Friday, December 14, 2012


விரிசலுக்குப் பிற்பாடும் 
                                                    - பத்மநாபபுரம் அரவிந்தன் -

உனக்கும் எனக்குமான நட்பில் 
விழுந்த விரிசல் - உன்
ஒரு சொல்லால் விளைந்தது 
பிற்பாடு நீ கேட்ட மன்னிப்புகள் அத்தனையும்
உன்னையே நிலை நிறுத்தி    
என்மீதுக் கவிழ்ந்ததாய் இருக்க 
விரிசல் விரிவடைந்த பிற்பாடு 
நீயோ, நானோ பரஸ்பரம் 
பார்ப்பதைத் தவிர்த்தும் 
எதேச்சையாய் உன்னை எங்காவதுக்
காணும் போதினில் இதயம் சுற்றி 
வலையொன்று இறுக்கும்..

கண்கள் தானாய் வேறிடம் நோக்கி 
கால்கள் அதுவாய்த் திரும்பி நடக்கும்
மனதுள் மட்டும் ஏக்கம் புரண்டு 
நீ அழைக்கும் குரல் கேட்க 
காதுகள் விடைத்துக் கூர்மையாகும் 

உனக்கும் வாய்வரை வார்த்தைகள் வரலாம் 
அடக்கிக் கொள்கிறாய் என்னைப் போலவே 

எது எப்படியாயினும் உன்னைப் பற்றி 
தவறாய் எவரேனும் சொல்லும் போது
என்னையும் அறியாக்  கோபம் வரும்  
இன்னமும் உள்ளே 
எங்கோக் கிடக்கிறது உனக்கான 
என் நட்பின் உதிரித் துளிகள் ..





பூனைகளின் மரணம் 
                                            - பத்மநாபபுரம் அரவிந்தன் - 

யாரேனும் கண்டதுண்டோ .. பூனைகளின் 
இயற்கையான மரணத்தை? 
வாகனங்களில் அடிபட்டோ , நாய்களால் 
கடிபட்டோ இரை பிடிக்கத் தாவுகையில் 
தவறிக் கிணற்றுள் விழுந்தோ ..
விபத்து சார்ந்த மரணங்களையன்றி 
பூனைகளின் இயற்கையான மரணம் 
மனித மனதைப் போல பெரும் புதிர்...

குறிகிய இடத்துள் நெளிந்து நுழையும் 
உயர இடத்தில் பரபரக்க ஏறும் ...
எப்படித் துக்கிப் போட்டாலும் 
கால்கள் ஊன்றித் தரையிறங்கும் 
புழுதியில்ப் புரண்டு அழுக்காகும் 
நாக்கால் நக்கியே தூய்மையாகும் 

விரட்டி வேட்டயாடி .. சில நேரங்களில் 
வேடிக்கையாய் விளையாடி ..
புணர்தல் குரலில் ஆவேசங் காட்டி 
வாழும் பூனைகள் மரணத்தின்  சூட்சுமத்தை 
மறைத்தே வைத்திருக்கும்...

தன் மலக் கழிவைக் கூட குழி தோண்டிப் 
புதைக்குமை ... மரணத்தை தம்முள் 
பதுக்கியபடி எங்கென்றே தெரியாமல் 
மறையும் ஒரு நாள்.  




No comments:

Post a Comment