Sunday, September 8, 2013

பேரின்பம் 

- பத்மநாபபுரம் அரவிந்தன்-

குழந்தை தூங்கும்வரை

மவுனத்தைக் கட்டிக் கிடக்கும்

இருவரின் விரகமும்

ரகசியப் பேச்சும்..

மெல்லிய வெளிச்சத்தில்

கண்கள் மின்னி காமம் கொதிக்கும்

தூங்கியக் குழந்தையை

மெல்ல நகர்த்தி

உருளாமல் இருக்க

தலையணை வைத்து

மெதுவாய் வந்து அருகில் அணைக்க..

அடடா.. அதுதான் பேரின்பமே

Saturday, September 7, 2013

சிங்கம் குகைக்குள் படுத்திருக்கிறது

                                                                                         - பத்மநாபபுரம் அரவிந்தன் - 

வேட்டையாடும் விதத்தில் 

நவீனம் காட்டித் துரத்தி 

விரட்டி வேட்டையாடி 

இரையைப் பகிர்ந்தளித்து 

மகிழ்ந்திருந்த சிங்கமது தனது தளங்களையும்,

களங்களையும் விரிவாக்கி 

வீற்றிருக்க..,  முறையற்ற முறைகளில்

 முயல்கள் கூட

 வேட்டையாடக் களமிறங்க.. 

சிந்தனையில் ஆழ்ந்தது சிங்கம்..

ஒரு சுப்ரபாதத்தில் 

தன் நிலை சொல்லி குகைக்குள் படுத்தது

'இனி நான் வேட்டையாட மாட்டேனென்று'

 மனதுள் சபதித்து 

வேடிக்கை பார்த்தபடி குகைக்குள்ளே கிடக்கிறது ...

காட்டு விலங்கெல்லாம் 

சிங்கமாக முடியவில்லை

கூடிக் கூடியவை பேசும் போது

 சொல்லிக் கொள்கின்றன தங்களுக்குள், 

வேட்டையே ஆடவில்லையானாலும்

சிங்கத்தின் வேட்டைமுறை ஒன்றுக்கும் அமையவில்லை

குகைக்குள்ளே இருந்தாலும் 

அதன் கம்பீரம் போகவில்லை' 

 

மெய்க் கீர்த்தி 
                              - பத்மநாபபுரம் அரவிந்தன் - 

மரங்கள் கூட அசயாத 

வன்னிருட்டில் அவன் நடக்க, நடக்க 

இருள் பழகி பாதை தெரிந்தது..

விடியலின் போதவன் போகும்

 ஊர் போய் சேர்ந்திருந்தான்.

வரயவே வராது என்றிருந்தவன் 

வரைந்து பார்ப்போமே என 

வரைந்த ஓவியங்கள் 

பெருந்தொகைக்கு விலை போயின..

முயன்று பார்க்கலாமென அவன் 

முழு மூச்சாய் முயன்றவை முழுவதையும்

வென்றெடுத்தான்...

போதுமென்ற நிறைவோடு

ஓய்ந்திருக்க 

என்ணியவன் ஒதுங்கி இருக்கயிலே 

மரணம் அவனை ஆரத் தழுவியது                                  ( vallamai - July )

Saturday, May 18, 2013


பெருமாள்முருகன்

எருமைச் சீமாட்டி - ஆனந்த விகடன் சிறுகதை

அம்மாவின் கத்தல் சத்தம் கேட்டு எல்லாரும் எழுந்துவிட்டார்கள். கோடை நிலவின் குளிர் ஒளியில் வாசலில் கட்டில் போட்டுப் படுத்திருந்தார்கள். ‘அம்மா…  என்னம்மா… என்னம்மா’ என்று பெரியவன் உலுக்கிக் கேட்டதும் அழத் தொடங்கினார்.  ‘எருமப் பித்துப் புடிச்சுக் கத்தறாடா உங்கம்மா’ என்று சலிப்போடு சொல்லிவிட்டு அப்பன் அவர் கட்டிலில் போய் உட்கார்ந்து பீடியைப் பற்ற வைத்தார். அம்மாவின் முகத்தை நிமிர்த்தி  ‘அழுவாத சொல்லும்மா.எதுனாக் கனா கண்டயா’ என்றான் பெரியவன். பயந்து சின்னவனும் அழ ஆரம்பித்தான். அவனை வாரித் தன்னோடு சேர்த்துக்கொண்ட அம்மா  ‘எருமச் சீமாட்டி வந்து கத்திக் கூப்புட்டாடா’ என்றாள்.  

