டர் புதுப்பொழில் எழுதித் தந்த குறிப்புகளைப் புரட்டிக்கொண்டு கேட்டார்.
உங்கள் படைப்புகளில் சமுதாயச் சீரழிவுகளைச் சாடுவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?”
”ரொம்பப் பேரு சாடுகாள்ளா? நானும் எதுக்கு? பொறவு, நான் இந்த வயசிலே சாடுனா காலு ஒடிஞ்சிராதா? கம்பு ஊணீட்டுல்லா நடக்கணும்…”
இருந்தாலும்…”
“இருந்தாலும் என்ன இருந்தாலும்? இதுக்கு அம்பது வருஷமா பதிலு சொல்லீட்டு வாறேன். ஒரு மயிறாண்டிக்கும் மனசிலாக மாட்டங்கு… மனசிலானாலும் ஏத்துக்கிட மாட்டான். எவன் சத்தம் போட்டு பேசுகானோ, எவன் நீண்ட நேரம் பேசுகானோ அவன் பெரிய புரட்சிப் பீரங்கி ஓய் நம்ம ஊர்லே… உள்ளுக்கு மருந்து குடிக்கணும். கஷாயம் கசக்கும். பத்தியம் உண்டும். முருங்கைக் கீரையும் வடிச்ச சோறும் வசக்கித் திங்கணும். முறிச்சுக் கட்டினாத்தான் எலும்பு கூடும்ணா முறிச்சுத்தான் கட்டணும். வலிக்கும்ணா நடக்காது. தெரிஞ்சா? ஆனா நம்மாளு அது நோயில்லே, பேய் புடிச்சிருக்குங்கான். திருநீறு போடனும்ங்கான். நாப்பத்தோரு நாளு பூசையிலே வச்ச ரச்சை கெட்டணுங்கான் அதுலே கொணமானா எனக்கும் சந்தோசம்தான். ஆனா கொணமாகல்லே. மந்திரவாதிதான் கோழிக்கறி திண்ணு, பேய்க்கு வச்சு சாராயம் குடிச்சு கொழுத்திருக்கான். நீரு ஓசியிலே ஊடப் போயிரலாம்ணு பாக்கேரு.”
இந்த ஐம்பது ஆண்டுகளில், நீங்கள் ஆறு நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கவிதைத் தொகுப்புகள் எழுதி இருக்கிறீர்கள். அவற்றில் நீங்கள் அதிகம் விரும்பும் நூல் எது என்று ப்ரியா டி.வி. நேயர்களுக்குச் சொல்ல முடியுமா?”
“சேக்ஸ்பியர் படிச்சிருக்கேரா? அழுகுன ஆப்பிள்களிலே  என்னத்தைத் தேர்ந்தெடுக்க? அதான். எல்லாம் சாரமில்லாத விஷயம். மாணிக்க வாசன் சொன்னாரில்லா, ‘கற்பனவும் இனி அமையும்’ணு அதான். இனி என்ன முடியும் என்னால? சுடுகாட்டுக் குழியிலே கால் நீட்டி உக்காந்தாச்சு. செத்துப் போனா உம்ம டி.வி. நியூஸ்லே கூடச் சொல்ல மாட்டேரு… மந்திரி வீட்டு நாய்க்கு பிராந்து புடிச்சா சொல்லுவேரு. நடிகைக்கு எட்டு நாளு தீண்டல் தள்ளிப் போச்சுண்ணா சொல்லு வேரு.. போவுமிய்யா.. நீரும் உம்ம வாரியலும்.”
அது இருக்கட்டும். ஐம்பது ஆண்டுகளாக நீங்கள் தமிழ் இலக்கிய சேவை செய்து வருகிறீர்கள். உங்களை கௌரவப்படுத்த சாகித்ய அகாதமி விருது அளிக்க முன்வந்துள்ளது. அதை ஏற்றுக் கொள்ள நீங்கள் ஏன் மறுக்க வேண்டும்!”
