Sunday, October 24, 2010

வயது நாலு - S.RAMAKRISHNAN

வயது நாலு

நண்பரின் வீட்டில் அவரது நான்கு வயது மகளைச்  சந்தித்தேன்.  உன் பேரு என்னவென்று கேட்டேன். சம்ஷிகா என்றாள். உனக்கு எத்தனை வயசாகுது என்று கேட்டேன். எனக்கு நாலு வயது ஆகுது. இந்த வீட்டிலயே நான் தான் பெரிய ஆள் என்றாள். உங்க அப்பாவுக்கு எவ்வளவு வயசு ஆகுது என்று கேட்டேன். அதை போய் அவர்கிட்டே கேளு என்றாள்.
உனக்கு என்ன பிடிக்கும் என்றேன். அவள் ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் ரிமோட் கண்ட்ரோல் என்றாள். நண்பர் சிரித்தபடியே அது உண்மை, டிவி ரிமோட் கண்ட்ரோலை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தான் தூங்குகிறாள். இதற்காகவே வீட்டில் இரண்டு மூன்று ரிமோட் வாங்கி வைத்திருக்கிறேன் என்றார்.
எதற்காக ரிமோட்டைப் பிடிக்கும் என்று மறுபடி கேட்டேன். அந்தச் சிறுமி ரிமோட் இருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடலாம். உங்களை எனக்குப் பிடிக்காட்டி என் ரிமோட்டை அமுக்கினா நீங்க உடனே மாயமா மறைஞ்சி போயிருவீங்க.. இந்த ரிமோட் இல்லாட்டி எனக்கு போரடிக்கும் என்றாள். நாலு வயதில் அவளுக்கு உலகம் போரடிக்க துவங்கியிருக்கிறது பாருங்கள்.
நண்பர் பெருமையுடன் அவளை யார் வீட்டுக்கு அழைத்துப் போனாலும் முதலில் அங்குள்ள ரிமோட்டை எடுத்துக் கொண்டுவிடுவாள். தராவிட்டால் பிடுங்கி உடைத்து போட்டுவிடுவாள்.  ஒரு முறை திரையரங்கிற்கு அவளை அழைத்துக் கொண்டு போனோம். அங்கே சப்தம் மிகஅதிகமாக இருக்கிறது. ரிமோட்டை வைத்து சப்தத்தை குறையுங்கள் என்று சொன்னாள். அப்படி நாம் குறைக்க முடியாது இது தியேட்டர் என்றதும் கோபத்துடன்  அழத்துவங்கி எங்களை படமே பார்க்கவிடவேயில்லை.
டிவி ரிமோட், வீடியோ கேம் ரிமோட், பேட்டரி கார் ரிமோட், என்று ஏùழுட்டு ரிமோட் வைத்திருக்கிறாள். டிவியில் வேறு சேனல்களை நாம் மாற்றிவிட்டால் அவளுக்கு வரும் கோபத்தை தாங்கவே முடியாது. போடி நாயே, போடி தெண்டம் என்று திட்டுவாள் என்று சிறுமியின் அம்மா பெருமையாகச் சொன்னாள்.
நண்பர் வேடிக்கையாக. இவளாவது பரவாயில்லை என் அண்ணன் மகள் ஆறாம் வகுப்பு படிக்கிறாள். அவள் வீட்டிற்கு வரும் கூரியர்காரர் முதல் எங்கள் அப்பா வரையான அத்தனை பேரையும் மரியாதையின்றி அது வந்திருக்கு என்று தான் சொல்கிறாள். இந்தக் கால குழந்தைகள் எவருக்கும் மரியாதை கற்றுதரப்படவேயில்லை  என்றார்.
நண்பரின் மகளின்  பேச்சும் நடத்தையும் நாற்பது வயது ஆளின் நடத்தை போலவே இருந்தது. உனக்கு எப்படி இந்தச் சொற்கள் எல்லாம் தெரிந்தன என்று கேட்டேன் .உன் வேலையை பாத்துகிட்டு போ என்று சொல்லி முறைத்தாள்.
நண்பர் தன் மகளைத் தூக்கி கொஞ்சியபடியே உங்களை இத்தோடு விட்டுவிட்டாள். நாராயணன் சார் வந்தபோது அவரைப் பிடிக்கவில்லை.  வீட்டை விட்டு உடனே போகச்சொல்லு என்று ஒரே ஆர்ப்பாட்டம்.அவர்  காபி கூட குடிக்காமல் ஒடிப்போய்விட்டார் என்று சொல்லி சிரித்தார்.
