Sunday, October 24, 2010

‘தமிழில் இப்படி ஒரு சினிமா வந்துவிட்டது- ஆனந்த் அண்ணாமலை

வேறு எதுபற்றியும் துவங்குவதற்கு முன் டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்துபற்றிப் பேசிவிட வேண்டும்.
இரண்டு காரணங்கள்:
இரண்டாவது காரணம் முதலில் 2) சென்ற இதழ் கட்டுரையில் இந்தப் படம் பற்றி, ‘தமிழில் இப்படி ஒரு சினிமா வந்துவிட்டது என்று நம்பமுடியாத அளவுக்கு வடிவம்-செய்நேர்த்தி- உள்ளடக்கம் என அனைத்திலும் புதுமையும் நிறைவும் கூடிய ஒரு முழுமையான கலைப்படைப்பு’ – இப்படி ஒரே ஒரே ஒரு வரி எழுதி விட்டுவிட்டேன். அனேகம் பேர் பார்த்திராத ஒரு சினிமாவைப் பற்றி இப்படி ஒற்றை வரியைப் போகிற போக்கில் உதிர்த்து விட்டு நிறுத்திக்கொள்வது எனக்கே அநியாயமாகப் படுகிறது.
அதை விட முக்கியமான முதல் காரணம், 1) ஆடும் கூத்து என்ற சினிமாவைப் பற்றி என்ன பேசினாலுமே, அது கலை பற்றிய, படைப்பாளிகள் பற்றிய, படைக்கும் மனதுக்கும் சராசரி மனதுக்கும் இடையேயான இயங்கியல் ரீதியான வித்தியாசம் பற்றிய பேச்சாகவே சென்று முடியும். ஆக, இதுபோன்ற சொல்லாடல்களை இப்போதே உருவாக்கிவிடுவது பிற்பாடு வேறு விஷயங்களை வேறு கட்டுரைகளில் பேச உதவியாக இருக்கும் என்பது என் எண்ணம்.
எனவே இந்த வாரப் பேசுப்பொருள், ஆடும் கூத்து.

வெளியி லிரத்தக் களியொடு பூதம்பாடப்- பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்- களித்
தாடுங் காளீ! சாமுண்டீ! கங் காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.
-பாரதியின் வரிகள், ஆண் குரலில், அமானுஷ்யமான தாளகதியில் வாத்தியங்களின் ஒலிச் சேர்க்கையுடன் செவி சேர, இருண்ட திரையில் டைட்டிலை ஓடவிட்டபடி துவங்குகிறது ஆடும் கூத்து.
துவக்கக் காட்சியில் ஒரு கிராமத்து வாய்க்காலில் மூன்று பேர் சேர்ந்து ஒரு ஆளை வெட்டுகிறார்கள். காமெரா கோணம் அங்கிருந்து நகர்ந்து அருகிலிருக்கும் திருவிழா திடலில் சுற்றும் ராட்டினத்தைக் கண்டடைகிறது. ராட்டினத்தின் ஒவ்வொரு பெட்டியாக மேலே வர, கதா நாயகியான மணிமேகலை அமர்ந்திருக்கும் பெட்டி மேலே வரும்போது அவள் ராட்டினத்தை நிறுத்தச் சொல்லிக் கத்துகிறாள்; அருகேயிருக்கும் வாய்க்காலில் கொலை ஒன்று நடப்பதாகவும் தான் அதைப் பார்த்ததாகவும் கூறி அதைத் தடுக்க வேண்டி, தன் தந்தை மற்றும் பிற ஆட்களைக் கூட்டிக் கொண்டு விரைகிறாள். வாய்க்காலில் கொலை நடந்ததற்கான தடயமேதும் இல்லை. நடக்காத ஒன்றைக் கற்பனை செய்து அனைவரையும் தொல்லைப்படுத்திவிட்டதாக அனைவரும் சலித்துக் கொள்கிறார்கள். மணிமேகலையோ தான் பார்த்த காட்சியின் உண்மை மேல் பிடிவாதமாக இருக்கிறாள்.