“ஆங்… அப்பிடி வாரும். பிள்ளை முழிக்க முழி பேல முழிக்குண்ணு இப்பம்லா தெரிஞ்சு.. எனக்கு சாவப் போற வயசிலே இது என்னத்துக்கு? இட்டிலியை பால்லே சொவரப் போட்டுத் திங்கேன். பேயன் பழத்தை மிக்ஸியிலே அடிச்சுத் திங்கேன். பொண்டாட்டி போய்ச் சேந்து முப்பது வருசமாச்சு. பிள்ளையா குட்டியா? குடியிருக்கவீடு இருக்கு. சாப்பாட்டுக்கு கண்டும் காணாம நெல்லும் உண்டும். அஞ்சாறு தேங்கா உண்டும். இவுனுகள்ட்டே இந்த ரூவாயை கை நீட்டி வாங்கி நான் என்னத்தைச் செய்ய? போட்டா பிடிச்சு, பிரேம் போட்டு யாருக்குக் காட்ட? எனக்கு இதெல்லாம் அவசியம் இல்லவே…”
இருந்தாலும் நீண்ட காலமாக உங்களுக்குத் தராமல் புறக்கணித்துவிட்டு இப்போது காலந் தாழ்த்தித் தருவதால்தான் மறுக்கிறீர்கள் என்று பரவலாகப் பேசுகிறார்களே?”
“பரவலா யாரு பேசுகா? ஐ. நா. சபையிலேயா? பார்லிமென்டிலேயா? எழுத வாசிக்கத் தெரிந்த மூணு கோடி தமிழன்லே நான் எழுதுகேன்ணு ஒரு ஆயிரம் பேருக்குத்தான் தெரியும். அதுலே பாதிப்பேரு என் எழுத்து மனசிலாக மாட்டங்குன்னு சொல்லுகான். மனசிலான பாதிப் பேரு என் கருத்துக்கு எதிர்க்கருத்து உள்லவனுகோ. அவங்க எல்லாம் பேசுகாளாடே? பேசீட்டுப் போறா! எனக்கு எல்லாம் ஒண்ணுதான்.”
இருந்தாலும் உங்களுக்கு வருத்தம் இல்லையா?”
“இருந்திருக்கும், ஒரு முப்பது வருஷத்துக்கு முந்தி. ஆனா எப்பவும் அப்படி ஒரு கோளு அடிக்கதுக்கு உள்ள ஏது இருந்ததில்லை.”
அதுக்கு என்ன காரணம் ஐயா?”
“அதெல்லாம் இப்பம் எதுக்கு? தண்ணி குடிக்கப் போனா, மேலிட்டால குடிச்சுக்கிட்டு வரணும். கோலு கொண்டு கலக்கிட்டுப் பொறவு குடிக்கப்பிடாது.”
நேயர்கள் அறியப் பிரியப்படுவார்கள்…”
“முக்கியமா நான் முற்போக்கு எழுத்தாளன் இல்லே. தேசீய எழுத்தாளனோ, திராவிட எழுத்தாளனோ இல்லே. ஜாதி பெலம் கெடையாது. பிராம்மணன் இல்லே. மதச் சிறுபான்மை இல்லே. அரசியல் பெலம் கிடையாது. பெரிய பதவியிலே இருக்கக் கூடிய ஒருத்தனயும் தெரியாது. ஒரு பல்கலைக்கழக பேராசிரியர் வீட்டுக்கும் போனதில்லை. ஒரு பஞ்சாயத்துத் தலைவரைக் கூட அறிமுகம் கிடையாது. பின்னே எனக்கு என்னத்துக்குவேய் தரணும்? அவுனுகளுக்கு என்ன பைத்தியமா, எனக்கு பிரைஸ் தாறதுக்கு?”
ஞானபீடம், சரஸ்வதி சம்மான் ஏதும் முயற்சி செய்திருக்கலாம் அல்லவா?”
