Wednesday, November 16, 2011

திண்ணை இணைய இதழில்09-10-11அன்று வெளி வந்த என் கவிதைகள்


திண்ணை இணைய இதழில்09-10-11அன்று  வெளி வந்த என் கவிதைகள்   




அகதிக்  காகம்           
                               - பத்மநாபபுரம் அரவிந்தன் -

நீண்டதோர் கடற்  பயணத்தின்
மூன்றாம் நாள் அதிகாலை
கண்ணில்ப் பட்டது முன்புறக் கொடிமர
உச்சியில் அமர்ந்திருந்த அக்காகம் ..

சில நூறு மைல்கள் கரையே இல்லாப்
பெருங் கடல் நடுவே எப்படி வந்ததோ,
கண்டம் கடக்கும் பறவைகள் பலவும்
ஓய்வெடுக்க வந்திருந்து மீண்டும் போகும்..
காகங்கள் பொதுவாக 
இத்தனை தூரம் பார்ப்பதே இல்லை..
இக்காகம் வழி தவறிப் பெருங் காற்றில்
அடித்துவரப் பட்டிருக்கலாம்.. 
 தொலை பயணக் கப்பல்கள்  ஓவ்வொன்றாய் 
அமர்ந்தமர்ந்து வந்திருக்கலாம்..
எம்பிப் பறக்க எத்தனித்து
பெருங் காற்றின் வேக வீச்சில்
தடுமாறித் தத்தளித்து மீண்டுமது
கப்பல் தளத்தினில் வந்தமரும்

தட்டில் அரிசிகடலைமாமிசத் துண்டுகள் 
கிண்ணத்தில் தண்ணீரும் கொண்டுவந்து
தளத்தில் வைத்து தள்ளி நின்றுப் பார்த்திருந்தேன்..
' காகமே ஆனாலும் அது நம் நாட்டுக் காகமன்றோ? '

இன்னமும் இருக்கிறது நான்கு நாட்கள் 
தொடர் கடற்  பயணம்.. காற்றில்லா நேரத்தில் 
சிறிது தூரம் பறந்து விட்டு
வந்தமர்ந்து ஓய்வெடுக்கும்.. 
சென்னை - ஆஸ்திரேலியா
விசாவின்றி வந்தடைந்து 
கரைகண்டக் களிப்பினில்
வேகமாய் எம்பி சுய குரலில்க்
கத்திவிட்டு கரை நோக்கிப் 
பறந்தததுமறுநாள்.... 
உடலெங்கும் கொத்துக் காயங்களுடன் 
கப்பல்த் தளத்திலது ஓரமாய் ஒளிந்தபடி
அமர்ந்திருக்கக் கண்டேன் நான்..
தலை சாய்த்து எனை நோகிக் கத்தியது இப்படியோ ?
அயல் நாட்டில் அடிவாங்க வேண்டாமென்றும் 
வெளி நாட்டு மோகமது  கூடாதென்றும்....'


சிதைத்தொழித்தல்
                                    - பத்மநாபபுரம் அரவிந்தன் -

என் பால்ய காலத்தில்
பார்த்திருந்த என் மாவட்டம் 
 ஐம்பெரும் நிலங்களில்
நான்கினைக் கொண்டது...
முப்பது ஆண்டுக்குள் இயற்கையின் 
பேரழகை மொத்தமாய்  சிதைத்தொழிக்க
எப்படி முடிந்ததென்று யோசித்து நின்றிருந்தேன்....  
மேகங்கள் வருடும் பெருங் குன்றுகள்  பலவும் 'குவாரி'களாய்க்  
கல்லுடைத்துத் தரைமட்டமாகி
 நீர் தேங்கி பெரும் பள்ளமாகியது..
விரிவயல் வெளிகளின் பெரும் பகுதி
வீடுகள்கல்யாண மண்டபங்கள்பெட்ரோல் நிலையமென்று
புது முகம் கொண்டாயிற்று.. 
பரந்து விரிந்திருந்த ஏரிகள்
சுருங்கி குளங்குட்டையாகியது ...
மலையடிவாரங்கள் ஒவ்வொன்றிலும்
அரசியல்வாதிகளின் தொழில்நுட்பக் கல்லூரிகள்
தேக்குஈட்டிபலாஅயனி மரங்களெங்கே?
வேளி மலை அழகிழந்து ரப்பர்ப் பால் வடிக்கிறது..
செம்மறியாட்டுக் கிடையும்வாத்துகள் மேயும் வயலும் 
எங்கெங்குத் தேடியும் காணவில்லை ..
சிட்டுதூக்கணாங் குருவிகள்அடைக்கலங்   குருவிகள்
குடி பெயர்ந்து சென்றனவா? தற்கொலைச் செய்தனவா?
விரிந்து சென்ற ஆறுகள் சூம்பிப் போய் ஓடையாய் மாறிற்று
 ஆல், அரசுபுளி மரத்தில்  கருங் சிறு மடிக் குடைகள்
கட்டித் தூக்கியதுபோல் தொங்கிக் கிடக்கும் வவ்வால்கள்
ஒன்றையும் காணவில்லை... ஏரிக் குளங்களெல்லாம்  
பன்னீர் போல் நிறைந்திருந்த தண்ணீரில்
மீன் வளர்ப்புத் துவங்கியதால் இரவுகளில்க்
கொட்டப்படும் சாணியும்கறிக் கடைக் 
கழிவுகளும் தண்ணீரை மொத்தமாய் 
சாக்கடைப் போலாக்கியது...
குளித்தெழுந்தால்  அரிப்பு வந்து சொறிகிறது...
அனைத்தையும் வெறியோடு அழித்தெறிந்து  
முன்னேகிச் சென்றொருநாள்
சகலமும் தூர்ந்த பின்பு .. சிலர் யோசிக்கக் கூடும்...
பூமியின் இயற்கை முலைகளை 
வெட்டிவிட்டு சிலிக்கான்   முலைகளை
ஒட்ட வைத்தப்  பெருந் தவற்றை ..... 



1 comment:

  1. Good poem. I also feel very bad about the present condition of our district. One day we will feel the pain of converting all plants into rubber tree. It bring hotness to the surrounding. We can not eat rubber whereas we can eat mango, banana, jack fruit or aayini. There must be awareness among the people of our district to save our mother nature.

    ReplyDelete