‘ஆமா. எரும வந்து கூப்பட்டா  எமன் வந்து கூப்பட்டான்னு அர்த்தம். அது வாலப் புடிச்சுக்கிட்டே போய்ச் சேரு சீக்கரம்’ என்று முனகியபடி எச்சிலைக் காறித் துப்பினார் அப்பன். நள்ளிரவில்  தூக்கம் முற்றாகக் கலைந்துவிட்ட எரிச்சல்.இடையில் விழிப்பு வந்துவிட்டால் மறுபடியும் அவ்வளவு சீக்கிரம் அவருக்குத் தூக்கம் வராது.
 ‘கெழட்டெரும நெனப்புலயே இருந்திருப்ப. அதான் அப்பிடிக் கெனா வந்திருக்குது’ என்று சமாதானம் சொன்னான் பெரியவன்.
‘இல்லடா கூப்ட்டா. தீனி போடச் சொல்லிக் கேக்கற குரல்லயே கூப்ட்டா’ என்று அழுத்திச் சொன்னாள் அம்மா. 
கிழட்டெருமையை விற்று ஒரு வாரமாகிவிட்டது. வாங்கிய ஏவாரி வெள்ளிக்கிழமை பொழுதிருக்கவே பிடித்துச் சென்றுவிட்டார். அப்போது அம்மா வீட்டில் இல்லை. ஏதோ வேலையாகக் காட்டுப்பக்கம் போவது போல மத்தியானம் கிளம்பியவள் வரவேயில்லை. கயிற்றில் கோத்திருந்த திருகாணியைக் கழற்றிக்கொண்டு எருமையைப் பிடித்து ஏவாரி கையில் கொடுத்தார் அப்பன். மறுநாள் சனிக்கிழமை. மணியனுர் மாட்டுச் சந்தை.எருமையைச் சந்தைக்கு அனுப்புவதன் வேதனை அப்பன் முகத்திலும் தெரிந்தது.வீட்டு மனுசி அது. ஆனால் என்ன செய்வது?
கல்யாணமாகி வந்தபோது அம்மா தன்னோடு  சீராகக் கொண்டு வந்தார்.அப்போது ஒருவருசக் கன்றுக் குட்டி. மேல் முழுக்கச் செம்பட்டை மயிர்கள் படர்ந்திருக்கும். வயிறு மட்டும் தாழி போலப் பெருத்திருக்கும். தீனியில் கெட்டி.எதைப் போட்டாலும் தின்று விடும். இங்கே வந்து அம்மா பட்ட கஷ்டங்கள்,சந்தோசங்கள் எல்லாம் அதற்குத் தெரியும்.  அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆசை ஆசையாய்ப் பேசுவார் அம்மா. ‘இவ எரும இல்லடா… என்னயக் காப்பாத்த வந்த சீமாட்டி’ என்பாள். ‘என்னக் குடுத்துக் காப்பத்துனா?’ என்றால் அம்மாவுக்கு முகம் இறுகிவிடும். அப்படிக் கேட்டவர்களைத் தண்டிப்பது மாதிரி கொஞ்ச நேரம் எதுவும் பேச மாட்டார். அப்புறம் பேச ஆரம்பித்தால் பெருவேகக் காற்று சுழன்றடிக்கும்.
‘எல்லாக் குடுத்தவ அவதான். இவ இருக்கறப்ப ஒன்னும் கொண்டு வராதவன்னு என்னய ஆராச்சும் ஒருவார்த்த பேச முடியுமா? தங்கன்னுவளுக்குப் பாலுக் குடுத்தாளோ இல்லயோ, எம் பசவளுக்கு அவதான் இன்னைக்கு வரைக்கும் பாலுக் குடுக்கறா. அவளாலதான் பட்டி பெருகுச்சு. வரத்தரயாக் கெடந்த கட்டுத்தர நெறஞ்சுச்சு. இந்தக் குடிய ஒசத்தினது அவதான். எந்தாயா நின்னு என்னயத் தாங்கறவதான் இந்தச் சீமாட்டி’ என்று ஆவேசத்தோடு பேசிவிட்டு அழுவாள். எந்தப் பேச்சையும் அழுகையில்தான் அம்மா முடிப்பார்.
‘சிந்தித் தடவித்தடவி செவுரு முழுக்கச் சளி ஒழுவிக் கூரையெல்லாம் ஊளமூக்காக் கெடக்குது. எங்கிருந்துதான் வருமோ இவளுக்கு. பனமரத்துப் பாள ஊறறாப்பல’ என்று அப்பன் பேசும் ஏகடியத்தைச் சட்டை செய்ய மாட்டார் அம்மா. ‘எம்பாரத்த மூக்கச் சிந்தித்தான் கொறைக்கோணும். சீமாட்டி மட்டும் எங்கூட வல்லீனா இங்கயா இருந்திருப்பன். எப்பவோ வாழாவெட்டியா எங்கூருக்குப் போயி அங்க மூக்கச் சிந்திக்கிட்டு இருந்திருப்பன்’ என்பார்.  
வந்த இடத்திற்கு ஒரு குறையும் வைக்கவில்லை அது. அம்மாவைப் போலவே.கன்று ஈன்றபின் நாலாம் மாதம் பயிராகிவிடும். சினை உறுதியான பின் பாலுக்கு நிற்காமல் உதைத்துக் கொண்டு போயிற்று என்னும் பேச்சேயில்லை. அடுத்த கன்று ஈனும் வரைக்கும்கூடப் பீய்ச்சிக் கொண்டேயிருக்கலாம். ஏழாம் மாதம் முடிந்ததும்  ‘பாலு அப்பிடியே சீய்யாட்டம் வருது. ஆனாலும் நிக்கறா பாரு.சீமாட்டின்னாலும் எருமைங்கறது செரியாத்தான் இருக்குது’ என்று செல்லமாகத் திட்டிக்கொண்டே பீய்ச்சாமல் நிறுத்திவிடுவார் அம்மா.
இதுவரைக்கும் வீட்டுக்குப் பால், தயிர், மோர், நெய் எல்லாம் அது கொடுத்ததுதான். மூன்று மாதம் கறவை இல்லாத சமயத்தில் தவித்துப் போவார்கள். அது தரும் பாலின்  வாசம் பழக்கமானதில் வேறு கறவைகளின் பால் வாசனையே பிடிப்பதில்லை. அம்மா  வேறெங்கு போய்ச் சாப்பிட்டாலும் பாலோ தயிரோ வேண்டாம் என்று சொல்லிவிடுவார்.  ‘சீமாட்டி பாலக் குடிச்ச வாயிக்கு மத்ததெல்லாம் காமாட்டி பாலுத்தான்’ என்பார்.  
இதுவரைக்கும் அது ஈன்ற கன்றுகளில் மூன்று மட்டும் கிடா. மற்ற எல்லாமே கிடாரிதான். எல்லாக் கன்றுகளையும் வளர்ப்பார்கள். ஏதாவது ஒரு காரணத்தால் அவற்றை விற்க நேரும். ஒருபோதும் சீமாட்டியை விற்கும் எண்ணம் யாருக்கும் வந்ததில்லை. இப்போது கட்டுத்தரையில் நிற்பவை எல்லாம் அதன் வர்க்கம்தான்.இளம்வர்க்கம் பெருகப்பெருகச் சீமாட்டியை அம்மாவைத் தவிர எல்லாரும்‘கெழட்டெரும’ என்று சொன்னார்கள். அம்மா ஒருபோதும் அப்படிச் சொன்னதில்லை. ‘சொல்றவிய ஆருக்கும் வயசாவதயா போயிரும்?’ என்பதோடு நிறுத்திக்கொள்வார்.
போன ஈற்றுச் சினையானபின் அது பட்ட பாட்டைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. வயிற்றுச் சுமையோடு படுத்து எழுவதற்குள் கண்களில் நீர் முட்டிவிடும். தீனி எடுத்துக் கடிக்க முடியவில்லை. பற்கள் சிதைந்துவிட்டன.கன்றுக்குச் சரியான ஆகாரம் போய்ச் சேரவில்லை. எலும்பும் தோலுமாகக் கன்றை  ஈன்றுவிட்டு அதற்குப் பால் கொடுக்கக் கூட எழுந்து நிற்கவில்லை.சுடுதண்ணி வைத்துக் கழுவிவிட்டார் அம்மா. கம்பை வேக வைத்துத் தின்னக் கொடுத்தார். அருகில் உட்கார்ந்து கொண்டு கையில் எடுத்து எடுத்து ஊட்டினார். ‘எங்காலம் முடியங்காட்டி அனாதயா உட்டுட்டுப் போயராத’ என்று அழுதார்.
ஒருவழியாக எழுந்து பால் கொடுப்பதற்குள் கன்று பசியால் நுரைதள்ளிவிட்டது.ஆனால் எருமை அடுத்த நான்கு மாதத்தில் சினைக்குக் கத்த ஆரம்பித்தது. ‘கெழடாகியும் இன்னம் ஒடம்பு கேக்குதா உனக்கு’ என்று கோபத்தோடு திட்டியதோடு இனிமேல் அது சினையாக வேண்டாம் என்று அம்மா முடிவு செய்துவிட்டார்.  கிடா சேர்த்தக் கொண்டு போகவில்லை. அது இரண்டு மூன்று நாள் கத்திக்கத்தி ஓய்ந்தது. ஆறேழு மாதத்திற்குப் பின் மீண்டும் கத்தியது.அப்போது பாலும் குறைந்தது. அதை என்ன செய்வதென்று அம்மாவுக்குப் புரியவில்லை.  ‘வித்தர்லாம்’ என்று அப்பன் சொன்ன  அன்றைக்கே அம்மா அழத் தொடங்கினார்.
கிட்டத்தட்ட ஒருமாதம் இருவருக்கும் இதே பேச்சுத்தான். தினம் முன்னிரவில் சண்டை தொடங்கி அழுகை, அடி என்று ஓயும்.  ‘கெழட்டெருமயக் கட்டுத்தரயில வெச்சிக்கிட்டுப் பாவன பாக்க நம்மால முடியுமா’  என்றார் அப்பன். பால் குறைந்து போனதால் காலையில் மட்டும் பீச்சினார் அம்மா. ஒரு படிக்கு வரும்.பருத்திக்கொட்டைக் குழம்பு போலிருக்கும்.  படிக்குப் படி எனச் சரியாகத் தண்ணீர் சேர்ப்பார். அப்பவும் தண்ணீர் கலந்த மாதிரியே தெரியாது.
கடைசியில் ஒரு படி பாலோடு ஏவாரிக்கு விற்றுவிட்டார் அப்பன். சனிச் சந்தைக்குப் போன எருமை கறிவெட்டுக்குப் போயிற்றோ வத்தப்பால் பீய்ச்ச யாராவது வாங்கிப் போனார்களோ தெரியவில்லை. அது போன பின் கட்டுத்தரை வெறுமையாய்க் கிடந்தது. கட்டுத்தரைப் பூவரசின் அடியில் போய் உட்கார்ந்து எங்கேயோ வெறித்துப் பார்த்திருப்பார் அம்மா. யாரிடமும் சரியான பேச்சில்லை.எதைக் கேட்டாலும் சட்டெனக் கண்ணீர் திரண்டு விடும். இரவுத் தூக்கத்தில் திடீர் திடீரென்று இப்படிக் கத்திக் கொண்டு எழுவார். அப்புறம் அவரைச் சமாதானப்படுத்த வெகுநேரம் ஆகும்.
‘நல்லா எங்காதுல கேட்டுது  நம்ம சீமாட்டித்தான் கனச்சா’ என்றார் அம்மா. ‘பேசாத படும்மா. எல்லாங் காத்தால பாத்துக்கலாம்’ என்று பெரியவன் அவளைப் பிடித்துச் சாய்த்துக் கட்டிலில் படுக்க வைத்தான்.  ‘இல்லடா எனக்கு நல்லாக் கேட்டுது’ என்று முனகினார் அம்மா. எல்லாருக்கும் தூக்கம் வந்து கண்ணைச் செருகிய நேரத்தில் திரும்பவும் அம்மா கத்திக்கொண்டு எழுந்தார்.  ‘அவதான் .எனக்கு நல்லாக் கேட்டுது. அவளேதான்’ என்று பிதற்றினார்.