நுண்ணுணர்வு மிக்க பார்வையாளன், சுழலும் ராட்டினத்தின் மற்ற பெட்டியிலிருப்பவர்கள் காணாததை மணிமேகலை மட்டும் கண்டு பதறும் இந்தக் காட்சியின் மூலம் பிறரின் கண்ணுக்குத் தென்படாத தரிசனம் அவளுக்கு மட்டும் தட்டுப்படுகிறது என்று குறியீட்டு ரீதியான அர்த்தம் வரிந்து கொள்ளும் வகையில் இந்த காட்சியின் அமைப்பு செயல்படுகிறது. இப்படியாக இயக்குனர், பார்வையாளனுக்குக் காட்சிதோறும் தான் வழங்க உத்தேசித்திருக்கும் அனுபவத்திற்கான அடித்தளத்தினை முதற்காட்சியிலேயே வலுவாக அமைத்துக் கொண்டு விடுகிறார்.
தொடர்ந்து வரும் காட்சிகள், மணிமேகலை சராசரி மனிதர்களிடமிருந்து எப்படி மாறுபட்டவளாக இருக்கிறாள் என்பதாக, அவளது இலக்கிய ரசனை, துடுக்குத்தனமான பேச்சு, சட்டென்று மாறுபடும் உணர்ச்சி நிலைகள், முகபாவங்கள்,விளையாட்டுத்தனங்கள் போன்றவற்றை மையப்படுத்தி காட்டப் படுகிறது. தன் குடும்பத்தினர் முதல், தான் பயன்படுத்தும் நூலகத்தின் நூலகர் வரை அனைவரின் பிரியத்துக்குரியவளாகவும் அதேசமயம் அவர்களுக்கிடையே தனதேயான ஆளுமை கொண்ட வளாகவும் மணிமேகலை இயக்குனரால் சித்தரிக்கப்படுகிறாள்.
பின்னணி இசை, சூழலின் அமைதிக்கு ஆனவரை வழிவிட்டு, அதேசமயம் காட்சி கொண்டு செலுத்தும் உணர்வு நிலைகளுக்கு மிகையாகிவிடாமல் அங்கங்கே சிறகு விரித்து, அமைதியைக் கலைத்து விடாதபடிக்கு ஊடாடியபடி சித்தரிப்பை உரு கொள்ளச் செல்கிறது. காமெரா செயற்கை ஆடம்பரங்கள் இல்லாத இயற்கையான ஒளியூட்டலில், பதற்றமின்றி, நிலைக்குமிடம், நகருமிடம், தெரியாதபடிக்கு இயல்பாக செயல்பட்டு காட்சிகளை எளிமைபடுத்தி தருகிறது. இந்த செய்முறை மூலம் இயக்குனர் படத்திற்கு முக்கியமான நம்பகத்தன்மையைப் பார்வையாளரிடம் சாதித்துக் கொள்கிறார்.
மணிமேகலை மீது காதல் கொண்டிருக்கும் அவளது அத்தை மகன் அவளுக்கு ஒரு வளையலை பரிசளிக்கிறான். அந்த வளையல் அவளின் வாழ்வின் போக்கை முற்றிலுமாக மாற்றத் துவங்குகிறது. குளத்தில் குளிக்கச் செல்லும் மணிமேகலை வளையலிலிருந்து புறப்படும் ஒளிக்கீற்றில் விரியும் பழைய கருப்பு வெள்ளை சினிமா ஒன்றை பார்க்கிறாள். அது பற்றி அவள் பிறரிடம் சொல்லப் போக, ஒரு புறம் பிறர் அவளது மன நிலையை சந்தேகிப்பதும், மறுபுறம் அந்த பழைய சினிமாவின் காட்சிகள் திடீர் திடீரென ஒருவித மாயத்தன்மையுடன் மணிமேகலையின் கண்முன் தோன்றி அவளைத் துரத்துவதுமாக காட்டப்படுகிறது. இதில், அந்தப் பழைய சினிமாவின் காட்சிகள் கருப்பு-வெள்ளையாகவும், அதன் பாதிப்பாக அதைச் சார்ந்து அவளாக பிரமை கொள்ளும் காட்சிகள் வண்ணக் காட்சிகளாகவும் திரையில் தோன்ற, நிகழ்வும், அந்த நிகழ்வு நுண்ணுணர்வு மிக்க மனதொன்றின் மீது செலுத்தும் பாதிப்பும், நேர்த்தியான படத்தொகுப்பின் துணையுடன் சிக்கலின்றி அழுத்தமாகப் பதிவேற்றம் பெறுகின்றன.
