Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, September 2, 2012

உதிரும் சிறகுகளின் இறகுகள் 
                                                             - பத்மநாபபுரம் அரவிந்தன் -

ஓடி வந்து புத்தகப்பை வீசி 
கிடைத்ததைத் தின்று 
தெருவிறங்கினால்  வந்து சேரும் நண்பர்கள் 
துவங்குவார்கள் தீர்மானிக்கப் பட்டிருந்த 
அன்றைய  ஆட்டத்தை 

விளக்குவைக்கும் நேரத்தில் 
அம்மாவின் மூன்றாவது அழைபிற்குப் 
பிற்பாடு புழுதியில் உருண்டு 
வியர்த்து மூச்சு வாங்கி, 
கைகால்கள் கழுவி சாமி கும்பிட்டு  
அமருகையில் சென்னை வானொலியின் 
மாநிலச் செய்திகள் துவங்கும் ..

செய்திகள் முடிந்ததும் படிப்பு 
இரவுணவு முடிக்கயிலே ..சுருட்டி இழுக்கும் தூக்கம் 
தினம் காலை குளக் குளியல் 
மழைக் காலம் மழைக் குளியல் 

அறுவடைக் காலங்களில் தெருவெங்கும் 
கதிரடிப்பும், மாடுகளின் மணி ஒலியும் 
உலர்த்தும் வைக்கோல் மேல் உடலரிக்க 
சொறிந்தபடி விளையாட்டு ...

திருவிழாக் காலங்களில் தாரை தப்பட்டை 
தவில் நாதஸ்வர ஊர்வலங்கள் 
இரவின் தீவெட்டி எண்ணெய் மணம்
ஓங்கி முழங்கும் வில்லுப் பாட்டு..
இளம் பருவம் ஓடியது விரைவாக.... 

இன்றென் மகனிடம் பள்ளி விட்டு வந்த பின்பு 
'வெளிச் சென்று விளையாடு', எனச் சொன்னால் 
" யாரோடு?" என்று வெறிச்சோடியத் தெருவைக் காட்டுகிறான்  

நூடுல்ஸ் தின்றபடி மடிக் கணனியில் 
விளையாடிக்கொண்டே என்னிடம் 
"இதுவும் விளையாட்டு தானப்பா" என்கிறான் 

கள்ள உறவும், கதறல்களுமாய்
பதினொன்று மணி தாண்டியும் 
தொடர்கிறது சீரியல்கள் 

நம்மையறியாமல் தலைமுறைகளாய் 
நாம் பறந்து வந்த சுவாரஸ்ய சிறகுகளின் 
இறகுகள் உதிர்ந்து கொண்டே இருக்கிறது 
இயந்திர சிறகுகளை ரகசியமாய் ஒட்டியபடி...  

Thursday, August 16, 2012


15-08-2012 வல்லமை இணைய இதழில் வெளியான என் கவிதை ...

மன  போதை 
பத்மநாபபுரம் அரவிந்தன் 

போதையென்பது வஸ்துக்களிலல்ல 
அது.. மனம் சார்ந்த நிலமைகளின்
வலிமைகளைப் பின்பற்றி 
மூளையைக் கிறக்குவது...

மனச் சோர்வின் போது 
ஒரு மிடறு போதும் ... தலைகேறித் தாவும் 
மகிழ்ச்சியின் உச்சத்தில் கோப்பைகள் பல 
உள்ளிறங்கிப் போனாலும் 
தாளம் தப்பித் தள்ளாடது...

உதடுக்கும் மதுக் கோப்பைக்குமிடையே   
மெல்லிய நுலிழையால் இணைந்து கிடக்கிறது 
போதைக் காற்றாடி ...
இருப்பதா பறப்பதாவென்பது 
மனக் காற்றின் வேகத்தைப் பொறுத்தது.... 

Friday, August 5, 2011

தஞ்சை பெரியகோயில் - கவிதை - பத்மநாபபுரம் அரவிந்தன் –

தஞ்சை பெரியகோயில்        
-      பத்மநாபபுரம் அரவிந்தன்  –

சிந்தையுள் சிவனேற... சிவ போதை  தலைக்கேற 
யோசித்தான் அம்மன்னன் என்னதான் செய்வதென்று? 
மனதுள் உருவெடுத்து மலர்ந்ததோர் பெருலிங்கம் 
இதுவரை கண்டிராத, எவருக்கும் தோன்றிராத
மாலிங்க வடிவமது ..விக்கித்துப் போன  மன்னன்  
திசையெங்கும் பறையறைந்தான்...