சிறுவர்கள்  உலகம் முற்றிலும் மாறியிருக்கிறது. வன்முறை, அடிதடி, கொலை என ரசித்துப் பேசிக் கொள்கிறார்கள். மிதமிஞ்சிய கோபம், பணத்தின் மதிப்பே தெரியாமல் செலவு செய்வது, அடுத்தவர்களை வெறுப்பது, மற்றவர் பொருட்களை உடைத்து எறிவது என்று அவர்களின் மனஇயல்பில் வன்மம் கூடவே வளர்ந்து கொண்டிருக்கிறது.
கண்ணாடித் தொட்டியில் வளரும் மீன்களுக்குத் தன்னை இரைபோட விடவில்லை என்று ஒரு சிறுவன் அதில் பினாயிலை மொத்தமாக கொட்டி எல்லா மீன்களையும் கொன்றுவிட்டான். இன்னொரு சிறுவன் பக்கத்து வீட்டில் சைக்கிள் ஒட்டும் சிறுமியை கிரிக்கெட் மட்டையால் அடித்து உடைத்துவிட்டான். அந்தச் சிறுமி அவனைப் பார்த்து கேலியாக சிரித்துவிட்டாள் என்பது தான் காரணம். விளையாடுமிடங்கள், பொது இடங்கள், பள்ளி என்று எல்லா இடங்களிலும் குழந்தைகள்  விரோதமனப்பாங்கிலே சந்தித்துக் கொள்கிறார்கள்.
அண்டை வீட்டு குழந்தைகள் நம் வீட்டில் வந்து சாப்பிடுவதும். நம் குழந்தைகள் நண்பர்கள் வீட்டில் போய் சாப்பிட்டு வருவதும் பழங்கதையாகிப் போய்விட்டிருக்கிறது.உண்மையில் இரண்டு குழந்தைகள் ஒன்றையொன்று நேசிப்பதேயில்லை தானா?
நகராட்சி பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டில் ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அதை பார்த்தவுடன்  நீலநிற டீசர்ட் அணிந்த மற்றொரு சிறுவன் தானும் விளையாட வேண்டும் என்று தன் அம்மாவிடம் சொன்னான். போ. போய்விளையாடு என்றாள் அம்மா.
அதற்கு சிறுவன் அந்த சனியன் விளையாண்டுகிட்டு இருக்கான்மா. நீ அவனை அடிச்சித் துரத்து என்றான். அப்படி எல்லாம் சொல்லக்கூடாது என்று அம்மா சொல்லவேயில்லை. நீ போ நான் சொல்றேன் என்றபடியே உரத்த குரலில் டேய் தம்பி நீ தள்ளிக்கோ என்றாள்.
அதுவரை விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வேண்டுமென்றே இடத்தை அடைத்துக் கொண்டு டீசர்ட் அணிந்த சிறுவன் விளையாட இடம் தர மறுத்தான். மறுநிமிசம் அவனை பிடறியோடு பிடித்து தள்ளிவிட்டான் நீல நிறப் பையன்.  சிறுவன் சறுக்கி விழுந்து அடிபட்ட வலியோடு வேகமாக மேலே ஏறி நீல நிற பையனை அடிக்க ஒடினான். அவனோ பயத்தில் ஒடி அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டுவிட்டான். வலியோடு அந்த சிறுவன் மீண்டும் சறுக்குவிளையாட ஆரம்பித்தான்.
நீல நிற டீசர்ட் அணிந்தவன் மெதுவாக அம்மா பின்னாடியிருந்து எட்டிப்பார்த்து அவன் என் எனிமி அவனை நான் பாம் வச்சி கொல்லப்போறேன்  என்று சொன்னான். அம்மா அதை ரசித்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
இது யாரோ இரண்டு சிறுவர்களுக்கு நடக்கும் விசயமில்லை. நகரில் பெரும்பான்மை சிறுவர்கள் அப்படிதானிருக்கிறார்கள்.. எங்கே இன்னொரு சிறுவனை கண்டாலும் ஒரு கையாட்டல். புன்னகை எதுவும் கிடையாது. தொலைக்காட்சி தொடர்களில் இருந்து கற்றுக் கொண்ட  கடுஞ்சொற்களை அப்படியே பயன்படுத்துகிறார்கள். திரைக்காட்சிகள் போலவே அடித்தும் உதைத்தும் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