இதற்கிடையில் பிணம் ஒன்று கண்டெடுக்கப் பட, மணிமேகலை திருவிழாவில் பார்த்ததாகச் சொன்ன கொலை நிரூபணமாகிறது. ஒருபுறம் அவள் கூறியது நிஜமென்று ஆசுவாசமும் மகிழ்ச்சியும் கொண்டாலும் குடும்பத்தினர் வளையலிருந்து சினிமா தெரிகிறது என்று அவள் கூறுவதை நம்ப முடியாமல் திகைக்கின்றனர்; மனநோய் மருத்துவரை அணுகுகின்றனர். மருத்துவர் கைவிரிக்க, மணிமேகலை திடீர் திடீரென காணும் கருப்பு-வெள்ளை சினிமாக் காட்சிகளின் கற்பனை வெளியில் திரைக்கதை தொடர்ந்து பயணிக்கிறது.
மணிமேகலை துளித்துளிகளாகக் காணும் சினிமாவில், கூத்தாடிகள் இருவர் காதலர்களாக வருகின்றனர். கூடவே ஊர்மக்களைப் பலவகையில் கொடுமைப்படுத்தும் ஜமீன்தாரென ஒருவனும் வருகிறான். ஜமின்தார் கூத்தாடிப் பெண்ணின் மேல் சபலம் கொண்டு அவள் காதலனை வெளியூருக்கு அனுப்பிவிட்டுத் தன் ஆட்களை விட்டு அந்தப் பெண்ணைத் தூக்கி வரச் சொல்கிறான். அந்த பெண் அவனுக்கு அடிபணிய மறுப்பதால் அவளுக்குத் தாசியென்று முத்திரைகுத்தி ஊர் மத்தியில் மரத்தில் கட்டிவைத்து மொட்டை அடிக்கிறான். இவையாவும் உரையாடல்களின் துணையின்றி, கூத்தாடிகள் பயன்படுத்தும் இசைக்கருவிகளுடன் நூதனமான கலவியாக பின்னணி இசை சேர்ந்து ஒலிக்க, காமெரா கோணங்களின் ஆளுமையில் காட்சியாக்கப் பட்டு ஒரு அசலான, அற்புதமான, சினிமா அனுபவத்திற்குப் பார்வையாளர்களாகிய நாம் ஆட்படுத்தப்படுகிறோம்.
அத்தை மகனுடன் திருமணம் நடக்க இருக்கும் நிலையில்,சரியாக மணமேடையில் அமர்ந்திருக்கும் வேளையில் மணிமேகலை காணும் படத்தின் உச்ச காட்சியான மொட்டை அடிக்கப் படும் காட்சி அவள் முன் தோன்றுகிறது; மொட்டையடிக்கப்படும் அந்தப் பெண் வேறு யாரோ அல்ல தானேதான் என்று உணர்கிறாள்; மணமேடையிலிருந்து இறங்கி ஓடுகிறாள்; திருமணம் நின்று போக, திரைக்கதை தன் புதிர்த் தன்மையில் முழு வீச்சை அடைகிறது.
படத்தின் இரண்டாவது பகுதியில், மணிமேகலை பார்த்ததாகக் கூறும் அந்த சினிமா அவள் கற்பனை அல்ல, நிஜமாகவே 30 வருடங்களுக்கு முன் கடையநல்லூர் என்ற கிராமத்தில் அப்படி ஒரு படம் எடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது என்ற தகவல் தெரிய வருகிறது. இந்த இடத்தில் புதிர் தன்மை வினோதமாக வடிவெடுக்க, கதாபாத்திரங்களுடன் சேர்ந்து பார்வையாளர்களான நாமும் நம்மை அறியாமல் நிகழ்வுகளின் காரண காரியத்தை, தர்க்க சாத்தியங்களை, தர்க்கங்களுக்கு அப்பாற் பட்ட தளத்தில் எதிர்கொள்ளத் தயாராகிறோம்.
மணிமேகலையும் அவளது அத்தை மகனுமாகச் சேர்ந்து அந்தக் கிராமத்துக்குச் சென்று அந்தப் படத்தில் ஜமீன்தாராக நடித்த லூயிஸ் பாபு என்ற பள்ளிக்கூட வாத்தியாரைச் சந்திக்கிறார்கள். 1975 ல் திரைப்படக் கல்லூரியிலிருந்து வெளிவந்த இயக்குனர் ஞானசேகரன் எடுக்க முயன்று நின்று போன படம் அது. ஞானசேகரன் அந்தப்படத்தை எடுக்க முயன்ற கதையைத் தன் வயோதிக காலத்தில் இருக்கும் லூயிஸ் பாபு நினைவு கூர்ந்து சொல்வதாகக் காட்சியாக்கப் பட்டிருக்கிறது.