பெரியவனும் சின்னவனும் பிடிக்கப் பிடிக்கக் கையை உதறிக்கொண்டு கட்டுத்தரையை நோக்கி ஓடினார். ‘எருமப் பைத்தியம் புடிச்சே இவளக் கொண்டோயிருமாட்டம்’ என்று சலித்து மறுபடி பீடியைப் பற்ற வைத்தார்.அம்மாவின் பின்னாலேயே இருவரும் ஓடினார்கள். கட்டுத்தரைப் பூவரசின் அடியில் எருமை படுத்து அசை போட்டுக் கொண்டிருந்தது. முன்று பேருமே அப்படியே நின்றுவிட்டார்கள்.  ‘அவதான்டா வந்துட்டா. என்னயத் தனியா உட்டுட்டுப் போவமாட்டா’ என்றார் அம்மா மகிழ்ச்சிக் குரலில்.
அவர்களைப் பார்த்துச் சற்றே ஓங்கிய குரலில் கனைத்தது அது. கண்களை நன்றாகத் தேய்த்து விட்டுக்கொண்டு பார்த்தபோதும் எருமை தெரிந்தது. அம்மா ஓடிப்போய் அதன் கழுத்தைக் கட்டிக் கொண்டார். அம்மாவை நக்கிக் கொடுத்தது.அப்பனும் வந்துவிட்டார். எல்லாருக்கும் ஆச்சரியம். அம்மா தீனியை அள்ளிக் கொண்டு வந்து போட்டார். அதைச் சீண்டவில்லை. வரும் வழியில் எங்கேயோ மேய்ந்து வயிற்றை நிரப்பிக்கொண்டிருந்தது. சுகமாக அசை போட்டபடியே எல்லாரையும் பார்த்துக் கனைத்தது. தனக்குரிய இடத்தை வந்தடைந்து விட்ட நிம்மதி அதன் கனைப்பில் தெரிந்தது.  
பூவரசு மர நிழல் இருளில் அதன் கண்கள் மினுங்கின. அவர்களின் சத்தம் கேட்டுக் கொஞ்சம் தூரக் காடுகளில் குடியிருந்த ஆட்கள் எல்லாம் வந்துவிட்டனர். பல கன்றுகள் ஈன்ற எருமை எங்கோ விற்கப்பட்டு வீடு தேடி வந்துவிட்டது சாதாரண விசயமாக இல்லை. யார் வாங்கிப் போயிருப்பார்கள்,எவ்வளவு தூரத்திலிருந்து தடம் கண்டுபிடித்து வந்திருக்கும்  எனப் பேசிக் கொண்டார்கள்.
கன்றுக்குட்டியாக இருந்தபோது இந்த ஊருக்கு வந்த எருமை ஊர் எல்லையைத் தாண்டிப் போன சந்தர்ப்பங்கள் குறைவு. பக்கத்து ஊர்க் கரடுகளுக்கு மேய்ச்சலுக்குப் போய்த் திரும்பியிருக்கிறது. கிடா சேர்த்துவதற்காக இரண்டு ஊர்கள் தாண்டியிருக்கிற மணியாரர் வீடுவரை சில தடவையும் நகரத்துக் கால்நடை மருத்துவமனை வரை ஓரிரு முறையும் போனதுண்டு. கட்டுத்தரையும் மேட்டுக்காடுமே அது சுற்றிச் சுழன்ற இடங்கள்.
மணியனூர் சனிச்சந்தை பத்துக் கல் தொலைவு. அவ்வளவு தூரம் டெம்போ வைத்துத்தான் ஏவாரி ஏற்றிப் போனார். சந்தையிலிருந்து வாங்கி வந்தவர்கள் பக்கத்து ஊர்க்காரர்களாக இருப்பார்களோ. வாங்கிப் போனவர்கள் கயிற்றைக்கூட மாற்றவில்லை. திருகாணி கோத்திருந்தார்கள். கயிறு அறுபடவில்லை. இழுப்பில் அவிழ்த்துக் கொண்டிருக்கலாம். இழுத்து அவிழ்க்க எருமைக்கு வலுவில்லை. சரியாக முடிச்சிட்டுக் கட்டியிருக்க மாட்டார்கள்.
ஒருவாரத்தில் வயிறு ஒட்டிப் போயிருந்தது. முகச் சோர்வு நிலவொளியில் தென்பட்டது. வண்டி, சந்தை, புதுக்கட்டுத்தரை என்று அலைந்தாலும் ஒருவழியாய் வந்து சேர்ந்துவிட்ட ஆசுவாசத்தை அது உணர்வதை அசை போடல் காட்டியது. போன செல்வமெல்லாம் ஒருசேரத் திரும்பிவிட்ட மாதிரி அம்மா உணர்ந்தார்.  ‘வாங்குனவங்க தேடிக்கிட்டு வருவாங்க’ என்று யாரோ சொன்னார்கள். அதைக் கேட்டதும் அம்மாவின் முகம் வாடிப் போயிற்று. அப்படி யாரும் வரக்கூடாது என்று நினைத்தாள்.
அடுத்த பத்து நாள் வரை ஒருவரும் வரவில்லை. வரத்தட்டுக்களைக் கடிக்க முடியாது என்று சோகைகளை மட்டும்  இனுங்கிச் சேர்த்து எருமைக்குத் தின்னக் கொடுத்தார் அம்மா. பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு குழந்தைக்கு ஊட்டுவது போல எடுத்து எடுத்து வாயில் வைத்தார். பெரியவனை விரட்டி எங்கெங்கோ அலைந்து தினமும் சிறுகூடை நிறையப் பச்சைப் புல் வெட்டி வரச் செய்தார்.பச்சையைப் பால் மணக்கக் கொரித்துத் தின்றது. கொஞ்சம் தேறிய மாதிரி தெரிந்தது. அரைப்படி அளவாகக் குறைந்திருந்த பால் பழையபடி திரும்பியது.வீடு முழுக்கப் பழைய வாசனை வந்து சேர்ந்திருந்தது.
எருமையைத் தேடி இனி யாரும் வரப் போவதில்லை என்று நினைத்திருந்தபோது அந்தப் பதினோராவது நாள் எங்கிருந்தோ ஏழெட்டு பேர் சேர்ந்து வந்து கட்டுத்தரையில் நின்றுகொண்டார்கள். ‘சந்தயில வாங்கியாந்து கட்டுத்தரயில கட்டியிருந்த எருமய ராத்திரியோட ராத்திரியா களவாடிக்கிட்டு வந்துட்டா உட்ருவாமா. ஞாயத்தக் கேக்க எங்களுக்கும் நாலு பேரு இல்லாதயா போயிருவாங்க. திருட்டுப் பொழப்புக்கு நாண்டுகிட்டுச் சாவலாம். கொழந்தப் பாலுக்கு வேணுமின்னு வத்தக் கறவயாப் பாத்து இந்தக் கெழட்டெருமய வாங்கியாந்தம். இதப் போயித் திருடிக்கிட்டு வந்திருக்கறாங்களே.’
யாரையும் அவர்கள் பேசவே விடவிலை. முந்தானையை வாயில் பொத்திக்கொண்டு அம்மா அழுதுகொண்டிருந்தார். எருமை எதையும் உணராமல் எல்லாரையும் உற்றுப் பார்த்தபடி நின்றது. அதனருகே போய்ப் பாதுகாவல் போலச் சின்னவன் நின்றுகொண்டான். அவனை மீறி யாரும் எருமைக்குப் பக்கத்தில் போய்விட முடியாதாம். பெரியவன் நகம் கடித்தபடி நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்பன் அப்போது இல்லை.
எருமைத் திருட்டுப் போய்விட்டது என்று முடிவு செய்து பத்து நாட்களாகவே ஆளாளுக்குச் சுற்று வட்டார ஊர்களுக்கு எல்லாம்  போய் நோட்டம் பார்த்திருக்கிறார்கள். கள் குடிக்க வருபவர் போல ஒருவர் இந்தப் பக்கமும் வந்து கட்டுத்தரையில் எருமை நிற்பதைப் பார்த்துவிட்டார். தனியாள் கேட்டால் தட்டி அனுப்பிவிடுவார்கள் என்று உடனே ஊருக்குப் போய் ஆட்களைக் கூட்டி வந்திருக்கிறார். கிடா மீசையோடு வெள்ளையும் சொள்ளையுமாய் இருந்த ஒருவர் எவரையும் பேசவிடாமல் அவரே பேசிக் கொண்டிருந்தார். பெரும் களவைக் கண்டுபிடித்துவிட்ட சாகசமும் செய்தவர்களைத் தண்டிக்கும் உரிமை தனக்கு இருக்கும் திமிருமாக அவர் பேசினார்.
கண்களைத் துடைத்துக்கொண்ட அம்மா பெரியவனை அருகழைத்து ‘உங்கொப்பன் எங்காச்சும் காட்டுல கள்ளுக் குடிச்சுப்புட்டு உருண்டு கெடப்பான்.எழுப்பிக் கூட்டியா’ என்று அனுப்பினார். அதற்குள் பக்கத்துக் காடுகளில் இருந்தெல்லாம் ஆட்கள் வந்து குழுமி விட்டார்கள்.
‘என்ன ஒரு தெதிரியம் இருந்தா ஊட்டுக்கிட்டக் கட்டியிருந்த எருமய உள்ள வந்து அவுத்துக்கிட்டு வந்திருப்பாங்க. எருமைக்கு முன்னால நிக்கறானே இந்தச் சின்னப்பயன். . . இவன் மூஞ்சிய பாத்தாலே திருட்டுக்கள தெரியுது’ என்றார் அவர்.
ராமக்காப் பாட்டிதான் குரலெடுத்துப் பேசினார்.  
‘அட சும்மா தொறக்காத. ஆரு ஊட்டுக்கு வந்து என்ன பேச்சுப் பேசற. கன்னுப் போட்டதுல இருந்து இந்தக் கட்டுத்தரயில இருக்கற எரும இது. ஊருக்கே தெரியும். என்னமோ அளக்கற. உன்னெருமைங்கறதுக்கு என்ன அடையாளம்?சொல்லு பாப்பம்’ என்று பாட்டி எகிறயதும்தான் வழிக்கு வந்தார்கள்.
சனிச் சந்தையில் ஏவாரியிடத்தில் அவர்கள் வாங்கிய விவரம் தெரிந்தது.பழையபாளையத்துக்காரர்கள். ஏழெட்டுக் கல் தொலைவு. சந்தையில் வாங்கிய எருமையை இந்த வழியாகத்தான் கொண்டு போயிருக்கிறார்கள். எருமை தடம் பார்த்துக் கொண்டது. எருமை தானாகவே வந்து சேர்ந்துவிட்டது என்பதை அவர்கள் நம்பவில்லை. ஊரே சொல்லும்போது மறுக்கவும் முடியவில்லை.  
‘செரி. . . எருமய அவுத்துக் குடுக்கச் சொல்லுங்க. இன்னமே அவுத்துக்கிட்டு வராத பாத்துக்கறம்’ என்று அவர் இறங்கி வழிக்கு வந்தார். சின்னவன் எருமையை நெருங்கி அதனோடு ஒட்டி நின்றுகொண்டான். கண்ணீரை முந்தானையில் துடைத்துக்கொண்டு அம்மா எழுந்தார். எல்லாரையும் பொதுவாகப் பார்த்துச் சத்தமாகப் பேசினார்.
‘வித்த எரும எங்கட்டுத்தரயத் தேடித் தானாவே வந்திருச்சு. நான் வளத்த சீமாட்டி அவ. என்னய உட்டுப் போவ மாட்டீங்கறா. தேடி வந்து கட்டுத்தரயில நின்னவள வெரட்டி உடமாட்டன். வாங்குன பணத்தத் திருப்பிக் குடுத்தர்றன்.வாங்கிக்கிட்டுப் போவச் சொல்லுங்க. எருமதான் வேணுமின்னா எஞ்சவத்து மேல ஏறிப் போயிப் புடிச்சுக்கிட்டுப் போவட்டும்.’
பேச்சற்று எல்லாரும் அம்மாவையே பார்த்தார்கள்.