இவை யாவையும் விட சிறுவர்களிடம் எது குறித்தும் வியப்பேயில்லை.
சிறுவயதில் விமானம் கிராமத்தை கடந்து போனால் கூடவே ஒடுவோம். ரயில் போகும்போது கைகாட்டிக் கொண்டேயிருப்போம். ஊருக்குள் புதிதாக வரும் குரங்காட்டி பின்னாலே போவோம். யானை வந்தால் அவ்வளவு தான். அது ஊரைவிட்டுப் போகும்வரை கூடவே செல்வோம். இன்று விமானத்தை ஆச்சரியமாகப் பார்க்கும் ஒரு சிறுவன் கூட மாநகரில் இல்லை. இதைப் பற்றி ஒரு சிறுவனிடம் கேட்ட போது ஒருவேளை விமானம் வெடித்து கிழே விழுந்தால் நிமிர்ந்து அதை வேடிக்கை பார்ப்பேன். மற்றபடி வானில் பறக்கும் போது அதில் அதிசயப்பட என்னயிருக்கிறது என்று கேட்டான்.
முன்பெல்லாம்  பெரியவர்களின் உடைகள், காலணிகள், அணிந்து பார்க்கும் ஆசை சிறார்களுக்கு இருந்தது.  பொருந்தாத சட்டைகளை அணிந்து கொண்டு சிறுவர்கள் நடந்து வருவதைக் கண்டிருக்கிறேன். அது போல தங்கைகளை இடுப்பில் தூக்கி கொண்டு அலையும் சிறுமிகளை  காண்பதும் இயல்பாகவே இருந்தது. இன்று அப்படி ஒரு சிறுமி கூட கண்ணில் படவில்லை. தங்கையோ, தம்பியே பிறந்துவிட்டால் அவனை போட்டியாளனாகவே நினைக்கிறார்கள். நீ ஏன்டா பிறந்தே என்று கோபப்படுகிறார்கள்.
இன்று தன்னை விட இரண்டு வயது மூத்த அண்ணனின் சட்டையை போட்டுக் கொள்ளவே மாட்டேன் என்று தம்பி அடம்பிடிக்கிறான். அத்தோடு அது அவன் சட்டை அதை போடச் சொல்லி என்னை அசிங்கப்படுத்தாதே என்று அப்பா அம்மாவிடம் கோபப்படுகிறான். உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் போது அங்குள்ள வசதி குறைபாடுகளை சிறுவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். நேரடியாக அதைக் குறை சொல்லி அவர்களை அவமானப்படுத்துகிறார்கள்.
சேர்ந்து விளையாடுவது. சேர்ந்து உண்பது. சேர்ந்து சுற்றுவது என்ற கூட்டு செயல்பாடுகள் சிறார்களிடம் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.  ஆகவே தனியாக வீடியோ கேம் ஆடுவது தான் அவர்களின் பிரதான பொழுதுபோக்காகி இருக்கிறது.
நமது தவறுகள், பலவீனங்கள், பொய்கள், கோபம், இயலாமை, தடுமாற்றங்கள் இவைகளை  நமது பிள்ளைகள் எளிதாக கற்றுக் கொண்டுவிடுகிறார்கள். ஆகவே நம்மை தான் முதலில் திருத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
நிறையப் பேசி, நிறையப் பகிர்ந்து கொண்டு. நிறையப் பயணம் செய்து, அனுபவங்களின் வழியே உலகை அவர்களுக்குப் புரிய வைப்பது தான் எளிய வழி. அதைச் செய்வதற்கு  நமக்கு விருப்பமில்லாமல் எப்போதுமே சிறுவர்கள் பார்த்துக் கத்திக் கொண்டேயிருக்கிறோம்.ஆகவே அவர்கள் இப்படிதான் வளர்வார்கள். வேறு வழி. என்ன இருக்கிறது **

1 comment:

  1. very nice blogging ... its really true ... its kind of embarrassing to talk to kidz this days becos of the language they uses and the worst part is the parents enjoying their talks... there many kids like this in our family too...

    ReplyDelete