பிற்பகுதியின் திரைக்கதையில், ஞானம் தன் சிறுவயதில் பார்க்க நேர்ந்த, ஒடுக்கப் பட்ட பெண் ஒருத்தியை அந்த ஊரின் அதிகாரப் புள்ளியான ஜமீன்தார் ஊர் மத்தியில் வைத்து மொட்டைஅடித்த உண்மைக் கதையை, சினிமாவாகப் பதிவு செய்யப் போராடுகிறான்; அது தன்னுடையதாக, தான் வரிந்து கொண்ட கமிட்மெண்ட்என்கிறான்.
அவன் இயக்கும் படத்தில் அவனே கூத்தாடி இளைஞனாக நடிக்க, அவனது காதலியான கூத்தாடிப் பெண்ணாக நடிக்கும் நடிகை பிரபா, மணிமேகலையுடன் உருவ ஒற்றுமை உடையவளாகக் காட்டப் படுகிறாள் ( நவ்யா நாயர் இரட்டை வேடம் பூண்டு நடித்திருக்கும் கதாபாத்திரம்).
ஞானம் படப்பிடிப்பை நடத்தும் விதம், துடிப்புடன் காட்சியை நடிகர்களுக்கு விவரிக்கும் முறை, படத்தின் உருவாக்கத்தில் அமிழ்ந்து போகும் தன்மை, பிரபா சினிமாவுக்காக மொட்டை போடத் தயங்குவது, பின் ஞானத்தின் முயற்சியின் மேல் ஈடுபாடு கொண்டு ஒப்புக்கொள்வது, படத்தினுள் கூத்தாடிக் காதலர்களாக நடிக்கும் பிரபாவுக்கும் ஞானத்துக்குமிடையே படத்துக்கு வெளியே அந்த காதல் கசியத் துவங்குவது என காட்சிகள் கோர்க்கப்பட்டிருக்கும் முறையும், அவை படத்தொகுப்பு செய்யப்பட்டிருக்கும் விதமும், குறுக்குவெட்டாக சம்பவங்கள் நினைவுகூர்ந்து கூறப்படுக் கொண்டிருக்கும் தற்கால காட்சிகளுமாய் திரைக்கதை இம்மி அளவும் தொய்வடையாமல், ஃப்ளாஷ் பேக் பார்க்கிறோம் என்ற சலிப்பை ஏற்படுத்திவிடாமல் படத்தை முன்னெடுத்துச் செல்கிறது. உண்மையில் நிகழ்காலத்துடன் பின்னிப் பிணைந்து இருப்பதால் அதை ப்ளாஷ் பேக் என்று சொல்வது கூட தவறு. இங்கே, வழக்கமான தமிழ் சினிமா பாணியில், ஃப்ளாஷ் பேக் மூலம் திரைக்கதை பின் நகர்ந்து செல்வதில்லை. மாறாக, கூடுதல் சுவாரஸ்யத்துடன் முன்நோக்கி நகர்கிறது!
ஞானம் தன் படத்தில் சித்தரிக்கும் ஜமீன்தாரின் வாரிசான, (படப்பிடிப்பு நடக்கும் காலத்தின்), ஜமீன்தார் தன் வம்சப் பெருமையைக் காக்க வேண்டி தகராறு செய்து படப்பிடிப்பைத் தடைசெய்கிறான்; படம் நின்று போகிறது. படத்திற்காக மொட்டை அடித்து, கடைசியில் படமும் நின்று போக, பிரபா தற்கொலை செய்து கொள்கிறாள். உடைந்துபோகும் ஞானம், சினிமாவில் சாதிக்க முடியாததை நிஜ வாழ்வில் சாதிக்க முடிவு செய்கிறான். ஊர் மக்களுக்குத் தொடர்ந்து கொடுமைகள் செய்து வரும் ஜமீன்தாரின் வாரிசான அப்போதைய ஜமீன்தாரைக் கொலை செய்து விட்டு சட்டத்தின் கைகளில் சிக்கி உயிரை விடுகிறான்.