Friday, December 14, 2012


விரிசலுக்குப் பிற்பாடும் 
                                                    - பத்மநாபபுரம் அரவிந்தன் -

உனக்கும் எனக்குமான நட்பில் 
விழுந்த விரிசல் - உன்
ஒரு சொல்லால் விளைந்தது 
பிற்பாடு நீ கேட்ட மன்னிப்புகள் அத்தனையும்
உன்னையே நிலை நிறுத்தி    
என்மீதுக் கவிழ்ந்ததாய் இருக்க 
விரிசல் விரிவடைந்த பிற்பாடு 
நீயோ, நானோ பரஸ்பரம் 
பார்ப்பதைத் தவிர்த்தும் 
எதேச்சையாய் உன்னை எங்காவதுக்
காணும் போதினில் இதயம் சுற்றி 
வலையொன்று இறுக்கும்..

கண்கள் தானாய் வேறிடம் நோக்கி 
கால்கள் அதுவாய்த் திரும்பி நடக்கும்
மனதுள் மட்டும் ஏக்கம் புரண்டு 
நீ அழைக்கும் குரல் கேட்க 
காதுகள் விடைத்துக் கூர்மையாகும் 

உனக்கும் வாய்வரை வார்த்தைகள் வரலாம் 
அடக்கிக் கொள்கிறாய் என்னைப் போலவே 

எது எப்படியாயினும் உன்னைப் பற்றி 
தவறாய் எவரேனும் சொல்லும் போது
என்னையும் அறியாக்  கோபம் வரும்  
இன்னமும் உள்ளே 
எங்கோக் கிடக்கிறது உனக்கான 
என் நட்பின் உதிரித் துளிகள் ..





பூனைகளின் மரணம் 
                                            - பத்மநாபபுரம் அரவிந்தன் - 

யாரேனும் கண்டதுண்டோ .. பூனைகளின் 
இயற்கையான மரணத்தை? 
வாகனங்களில் அடிபட்டோ , நாய்களால் 
கடிபட்டோ இரை பிடிக்கத் தாவுகையில் 
தவறிக் கிணற்றுள் விழுந்தோ ..
விபத்து சார்ந்த மரணங்களையன்றி 
பூனைகளின் இயற்கையான மரணம் 
மனித மனதைப் போல பெரும் புதிர்...

குறிகிய இடத்துள் நெளிந்து நுழையும் 
உயர இடத்தில் பரபரக்க ஏறும் ...
எப்படித் துக்கிப் போட்டாலும் 
கால்கள் ஊன்றித் தரையிறங்கும் 
புழுதியில்ப் புரண்டு அழுக்காகும் 
நாக்கால் நக்கியே தூய்மையாகும் 

விரட்டி வேட்டயாடி .. சில நேரங்களில் 
வேடிக்கையாய் விளையாடி ..
புணர்தல் குரலில் ஆவேசங் காட்டி 
வாழும் பூனைகள் மரணத்தின்  சூட்சுமத்தை 
மறைத்தே வைத்திருக்கும்...

தன் மலக் கழிவைக் கூட குழி தோண்டிப் 
புதைக்குமை ... மரணத்தை தம்முள் 
பதுக்கியபடி எங்கென்றே தெரியாமல் 
மறையும் ஒரு நாள்.  




பத்மநாபபுரம் அரவிந்தன் - கவிதைகள் -


 விரிசலுக்குப் பிற்பாடும் 
                                                    - பத்மநாபபுரம் அரவிந்தன் -

உனக்கும் எனக்குமான நட்பில் 
விழுந்த விரிசல் - உன்
ஒரு சொல்லால் விளைந்தது 
பிற்பாடு நீ கேட்ட மன்னிப்புகள் அத்தனையும்
உன்னையே நிலை நிறுத்தி    
என்மீதுக் கவிழ்ந்ததாய் இருக்க 
விரிசல் விரிவடைந்த பிற்பாடு 
நீயோ, நானோ பரஸ்பரம் 
பார்ப்பதைத் தவிர்த்தும் 
எதேச்சையாய் உன்னை எங்காவதுக்
காணும் போதினில் இதயம் சுற்றி 
வலையொன்று இறுக்கும்..