சோழ சாம்ராஜ்ய விரிவைப்போல் 
பிரமாண்ட கோயிலொன்றை 
விரைவாகப் பணிய வேண்டும்.. போரெடுத்து 
வென்று வந்த பெரும் செல்வம் அத்தனையும்
மக்களுக்குப் போக மீதி  மகேசனின் பணிக்கேயென்றான் ...

மனதுள் உதித்தெழுந்த   மாலிங்க வடிவமதும்
பெரும் பரப்பில் உயர்ந்து நின்ற வான் முட்டும்
விமானமும் தினந்தோறும் கனவு கண்டான்   
கனவதனை நனவாக்க பலவாறு  சிந்தித்தான் ..

கல்லெடுக்க மலையொன்றை தானேப்போய்
கண்டுவந்து சிற்பிகள் உதவியோடு தரமான
கல்லென்று தரம் பிரித்து ஆராய்ந்து
தொலை தூரம் கொண்டுவர
தடம் போட்டு பாதை செய்து
பெருங்கற்கள்  பலகொண்டு தஞ்சையில்
குவித்து வைத்தான் .. இதுவரையில்
எவரும்  செய்யவே நினைக்காத
பெருலிங்கம்  செய்தெடுத்தான்....
லிங்கத்தை அமர்த்தியபின்
விமானம் உயரவைத்து
பல சிற்பம் அதிலமைத்து அற்புதம்
படைத்திட்டான்.. சிற்பிகள் மட்டுமன்றி 
அரசனும் உழைத்திட்டான்..

கோவிலின் பிரம்மாண்டம் 
சகலரும் பிரம்மிக்க .. நன்கொடைகள் 
தாராளம் வந்தங்கு சங்கமித்து  
மேன்மேலும்  மெருகேறி விமானம் விரிந்தெழ ...
பெருந்தச்சன் விரலசைக்க உளிகள் உறவாட
சிற்பங்கள் உயிரோட.. பெருவுடையார் கோயிலது 
பேரழகு கொண்டு நிற்க மன்னன் ராஜராஜன் 
வெளி நின்று உள்நோக்கி தன்னுள்ளே  யோசித்தான் 
' இது நானா கட்டியது?பெருந்தச்சனா கட்டியது?
இல்லையில்லை .. எம் பெருவுடையார் 
தனக்குத் தானே கட்டியது 
அவனில்லாது  போயிருப்பின்    
எவனிதனை செய்ய ஒக்கும் ?'

பெருவுடையார் ஆசிக்காய்
நெடுங்கிடையாய் விழுந்தெழுந்தான்...
ராஜராஜேஸ்வரம் வாழும் பெருவுடையார் 
திருக்கோயிலென்று திரு நாமம் சூட்டி

தன் பெயரை மட்டுமன்றி
நன்கொடைகள் தந்தவரும், கோயிலுக்காய் 
உழைத்தவரும், சிற்பிகள் மொத்த பெயரும் 
கல்லில் செதுக்கி வைத்து .. அன்று முதல் 
அம்மன்னன் மாமன்னன் பெயரெடுத்து
இன்று வரை அங்கேயே வாழ்ந்துவரும்
அருள் மொழி வர்மனான
உடையார் ஸ்ரீ ராஜராஜத் தேவர் வாழ்க வாழ்கவே...

- பத்மநாபபுரம் அரவிந்தன் –                                                                                     mail: pillaiaravindhan@yahoo.co.in  

Friday, December 17, 2010

அம்மா - பத்மநாபபுரம் அரவிந்தன்-

அம்மா  

- பத்மநாபபுரம் அரவிந்தன்-

மழையில் நனைந்து வீடு வருகையில் 
அண்ணா கேட்டான் குடை ஏன் எடுக்காமல்ப்
 போனாய்?
அக்கா கேட்டாள் மழை விடும் வரை 
ஒதுங்காமல் நனைந்து ஏன் வந்தாய் ?
அப்பா சொன்னார் ஜலதோஷம், காய்ச்சல் 
வந்து...  பட்டால்த்  தான் தெரியும் ... கழுதைக்கு,
என் தலையை துவட்டியபடியே அம்மா சொன்னாள்... 
புத்திகெட்ட மழை.. என் பிள்ளை வீடு வரும் வரை பெய்யாமல்இருக்கத் தெரியவில்லையே அதற்கு..