ஞானசேகரனின் கல்லறையை மணிமேகலை லூயிஸ் பாபுவுடன் சென்று காண்கிறாள். அதில் அவனுக்குப் பிடித்தமான அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னைஎன்ற வரிகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. அதைக் காணும் மனிமேகலை அந்த வரிகளை மீண்டும் மீண்டும் தனக்குள்ளாக உச்சரித்துப் பார்க்க, அவள் முகம் தெளிவு கொள்கிறது. குறுக்குவெட்டுக் காட்சியாக ஞானம் தன் கதாநாயகியிடம் அதான் நான் இருக்கேன்ல’, என்று சொல்வது மணிமேகலைக்கு சொல்லப்படுவதாக காட்டப்படுகிறது. மணிமேகலை தன்னைத்தானே அடையாளம் கண்டு கொண்டு விட்டாள் என்பதை இக்காட்சியின் மூலம் இயக்குனர் நமக்கு எளிமையாக உணர்த்திவிடுகிறார்.
ஞானம் சிறுவனாகப் பார்க்க நேர்ந்த அந்த மொட்டை அடிக்கப்பட்ட தலித் பெண் வயதேறிய மூதாட்டியாக, தற்காலத்திலும் உயிருடன் இருக்கிறாள். அவளைத் தேடிப் பிடித்து மணிமேகலை அந்த சம்பவத்தை, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக காட்சி ஊடகத்தில் பதிவு செய்கிறள். ஞானம் 1975 விட்டுப்போன பணி 30 வருடங்கள் கழித்து மணிமேகலையின் மூலமாகப் பூர்த்தியாகிறது.
படத்தின் இறுதிக்காட்சியாக, மணிமேகலை எடுத்த படம் திரையிடப்பட, படத்திற்காக மொட்டை அடித்த மணிமேகலை கண்களில் ஒளி மிளிர, திரையைப் பார்க்கிறாள். காமெரா அவள் முகத்தில் நிலைகொள்ள, படத்தின் துவக்கத்தில் ஆண்குரலில் ஒலித்த பாரதியின் வரிகள் இப்போது பெண் குரலாக அதே அமானுஷ்ய தாள கதியுடன் ஒலிக்கப் படம் நிறைவு பெருகிறது!
தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ கவிதை வரிகள் (அல்லது கவிதை போல் பாவனை செய்யும் வரிகள்) வசனங்களின் ஊடே உரையாடலின் பகுதியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கவிஞன் ஒருவன் தன் ஆழ்மனத் தூண்டுதலினால் உருவாக்கிய உக்கிரமான வரிகள் வழி, படிமங்கள் வழி ஒரு இயக்குனர் பயணித்து அதன் கவித்துவத்தை, அதன் பிரும்மாண்டத்தை, தன் நோக்கில் அணுகி, அதனை முழுக்க முழுக்க ஒரு சினிமாவாக விரித்தெடுப்பது எனக்குத் தெரிந்தவரை இதுவே முதல் முறை (தமிழில் சினிமா எடுக்கப் படும் சூழலை கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால் இதுவே கடைசி முறையாகவும் இருக்கலாம்!).
படத்தில் காட்சிதோறும், (அல்லது காட்சி தவறாது) இயக்குனர் பொதிந்து வைத்திருக்கும் நுட்பங்கள் படத்திற்குப் பல வகை அர்த்த சாத்தியங்களை, திறப்புகளை உருவாக்கித் தருகிறது. உதாரணமாக, முதல் காட்சியில் வாய்க்காலிலிருந்து பக்கத்து திருவிழா ராட்டினத்திற்கு காமெரா நகர, பின்னணியில் திருவிழாவின் அலங்கார விளக்கமைப்பின் வடிவாக சக்தியின் வெவ்வேறு சொரூபங்கள் காட்சிக்குள் வந்து செல்கின்றன. படத்தின் மையமாகச் செயல்படும் பாரதியின் வரிகளுடன் இதனைப் பொருத்திப் பார்க்கையில் காட்சிக்குப் புதியதொரு பரிமாணம் பிறக்கிறது!