கண்கள் தானாய் வேறிடம் நோக்கி 
கால்கள் அதுவாய்த் திரும்பி நடக்கும்
மனதுள் மட்டும் ஏக்கம் புரண்டு 
நீ அழைக்கும் குரல் கேட்க 
காதுகள் விடைத்துக் கூர்மையாகும் 

உனக்கும் வாய்வரை வார்த்தைகள் வரலாம் 
அடக்கிக் கொள்கிறாய் என்னைப் போலவே 

எது எப்படியாயினும் உன்னைப் பற்றி 
தவறாய் எவரேனும் சொல்லும் போது
என்னையும் அறியாக்  கோபம் வரும்  
இன்னமும் உள்ளே 
எங்கோக் கிடக்கிறது உனக்கான 
என் நட்பின் உதிரித் துளிகள் ..





பூனைகளின் மரணம் 
                                            - பத்மநாபபுரம் அரவிந்தன் - 

யாரேனும் கண்டதுண்டோ .. பூனைகளின் 
இயற்கையான மரணத்தை? 
வாகனங்களில் அடிபட்டோ , நாய்களால் 
கடிபட்டோ இரை பிடிக்கத் தாவுகையில் 
தவறிக் கிணற்றுள் விழுந்தோ ..
விபத்து சார்ந்த மரணங்களையன்றி 
பூனைகளின் இயற்கையான மரணம் 
மனித மனதைப் போல பெரும் புதிர்...

குறிகிய இடத்துள் நெளிந்து நுழையும் 
உயர இடத்தில் பரபரக்க ஏறும் ...
எப்படித் துக்கிப் போட்டாலும் 
கால்கள் ஊன்றித் தரையிறங்கும் 
புழுதியில்ப் புரண்டு அழுக்காகும் 
நாக்கால் நக்கியே தூய்மையாகும் 

விரட்டி வேட்டயாடி .. சில நேரங்களில் 
வேடிக்கையாய் விளையாடி ..
புணர்தல் குரலில் ஆவேசங் காட்டி 
வாழும் பூனைகள் மரணத்தின்  சூட்சுமத்தை 
மறைத்தே வைத்திருக்கும்...

தன் மலக் கழிவைக் கூட குழி தோண்டிப் 
புதைக்குமை ... மரணத்தை தம்முள் 
பதுக்கியபடி எங்கென்றே தெரியாமல் 
மறையும் ஒரு நாள்.  





உதிரும் சிறகுகளின் இறகுகள் 
                                                             - பத்மநாபபுரம் அரவிந்தன் -
                  ( 09-09-12 திண்ணை இணைய இதழில் )


ஓடி வந்து புத்தகப்பை வீசி 
கிடைத்ததைத் தின்று 
தெருவிறங்கினால்  வந்து சேரும் நண்பர்கள் 
துவங்குவார்கள் தீர்மானிக்கப் பட்டிருந்த 
அன்றைய  ஆட்டத்தை 

விளக்குவைக்கும் நேரத்தில் 
அம்மாவின் மூன்றாவது அழைபிற்குப் 
பிற்பாடு புழுதியில் உருண்டு 
வியர்த்து மூச்சு வாங்கி, 
கைகால்கள் கழுவி சாமி கும்பிட்டு  
அமருகையில் சென்னை வானொலியின் 
மாநிலச் செய்திகள் துவங்கும் ..

செய்திகள் முடிந்ததும் படிப்பு 
இரவுணவு முடிக்கயிலே ..சுருட்டி இழுக்கும் தூக்கம் 
தினம் காலை குளக் குளியல் 
மழைக் காலம் மழைக் குளியல் 

அறுவடைக் காலங்களில் தெருவெங்கும் 
கதிரடிப்பும், மாடுகளின் மணி ஒலியும் 
உலர்த்தும் வைக்கோல் மேல் உடலரிக்க 
சொறிந்தபடி விளையாட்டு ...

திருவிழாக் காலங்களில் தாரை தப்பட்டை 
தவில் நாதஸ்வர ஊர்வலங்கள் 
இரவின் தீவெட்டி எண்ணெய் மணம்
ஓங்கி முழங்கும் வில்லுப் பாட்டு..
இளம் பருவம் ஓடியது விரைவாக.... 

இன்றென் மகனிடம் பள்ளி விட்டு வந்த பின்பு 
'வெளிச் சென்று விளையாடு', எனச் சொன்னால் 
" யாரோடு?" என்று வெறிச்சோடியத் தெருவைக் காட்டுகிறான்  

நூடுல்ஸ் தின்றபடி மடிக் கணனியில் 
விளையாடிக்கொண்டே என்னிடம் 
"இதுவும் விளையாட்டு தானப்பா" என்கிறான் 

கள்ள உறவும், கதறல்களுமாய்
பதினொன்று மணி தாண்டியும் 
தொடர்கிறது சீரியல்கள் 

நம்மையறியாமல் தலைமுறைகளாய் 
நாம் பறந்து வந்த சுவாரஸ்ய சிறகுகளின் 
இறகுகள் உதிர்ந்து கொண்டே இருக்கிறது 
இயந்திர சிறகுகளை ரகசியமாய் ஒட்டியபடி...  




நினைவுகள் -பத்மநாபபுரம் அரவிந்தன் - 

- 04-07-2012 - வல்லமை இணைய இதழ்

திடீரென்றுசம்மந்தமே இல்லாத 
பொழுதொன்றில் உன் நினைவுகள்
எழுந்து விரிகிறது மனதில்
இப்பொழுது நீ எங்கிருக்கிறாய்…
எப்படி இருக்கிறாய் எதுவுமே
தெரியாத போதிலும் ..
கற்பனையில்
துல்லியமாய்த் தெரிகிறாய்
அதே சிரிப்பு.. நிஜத்தில் ஒரு வேளைமாறியிருக்கலாம்
ஆனால் என் மனதினுள் அப்படியே
இருபதாண்டுகளுக்கு முன்பிருந்த உன்
முகமும், பேச்சும், சிரிப்பும் சற்றும் மாறாமல் பளீரிடுகிறது .
..
கல்லூரி வளாகத்தில் முந்திரி மரத்தில் சாய்ந்து
என் விரல்களைக் கோர்த்தபடி
நீ சொன்ன வார்த்தைகள் இத்தனை
ஆண்டுகளுக்குப் பிறகும் ஏன் வந்தது என் நினைவில் மீண்டும்?
விரக்தி நேர்கையில் சுகங்களாய்க்
கழிந்த பொழுதுகளை மீண்டும்
மீட்டெடுக்கத் துடிக்கிறதோ மனம் ?
எங்கிருந்தாலும் என்னைப்போல்
உனக்கும் என்றாவது தோன்றுமோ
நாம் தவறவிட்ட வாழ்வின் சுகமான
பொழுதுகளை நினைக்க……


அது ஒரு மழை நாள் - பத்மநாபபுரம் அரவிந்தன் -  

- - 21 - AUGUST - 2012 - வல்லமை இணைய இதழ்


அன்றொரு நாள்ப் பெய்த பெருமழையில் 

நனைந்து நின்ற உன்னை என் குடைக்குள் அழைத்தேன் ..

குடை வாங்கி வீசிவிட்டு என்னையும் மழை  நனையச் 

சொன்னாய் நீ.. 

மூக்கு நுனியில் நீர் சொட்ட, பூத்திருந்தப்

பூ போல பளீரிட்ட உன் முகத்தை என்னால் 

ஒவ்வொரு மழை போதும் யோசிக்க முடிகிறதாயினும் 

உன்னோடு  நனைந்த அம்மழைக்குப் பிற்பாடு 

இன்றுவரை என் மனதுள் எம்மழையும் பெய்யவில்லை ...

எங்கோ ஓரிடத்தில் நீயும் மழை ரசிக்கும் போது

அன்று பெய்த அம்மழை ஈரமாய் உன்னுள் 

சிலிர்த்துத் தெறிக்கலாம்  ..... பழைய நினைவின் 

மேகங்களை கலைத்து சொரிந்தபடி...  