“முதல்லே இந்த முயற்சிங்கிற சங்கதி இருக்குல்லா? அதுக்கு என்ன அர்த்தம்! செல்வாக்கு உள்ளவன் குண்டியைத் தாங்குகதுதானே. என்னாலே அது முடியல்லே! என் மொழிக்கு அந்தப் பிரைஸ் எல்லாம் எட்டுலே பத்திலே வருமா இருக்கும். வந்தாக்கூட மூணாந்தரக்காரனுக்குத்தானே பிரைஸ் அடிக்கும்.”
புலிட்சர் பரிசு, புக்கர் பரிசு, நோபல் பரிசு ஏதாவது நம்ம மொழிக்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா?”
”எப்பிடி ஐயா கிடைக்கும்? இப்பிடி ஒரு மொழி இருக்கதே அவனுக்குத் தெரியாது. மொதல்லே அதுக்கு ஒரு வழி பண்ணும். பிரைஸ் பத்தி பொறவு யோசிக்கலாம்….”
ஆனா இந்தப் பரிசை மறுத்ததன் மூலம் நம் மொழிக்கு வரவேண்டிய மரியாதையை நீங்கள் கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?”
“மொழிக்கு வரவேண்டிய மரியாதையை நான் கெடுக்கவே மாட்டேன். என் மொழிக்கு எவனாவது எள்ளுப்போல நல்லது செய்தாக்கூட அவனைக் கூடையிலே தூக்கிவச்சு வேசி வீட்டுக்குச் சொமக்க நான் தயாராக இருக்கேன். ஆனா இங்கே மொழியின் பெயரால வாழ்கிறவனெல்லாம் மொழியைக் கூட்டிக் குடுக்கானுகவேய்… காட்டிக் குடுக்கானுகவேய்… சத்தம் போட்டு, தமிழாக்கும் – அது என் உயிராக்கும் – என் மூச்சாக்கும்ணு – பேசீட்டால தமிழ் வளந்திருமா? யாரு மரியதையைக் கெடுத்தா? அஞ்சாந்தர, ஏழாந்திர ஆளுகளுக்கு சிம்மாசனம் போட்டு, வெஞ்சாமரம் வீசுகேள்ளா ஓய்! அதை முதல்லே கேளுங்க. முதல்லே மொழியைக் கேவலப்படுத்தாம இருக்கணும். நம்மூர்லே மொழியைப் பத்தி யாரு வேணும்ணாலும் என்ன வேணுணாலும் பேசலாம். கவர்ச்சி நடிகை பேசலாம், காப்பியடிச்சு எட்டாங்கிளாஸ் பாசாகி மந்திரி ஆனவன் பேசலாம். சினிமா தியேட்டர் வாசல்லே பிளாக்கிலே டிக்கட் வித்தவன் பேசலாம். அதெல்லாம் ரொம்ப மரியாது. நான் வந்து, நீயும் உன் புண்ணாக்கு பிரைஸு – கொண்டுக்கிட்டுப் போங்கடேண்ணு சொன்னா மரியாதிக் கொறவு! இது எந்த ஊரு நியாயம்யா?”
ப்ரியா டி.வி. தமிழ் நேயர்களுக்கு நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?”
“என்னத்தைச் சொல்ல? வெள்ளத்தனைய மலர் நீட்டம்ணு ஒரு குறல் கேட்டிருக்கேரா? அதான்! நாழி முகவுமோ நா நாழி? அதான்! மொதல்ல நமக்குத் தெரியாத விஷயங்களும் உலகத்திலே இருக்குங்கிறதை ஒத்துக்கணும். விருப்பம் இருந்தா தெரிஞ்சுக்கோ, இல்லேண்ணா விட்டிரு. ஆனா இருப்பதை மறுக்கப்பிடாது. ஆனா நம்ம ஆளுகோ, எனக்குத் தெரியாத விஷயம் உலகத்திலே ஒண்ணுமே கிடையாதுங்கிற மனப்பான்மையை மாத்தணும். அதெல்லாம் எங்கவே?  பாறையிலேவிதைச்சு என்ன பிரயோசனம்?”

No comments:

Post a Comment