மணிமேகலை பார்த்த கொலையைச் சாட்சி கிடைக்கும்வரை யாருமே நம்பாத நிலையில், அவளது தோழர்களான குழந்தைகள் மட்டும் நம்புவதாகக் கூறுகிறார்கள். மேலுக்கு சாதாரண சொல்லாடல் போல் தோற்றமளிக்கும் இந்தக் காட்சி மூலம் குழந்தைகள் உலகை, தர்க்கத்தை சார்ந்திருந்திராத அவர்களின் தூய்மையான மனநிலையின் ஆழத்தை, இயக்குனர் அநாயாசமாகத் தொட்டுச் செல்கிறார்!
மணிமேகலையைக் காதலிக்கும் அவள் அத்தை மகன், அவளை முழுக்கத் தான் நம்புவதாகவும், அதே சமயம் அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான தடயம் எதுவுமில்லை என்பதால் தயக்கமாக இருப்பதாகவும் கூறுகிறான். அதற்கு மணிமேகலை. உனக்கு மற்றவர்கள் பரவாயில்லை. நான் சொல்வதை அவர்கள் நம்பவில்லை, அதைத் தெளிவாகச் சொல்லவும் செய்கிறார்கள், நீயோ நான் சொல்லுவதும் சரி என்கிறாய், அவர்கள் சொல்வதும் சரியென்பது போல் பேசுகிறாய் என்கிறாள். இந்த ஒற்றை வரியில் மானுட உலகில் நிலவும் மூன்று மனப் பக்குவங்கள் நமக்கு தரிசிக்கக் கிடைக்கிறது. 1)நுண்ணுணர்வு மிக்கதொரு மனது 2)அது கண்டு சொல்லும் தரிசனத்தை ஏற்கத் தயாராக இல்லாத பெரும்பான்மையின் மனது 3)இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் ஊசலாடும் நடு நிலை மனது!
இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்; ஒவ்வொரு காட்சியிலும் பல்வேறு புரிதல் நிலைகள் நுட்பங்களாகச் சிதறிக் கிடக்கின்றன. படத்தின் சம்பவக் கோர்வைகள் குறியீடுகளாகச் செயல்பட்டு தமிழ் சினிமா ரசிகனுக்குப் புதிய தளங்களையும் புத்தம் புதியதொரு அனுபவத்தையும் வழங்குகிறது. தலித் அரசியல், ஒடுக்கப்பட்டோருக்கு இழைக்கப் படும் அநீதிகள், 1975 ன் எமர்ஜென்சி அரசியல் என யாவுமாகச் சேர்ந்து, கலை ஆர்வம் கொண்ட அநியாயங்களைப் பொறுக்காத மனம் ஒன்று கொள்ளும் படிமங்களுடன் பிணைந்து தர்க்கத்தை தாண்டிச்செல்லும் புனைவாக, திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. பார்க்கப் பார்க்க விரிந்து கொண்டே செல்லும் காட்சிப் புனைவு இது.
வேறு எதைத் தவற விட்டாலும் இந்தப் படத்தில் புகழ்பெற்ற மலையாள நடிகரான ஜகதி ஸ்ரீகுமார் ஏற்று நடித்திருக்கும் மனநோய் மருத்துவரின் பாத்திரத்தைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லி விட வேண்டும். மணிமேகலையைச் சோதிக்கும் இவர், அவளின் அதீத கற்பனைக்கு அவள் வாசிக்கும் புத்தகங்கள் காரணமாக இருக்கலாம் என்று நினைத்து அவற்றைப் பார்வையிட முயலுகிறார்.
தி. ஜானகிராமன்! மெளனி! அசோகமித்திரன்! ஜெயகாந்தன்! பஷீர்! பாரதியார்! அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறார். மணிமேகலையின் தந்தையிடம், உள்ளே ஒருத்தர் ரெண்டு பேர் இல்லை ஒரு நாசக்காரக் கும்பலே இருக்கிறது, Very Dangerous Gang, இவர்களையெல்லாம் படித்தால் இதைவிட குழப்பமான கனவுகளெல்லாம் வரும், உடனே இந்த புத்தங்களையெல்லாம் வேறு இடத்துக்கு மாற்றி விடுங்கள் என்கிறார். புத்தகங்கள் அறைமாற்றப் படுகின்றன. சில காட்சிகளின் நகர்வில் மணிமேகலை கொலை பற்றி சொல்லியது கற்பனை அல்ல நிஜம் என்று நிரூபிக்கப்பட, அவள் தன் தந்தையிடம், நான் சொல்லியது பொய் இல்லையென்றால் இவர்கள் சொல்வது பொய்யில்லை தானே? இவர்களை மீண்டும் என் அறையில் சேர்த்துக் கொள்ளலாமா என்று கேட்டு அனுமதி பெறுகிறாள். தமிழ் சினிமாவில் இலக்கிய வாதிகள்/ படைப்பாளிகள் இதை விட நுணுக்கமாக மரியாதையும் மதிப்புமாய் உயரத்தில் வைத்து எந்தக் காலத்திலும் பதிவு செய்யப்பட்டதில்லை. இயக்குனர் அதை நகைச்சுவை போன்ற பாவனையில் அற்புதமாக நிகழ்த்திக் கொண்டு திரைக்கதையினுள் உளவியல் சித்தரிப்பாகப் பயன்படுத்திக் கொண்டும் விடுகிறார்!