மனபோதை     -              வல்லமை இணைய இதழ் - 15 -ஆகஸ்ட்-2012  

பத்மநாபபுரம் அரவிந்தன்  

போதையென்பது வஸ்துக்களிலல்ல 
அது.. மனம் சார்ந்த நிலமைகளின்
வலிமைகளைப் பின்பற்றி 
மூளையைக் கிறக்குவது...

மனச் சோர்வின் போது 
ஒரு மிடறு போதும் ... தலைக்கேறித் தாவும் 
மகிழ்ச்சியின் உச்சத்தில் கோப்பைகள் பல 
உள்ளிறங்கிப் போனாலும் 
தாளம் தப்பித் தள்ளாடாது...

உதடுக்கும் மதுக் கோப்பைக்குமிடையே   
மெல்லிய நுலிழையால் இணைந்து கிடக்கிறது 
போதைக் காற்றாடி ...
இருப்பதா பறப்பதாவென்பது 
மனக் காற்றின் வேகத்தைப் பொறுத்தது.... 




11- 03 -12 - திண்ணை இணைய இதழில் வெளியான என் இரு கவிதைகள். 
- 
பத்மநாபபுரம் அரவிந்தன் -
  
தொடர்பறுதல்

                                             
ஏகாந்த இரவொன்றில் வான்பார்த்து

மாடியில் படுத்தபோது தென்பட்ட

நட்சத்திரங்கள் ஒவ்வொன்றின் இடையேயும்

விரிந்துக் கிடக்கிறது ஏகப்பட்டத் தொலைவு

எனை விட்டுத்

தொடர்பறுந்துப் போனவர்கள் போல..   

ஒன்றாய்ப் படித்து, சுற்றிய நண்பர்கள் ...

நெருக்கமாய்ப் பழகிய தொடர் கடிதத் தோழிகள்

பக்கத்து வீடுகளில் குடியிருந்துப் போனவர்கள்

நெருக்கமாய் இருந்த தூரத்து உறவுகள் 

இலக்கியம் பேசி உணர்ச்சி வசப் பட்டவர்கள் ... 

பலருடனும் இற்றறுந்துப் போயிற்று தொடர்பு..

முகநூலிலும், ஆர்குட்டிலும் தேடித் தேடி 

அலுத்தப் பின்பும்   அழிபடாமல்

மனதுள் விரிகிறது அவர்களுடனான

எனது நாட்கள் ..

புதிது புதிதாய்க் கிடைக்கும் தொடர்புகளும்

சிறிது நாளில் தொடர்பறுகிறது

கைபேசி அழைப்புகளும் பயனற்று போனபின்பு 

எண்களை அழித்துவிட்டு   .. எதிர் நோக்கிக் காத்திருக்க

ஒன்று மட்டும் புரிகிறது 

தொடர்பறுதல் தொடர்ந்துகொண்டேயிருக்கும்    

என் தொடர்பு 

புவியறுக்கும் காலம் வரை..  


உளத் தீ ..

                                   - பத்மநாபபுரம் அரவிந்தன் -


சிறிதொரு தீப்பொறி மனதுள்

வைத்து, சொற்களால் ஊதிப்

பெருந் தழலாக்கினாய்   நீ

உன் சொற்களின் சூடும்

வார்த்தைகளின் வெம்மையும்   

பொசுக்கிப்  போட்டதென் மனதைப் பலமுறை

ஆறாமல் போன  ரணங்களில் தவித்ததென் மனம்

காரணம் புரியாமல்  

குடிக்குள் புகுந்தென்னை சுருக்க முயன்றேன் 
அதுவே காரணமாய் ஊர் முன்   
நிலை நாட்டினாய் உன்னை..   

எல்லோர்  நிலைபாடும் என்னைக்

குறையூற்றி சிறுகச் சிறுகவாய்க் கொன்றொழித்துக்

கொண்டிருக்க உனக்கு மட்டுமேத்

தெரியும் எனக்குள் நீ வைத்தத் தீயே 

என்னை எரித்துக் கொண்டிருப்பதும்

இப்பொழுதெல்லாம் தீயையே நான் ரசித்துக்

கொண்டிருப்பதும்..  

‎15-01-12 திண்ணை இணைய இதழில் வெளியான என் கவிதை

ஓர் இறக்கை காகம் 

                                           - பத்மநாபபுரம் அரவிந்தன் - 

முட்டை விரிந்து வெளிவரும் போதே 
ஒற்றை இறக்கை இல்லாமல் இருந்தது 
அக்காகக்  குஞ்சுக்கு ... சக முட்டைகள்  விரிந்து 
அத்தனைக் குஞ்சுகளும் இரட்டை சிறகடிக்க 
இக்குஞ்சு மட்டும் ஒற்றை சிறகடித்து எதுவும் புரியாமல் 
மறுபக்கம் பார்த்தது .. சிறகு இருக்கும் இடத்தில்
வெறுமொரு சிறு முளை மட்டுமே அதற்கு..   
பறக்கத் துவங்கிய குஞ்சுகள் கண்டு  
ஒற்றை சிறகினை ஓங்கி வீசி எம்பிப் பார்த்தது ..
முடியாது போக கூட்டுக்குள்ளே முடங்கிப் போனது..
தாய்க் காகம் அதற்கு கொண்டு கொடுத்தது 

சக காகங்கள் சொல்லும் ஊர் கதைகள்
 கேட்டு ஆசை ஊற்றெடுக்க  
ஒருநாள் 
கூட்டிலிருந்தது தாவிக் குதித்து தரைக்கு வந்தது.. 
மிகத் துரித நடையது தானாய் பழகி 
அடிமரப் பொந்தொன்றில் தனக்கானக் 
கூட்டை தானே அமைத்தது ..

காலை முதல் மாலை வரை 
நடந்து நடந்தே இரை தேடித் திரிய 
ஊர்மக்கள் கவனம் அதன்மேல் திரும்பி 
ஒவ்வொரு வீடும் அன்பாய் அதற்கு உணவுகள் 
கொடுக்க .... பறக்கும் காகங்கள் பொறாமையில் 
எரிந்தன... நடந்தே திரியும் காகத்தை ஒழிக்க  
திட்டங்கள் தீட்ட கூட்டங்கள் போட்டன ...அவற்றால் 
ஒன்றும் செய்ய முடியாமல்ப் போக 
எதனையும் பொருட்படுத்தாது 
நடந்து நடந்தே வாழ்ந்து முடித்து 
போய்ச் சேர்ந்தது ஓர் இறக்கைக் காகம் ..

பறக்கும் காகங்கள் சாதாரணமாய்ப் போக 
நடக்கும் காகத்தை ஊர் தேடி அலைந்தது 
அது மரணித்த பின்பும் பரம்பரை பரம்பரையாய் 
கதை வழி இன்னும் வாழ்கிறது மனதுள்.... 
‎22-01-12 திண்ணை இணைய இதழில் வெளி வந்த எனது கவிதை - பத்மநாபபுரம் அரவிந்தன் -
பெருங் கோட்டைச் சுவர் தாண்டி
உள் நுழையத் தேரோடும் தார் சாலையின்
இருமருங்கும் புது வீடுகள்..முப்பது ஆண்டுகளுக்கு முன்பான
ஊர் நெஞ்சுள் விரிகிறது..நிரம்பித் தழும்பும் பெருமாகுளம்
இக்கரைக்கும் அக்கரைக்கும் நீந்திப்
போகும் சிறுவர் கூட்டம்.. குளம்
களிப்படைந்துப் போயிருந்த பொற்காலம்..கரையோர அரசமரத் திண்டில் காற்று வாங்கிக்
களைப்பாறும் வேளிமலை விறகு வெட்டிகள்
ஓயாதப் பறவைகளின் குரல்
சவக் கோட்டை மேல்ப் பறக்கும்
பருந்துக் கூட்டம்..மாலையில் நாற் தெருவும் குழந்தைகள்
இளைஞர்கள் விளையாட்டு …திடீரென வரும் சண்டை .. சற்று நேரத்தில் சமாதானம்
பள்ளிக்கூட நடையில் இரவெல்லாம்
உலகலசும் விவாதங்கள்
அதிகாலை ராமசாமி கோவில் சுப்ரபாதம்
ஊர் வாழ்ந்துக் கொண்டிருந்தது…இன்றும்
ஊரில் மக்கள் வாழ்கிறார்கள்
ஊர் செத்துக் கிடக்கிறது….
08-01-2012 திண்ணை இணைய இதழில் வெளியான எனது கவிதை..... 


சிலை
பத்மநாபபுரம் அரவிந்தன்


அக் கிராமத்தின் சிற்றோடைக்
கரையோரம் கால் முட்டிப் பாகம்வரை
செஞ்சேற்றினுள் அமிழ்ந்து.. தேகமெங்கும்
சகதித் தீற்றுடன் மல்லாக்கக் கிடந்தது அச்சிலை...


கண்களிலும் உதட்டிலும் புன்னகைப் பூவிரிக்க 
கச்சை கட்டிய கூர் முலையும், வடிவேயான 
இடையுடனும் .. யாரையோ எதிர் நோக்கும் 
 பாவனையில் ... இடக்கை  நாடி தாங்க 
வலக்கை இடையில் வைத்து காத்திருக்கும் அச்சிலையின் 
கை விரல்கள் சிலவற்றை காணவில்லை..காலச் சுழற்சியில் 
உடைந்தவை உதிர்ந்திருக்கலாம்....


அற்புதமான அச்சிலை எக்காலம் செய்ததென்றோ
எப்படியங்கு வந்ததென்றோ யாருக்கும் தெரியவில்லை...
வயதான ஒருவர் சொன்னார் ... 
தன் சிறு பிராயத்தில்
கரையோரம் நின்றிருந்து.. காலப் போக்கிலது  
 நிற்க முடியாமல்ப் படுத்ததென்று...
யாரோ துப்பிய வெற்றிலை எச்சில் 
உறை ரத்தம் போல்  தலைக் கிரீடத்தில்...


சிதைந்துக் கொண்டிருப்பது    
வெறுமொரு கற்சிலயல்ல...
சிந்தையுள் காதலுடன் ..
யாரையோ நினைவிலேற்றி 
மனமுழுக்க வடிவமைத்து 
விரல்கள் வழி மனமிறக்கி 
உளிகளில் உயிர் கொடுத்து 
பலநாட்கள் பாடுபட்டுச்
செய்தெடுத்த ...
எக்காலமோ வாழ்ந்திருந்த ஓர்
அற்புத சிற்பியின் காதலுடன்
கூடிய கலையும், உழைப்பும் தான் ...

திண்ணை இணைய இதழில்09-10-11அன்று  வெளி வந்த என் கவிதைகள்   




அகதிக்  காகம்           
                               - பத்மநாபபுரம் அரவிந்தன் -

நீண்டதோர் கடற்  பயணத்தின்
மூன்றாம் நாள் அதிகாலை
கண்ணில்ப் பட்டது முன்புறக் கொடிமர
உச்சியில் அமர்ந்திருந்த அக்காகம் ..

சில நூறு மைல்கள் கரையே இல்லாப்
பெருங் கடல் நடுவே எப்படி வந்ததோ,
கண்டம் கடக்கும் பறவைகள் பலவும்
ஓய்வெடுக்க வந்திருந்து மீண்டும் போகும்..
காகங்கள் பொதுவாக 
இத்தனை தூரம் பார்ப்பதே இல்லை..
இக்காகம் வழி தவறிப் பெருங் காற்றில்
அடித்துவரப் பட்டிருக்கலாம்.. 
 தொலை பயணக் கப்பல்கள்  ஓவ்வொன்றாய் 
அமர்ந்தமர்ந்து வந்திருக்கலாம்..
எம்பிப் பறக்க எத்தனித்து
பெருங் காற்றின் வேக வீச்சில்
தடுமாறித் தத்தளித்து மீண்டுமது
கப்பல் தளத்தினில் வந்தமரும்

தட்டில் அரிசி, கடலை, மாமிசத் துண்டுகள் 
கிண்ணத்தில் தண்ணீரும் கொண்டுவந்து
தளத்தில் வைத்து தள்ளி நின்றுப் பார்த்திருந்தேன்..
' காகமே ஆனாலும் அது நம் நாட்டுக் காகமன்றோ? '

இன்னமும் இருக்கிறது நான்கு நாட்கள் 
தொடர் கடற்  பயணம்.. காற்றில்லா நேரத்தில் 
சிறிது தூரம் பறந்து விட்டு
வந்தமர்ந்து ஓய்வெடுக்கும்.. 
சென்னை - ஆஸ்திரேலியா
விசாவின்றி வந்தடைந்து 
கரைகண்டக் களிப்பினில்
வேகமாய் எம்பி சுய குரலில்க்
கத்திவிட்டு கரை நோக்கிப் 
பறந்ததது, மறுநாள்.... 
உடலெங்கும் கொத்துக் காயங்களுடன் 
கப்பல்த் தளத்திலது ஓரமாய் ஒளிந்தபடி
அமர்ந்திருக்கக் கண்டேன் நான்..
தலை சாய்த்து எனை நோகிக் கத்தியது இப்படியோ ?
' அயல் நாட்டில் அடிவாங்க வேண்டாமென்றும் 
வெளி நாட்டு மோகமது  கூடாதென்றும்....'


சிதைத்தொழித்தல் 
                                    - 
பத்மநாபபுரம் அரவிந்தன்
 -என் பால்ய காலத்தில்
பார்த்திருந்த என் மாவட்டம்
 
ஐம்பெரும் நிலங்களில் நான்கினைக் கொண்டது...முப்பது ஆண்டுக்குள் இயற்கையின்
பேரழகை மொத்தமாய்  சிதைத்தொழிக்க எப்படி முடிந்ததென்று யோசித்து நின்றிருந்தேன்....மேகங்கள் வருடும் பெருங் குன்றுகள்  பலவும் 'குவாரி'களாய்க்
கல்லுடைத்துத் தரைமட்டமாகி
 
நீர் தேங்கி பெரும் பள்ளமாகியது..விரிவயல் வெளிகளின் பெரும் பகுதி
வீடுகள், கல்யாண மண்டபங்கள், பெட்ரோல் நிலையமென்று புது முகம் கொண்டாயிற்று..பரந்து விரிந்திருந்த ஏரிகள்
சுருங்கி குளங்குட்டையாகியது ...மலையடிவாரங்கள் ஒவ்வொன்றிலும் அரசியல்வாதிகளின் தொழில்நுட்பக் கல்லூரிகள் தேக்கு, ஈட்டி, பலா, அயனி மரங்களெங்கே? வேளி மலை அழகிழந்து ரப்பர்ப் பால் வடிக்கிறது..செம்மறியாட்டுக் கிடையும், வாத்துகள் மேயும் வயலும்
எங்கெங்குத் தேடியும் காணவில்லை ..சிட்டு, தூக்கணாங் குருவிகள், அடைக்கலங்   குருவிகள் குடி பெயர்ந்து சென்றனவா? தற்கொலைச் செய்தனவா? விரிந்து சென்ற ஆறுகள் சூம்பிப் போய் ஓடையாய் மாறிற்று 
 
ஆல், அரசு, புளி மரத்தில்  கருங் சிறு மடிக் குடைகள் கட்டித் தூக்கியதுபோல் தொங்கிக் கிடக்கும் வவ்வால்கள்
ஒன்றையும் காணவில்லை... ஏரிக் குளங்களெல்லாம்
பன்னீர் போல் நிறைந்திருந்த தண்ணீரில் மீன் வளர்ப்புத் துவங்கியதால் இரவுகளில்க்
கொட்டப்படும் சாணியும், கறிக் கடைக்
கழிவுகளும் தண்ணீரை மொத்தமாய்
சாக்கடைப் போலாக்கியது... குளித்தெழுந்தால்  அரிப்பு வந்து சொறிகிறது...அனைத்தையும் வெறியோடு அழித்தெறிந்து
முன்னேகிச் சென்றொருநாள் சகலமும் தூர்ந்த பின்பு .. சிலர் யோசிக்கக் கூடும்...பூமியின் இயற்கை முலைகளை
வெட்டிவிட்டு சிலிக்கான்   முலைகளை ஒட்ட வைத்தப்  பெருந் தவற்றை .....02-10-2011 
திண்ணை இணைய
 இதழில் வெளிவந்த என் கவிதைகள் 
காத்திருப்பு 
                      - 
பத்மநாபபுரம் அரவிந்தன் - 