ஜகதி, உளவியல் பூர்வமாக நுண் தன்மை வாய்ந்ததொரு மனதை அணுகி தோல்வியுறும் மருத்துவரின் பாத்திரத்தை வார்த்தைகளின் துணை அதிகமின்றி தன் உடல் மொழியாலும் வசன உச்சரிப்பாலுமே உணர்த்துவதுடன், அதை முதல் தர நகைச்சுவையாகவும் மாற்றி விடுகிறார். மன நோய் மருத்துவராக வரும் இவர், சோதனை செய்து கொண்டிருக்கும்போதே தனதேயான மனவெளியில் மூழ்கிப் பிரமை நிலைக்குச் சென்று திடுக்கிட்டு மீளும் இடங்கள் எவரையும் சிரிக்க வைப்பவை; அதைப் பயன்படுத்தி சிரிப்போடு சிரிப்பாக இயக்குனர் மனோதத்துவ முறைகளின் மீதான ஆழமான பரிசீலனை ஒன்றையும் உருவாக்கிச் செல்கிறார்.
இப்படியாக, ஆடும் கூத்து’ என்ற இந்தப் படம் கலைஞர்களின் மன அமைப்புக்கும் சராசரி மனிதர்களின் மன நிலைக்கும் இடையேயான சமன்பாட்டை சமூக தளத்தில் தேடிச் செல்கிறது. படைப்பின் இயங்கு விசைகளையும் படைப்பாளியின் நுண்ணுணர்வு அந்த இயங்குவிசைகளைச் சென்றடையும் விதத்தையும் அபாரமாக, சிலபல காலங்களின் இணைப்பாகச் சுழலும் திரைக்கதை வழி முன்வைக்கிறது. கலைஞனின் அகம் சார்ந்த இருப்பையும், அது தான் வாழ நேரும் சமூகத்தின் குரலாக ஒலிக்கத் துவங்கும் விதத்தையும், அதற்கு எந்தக் காலத்திலும் பிற கலைஞர்கள் மூலம் ஒரு தொடர்ச்சி இருப்பதையும் அனுபவமாக்கிப் பேசுகிறது. முக்கியமாக இந்தப் படம் தான் தொட்டுச் செல்லும் எந்த ஒரு தளத்திலும் எந்த ஒரு முன் முடிவையும் வைக்காமல், நேரக் கூடிய அத்தனை விவாதங்களுக்கும் ஏதுவாக, தன்னை முழுக்க முழுக்க திறந்தே வைத்திருக்கிறது. இந்த படத்தினை எந்த ‘இஸ’ த்தைக் கையில் எடுத்துக் கொண்டும் ஒரு விமர்சகர் அணுகலாம், ஆனால் அதேசமயம் 'இஸ'ங்களை மையமாக்கிச் சொல்லாடல் கொள்வோமானால் அது படம் உணரக் கொடுக்கும் பிரம்மாண்டத்தைச் சுருக்கி கலை அனுபவத்தைக் குறுகலாக்கி விடக் கூடிய அபாயமும் உண்டு. இது உருவாக்கி முன்வைக்கும் கவித்துவ நிலைகளின் ஆழம் வார்த்தைகளில் வடிக்க இயலாதது; படத்தைப் பார்த்தே ஒருவர் அனுபவம் கொள்ள வேண்டியது.
தேசிய விருதுபெற்ற இயக்குனரான டி.வி.சந்திரன், மலையாளத்தில் பல படங்களை இயக்கியுள்ளார். மம்முட்டி உட்பட பல நட்சத்திர நடிகர்களும் இவரது படைப்புகளில் பங்கேற்று விருதுகளும் பெற்றிருக்கிறார்கள். ‘ஆடும் கூத்தை’ இவர் தமிழில் எடுத்ததற்கான காரணம், பாரதி உருவாக்கிய கலைப்பித்தேறிய தருணங்களின் மீது இவர் அனுபவரீதியாகக் கொண்டுள்ள பிடிமானம் என்றே நினைக்கிறேன். மைய இழையாக செயல்படும் பாரதியின் சொல்வீச்சினை சப்டைட்டில் மொழிபெயர்ப்பு மூலம் தமிழ் மொழி பரிச்சயமில்லாத உலக அரங்கின் பார்வையாளர்கள் எளிதாக உணர்ந்து விடக் கூடும் என்று தோன்றவில்லை. தவிர, இந்தப் படத்தினை முழுமையாக உணர்ந்து உள்வாங்கிக் கொள்ளவதென்பது கலை காட்டும் உன்மத்த நிலைகளை ஓரிரு முறையேனும் தரிசித்தவர்களுக்கே சாத்தியம். மற்றவர்களுக்கு இது சுவாரஸ்யமான, வித்தியாசமான, விசித்திரமான படம் என்ற அளவில் முடிந்துவிடக் கூடும். தமிழ் சினிமா பார்வையாளர்களில் எத்தனை பேர் அப்படிக் கலை உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது படைப்பாளிகள் எவரும் அறிந்ததே. ஆக உலக சந்தையிலும் சரி... உள்ளூர் சந்தையிலும் சரி ஆடும் கூத்து’ வணிக அளவில் வெற்றிபெறும் சாத்தியங்கள் மிக மிகக் குறைவு. அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் படத்தினைத் தயாரித்த லைட் அண்ட் ஷேடோ நிறுவனத்தினர் கலை ரசிகர்களின் வியப்புக்கும் நன்றிக்கும் உரியவர்கள்.
படத்தின் மற்றொரு விசேஷம் என்னவென்றால் குறைவான பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. மூன்று தமிழ் இயக்குனர்கள் இந்தப் படத்தில் நடிகர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள். பாண்டியராஜன் (மணிமேகலையின் உறவினர்), சேரன்(கூத்தாடியாக வரும் இயக்குனர் ஞானம்), சீமான்(ஜமீன்தார்). முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சேரன் இந்தப் படம் உருவாக்கம் கொண்ட 2005 ம் வருடத்தில் ஆட்டோகிராஃப் படத்தின் வெற்றிக்குப் பின்னான உச்சத்திலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர்கள் போக, லூயிஸ் பாபுவாக பிரகாஷ்ராஜும், மணிமேகலையின் தந்தையாக தலைவாசல் விஜய்யும், ஞானம் எடுக்க முயலும் சினிமாவின் தயாரிப்பாளராக கொச்சின் ஹனீஃபாவும், மணிமேகலையின் தாயாக ரேகாவும், மொட்டை அடிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட பெண்ணின் மூதாட்டி வேடத்தில் மனோரமாவும் நடித்துள்ளனர்.
இத்தனை பிரபலங்கள் கூடி வணிக வெற்றி ஈட்ட வழியில்லாத ஒரு முழுமையான கலைப் படைப்பில் பங்கேற்பதென்பது தமிழ் சினிமா உலகில் மிக மிக அபூர்வமாக நிகழ்வது. சொல்லப் போனால் தர்க்க ரீதியான சாத்தியமில்லாதது. இது நிகழ்வதற்கு இயக்குனர் டி.வி.சந்திரனின் படைப்பு சார்ந்த ஆளுமை மீது பிற கலைஞர்கள் கொண்டிருக்கும் மதிப்பே காரணமாக இருக்க முடியும்.
டி.வி. சந்திரன் இதற்கு முன்னும் தமிழில் படமெடுத்திருக்கிறாராம். 1985ல் ஹேமாவின் காதலர்கள்’ என்றொரு படம். தியடோர் பாஸ்கரனின் கட்டுரை ஒன்றிலிருந்து அறியக் கிடைத்த தகவல் இது. படம் எப்படிப்பட்டது என்று தெரியவில்லை. இனிமேல் தான் தேட வேண்டும்.

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட- வெறும்

No comments:

Post a Comment