(02-10-2011 
திண்ணை இணைய இதழில் வெளிவந்த என் கவிதை)குற்றங்களுக் கெதிராக உயர்த்தப்படும் சாட்டைகள் விளாசப் படாமலேயே
மெதுவாய்த் தொய்கின்றன.. இடக்கையால்
பெருந்தொகை வாங்கிக்கொண்டு
சட்டங்கள் தன்னிருப்பை சுருக்கவும் விரிக்கவும் கரன்சிப் பகிர்வுகள் தலையசைத்து நடக்கிறது ..நியாயங்களின் பாதைகளில்  முள்வேலிப் போட்டு
அராஜகப் பெருஞ்சாலை விரிகிறது ...ஏதோ நினைவுகளில் அழுத்தப் படுகிறது
வாக்குப் பதிவு இயந்திரத்தின்  பொத்தான்கள்
உள்ளேப் போவதும், வெளியே வருவதுமாய்
நகர்கிறது ஐந்தாண்டு... காட்டப்படும் 
 
சொத்துக் கணக்குகள்
யாருக்குமே குடவோக் குறையவோ இல்லை
உட்பூசல்களும், வெளிப்பூசல்களுமாய்
உதிர்ந்து கொண்டிருகிறது நாட்கள் ...பொது மக்கள் சகலரும்
ஒண்டிக் குடித்தனத்தில் ஒளிந்து கொள்கிறார்கள்
இலவசமாய் பலதும் கிடைத்தும் ..விலயேற்ற வீரியம்
கொடுங் கைகள் கொண்டுத் தாக்கித் தகர்க்கிறது
மீண்டுமொரு மௌன ஐந்தாண்டுத் தவத்தில்
காத்துக் கிடக்கிறார்கள்  எப்பொழுதும் போலவே .....

 .

பிச்சைக் காரர்கள் 
                                      - 
பத்மநாபபுரம் அரவிந்தன் -  
வயோதிகக் கூனால் வளைந்த நடையுடன் 
 பஞ்சடைத்தக் கண்களும் நடுங்கும் உடலுமாய் ... 
கந்தல் உடையுடன் கையேந்தி நின்ற 
அந்தப் பிச்சைக் காரனுக்கு தேனீர் வாங்கித் தந்து 
கையில் பத்து ரூபாய்க்கொடுத்தபோது ... 
நெஞ்சம் முழுக்க ஏதோ நிறைந்தது...
மின் விசிறியின் கீழே , சுழல் நாற்காலியில்
அமர்தபடி மூன்று  முக இணைப்பிற்காய் ரூபாய்
ஐயாயிரம்  லஞ்சமாய்  வாங்கிய அந்த மின் வாரியப்
பிச்சைக் காரனுக்கு... நானிட்டப்    பிச்சையும்
முழுக் குப்பி  விஸ்கியும்  எத்தனை நினைத்தும்
கனக்கிறது மனதுள் அழியாமலேயே.... நினைவுகள் 
                          - 
பத்மநாபபுரம் அரவிந்தன் -
திடீரென்று சம்மந்தமே இல்லாப் பொழுதொன்றில் உன் நினைவுகள் எழுந்து விரிகிறது மனதில் இப்பொழுது நீ எங்கிருக்கிறாய்... எப்படி இருக்கிறாய் எதுவுமேத்
தெரியாத போதிலும் ..கற்பனையில் துல்லியமாய்த் தெரிகிறாய் அதே சிரிப்பு.. நிஜத்தில் ஒரு வேளைமாறியிருக்கலாம்
ஆனால் என் மனதுள் அப்படியே
இருபதாண்டுகளுக்கு முன்பிருந்த உன்
முகமும், பேச்சும், சிரிப்பும் சற்றும் மாறாமல்ப்
பளீரிடுகிறது   ...கல்லூரி வளாகத்தில் முந்திரி மரத்தில்ச் சாய்ந்து
 
என் விரல்களைக் கோர்த்தபடி
நீ சொன்ன வார்த்தைகள் இத்தனை
ஆண்டுகளுக்குப் பிற்பாடு ஏன் இன்றென்னை வந்தடைகிறது மீண்டும்? விரக்தி நேர்கையில் சுகங்களாய்க் கழிந்த பொழுதுகளை மீண்டும்
மீட்டெடுக்கத் துடிக்கிறதோ மனம் ?எங்கிருந்தாலும் என்னைப்போல் உனக்கும் என்றாவதுத் தோன்றுமோ
நாம் தவறவிட்ட வாழ்வின் சுகமானப்
பொழுதுகளை நினைக்க......


கோமறத்தாடியின் மறுநாட்க் கவலை
                                                                          - 
பத்மநாபபுரம் அரவிந்தன்
 -(02-10-2011 
திண்ணை இணைய இதழில் வெளிவந்த என் கவிதை)ஓங்கி ஒலிக்கும் ஒற்றை முரசின் 
தாளத்தில்த் துள்ளும் கோமறத்தாடியின்

கை இருந்த கமுகம் பூ உதிர்ந்து தெறிக்க 
ஆக்ரோஷ ஆட்டத்தில்... பலமாய் வெளிவரும்

அவர் குரலற்ற வேறொன்று...  வியர்த்து விறுவிறுக்க

ஆடும் மாடனுக்கு  சாராயம் கலந்த

இளநீர்கள் கொடுத்து உக்கிர ஆட்டத்தை

உச்சத்தில் கொண்டு போய், அதிரும் முரசினை

சட்டென்று  நிறுத்தி... உருவாகும் அமைதியில்

கோமறத்தாடியின் உருவில் மாடனின் குரல் மட்டும்

சத்தமாய் ஒலிக்கும்...நீட்டப்படும்  அவித்த முட்டைகள் தின்று ... மீண்டும் சற்றே

சாராயம் குடித்து  திருநீறு பூசி குறிசொல்லி முடித்து 
சட்டென்று தரையில் மாடன் விலகி, மனிதனாய் சரிய
 
தண்ணீர்த் தெளித்து புதுத் துணி உடுத்து 
கறிச்சோறு   தின்னும் பொழுதில் நினைப்பார் 

'என்றைக்கும் திருவிழா இருந்தால் என்ன சுகம்

நாளை முதல் சாப்பாடு ஒருவேளை ...
இன்று காலில் விழுந்தெழும் பக்தர்கள் 
நாளை மீண்டும் சொல்வார்கள் ,
" ஏதாவது சோலி மையிருக்குப் போவும் ஓய்...."

ராசிப் பிரசவங்கள்  
                           
                                    - 
பத்மநாபபுரம் அரவிந்தன்
 -நாள் கிழமைப் பார்த்து டாக்டருக்குச் சொல்லிவிட்டால்
கோள் ராசி பயமில்லை....டாக்டரின்
கத்திக்குள் நட்சத்திரங்கள் ஒளிந்திருக்கும் ...மிகச் சிறந்த ராசியதில், சுத்த நட்சத்திரத்தில்
அற்புதமான நாளன்று - அறுவை முறை கலையோடு
அக் குழந்தை அவதரிக்கும் .. குழந்தை பிறக்கும் நேரம் இயற்கையின் கை விட்டு கத்திக்கும், காசுக்கும்  கைமாறி
காலங்கள் ஆகிப் போச்சு..என்  குழந்தை பிறந்த நாள் இதென்று சொல்லாமல்
பிறப்பித்த நாள் இதுவென்று சொல்லவேண்டும்..டாக்டர்கள் இனிமேல் பஞ்சாங்கமும் பயில வேண்டும்...சோதிடமும் தெரிய  வேண்டும்..  ராகு, கேது, குரு பெயற்சி தவறாமல் சொல்ல வேண்டும்...நல்ல நாள் பார்த்து, அறுத்தெடுத்து அத்தனை
சேய்களையும் நாடாளச் செய்ய வேண்டும்..பிறப்பவை அத்தனையும் நாடாள வந்து விட்டால்
குடி மக்கள் என்றிங்கு எவர் தான் இருப்பாரோ?
-------------------------------------------------------------------------------------------------
புராதனத் தொடர்ச்சி
                                           - 
பத்மநாபபுரம் அரவிந்தன்
 -

( 25-09-2011  
திண்ணை இணைய இதழில் வெளி வந்தது  )

புராதனச் சம்பவங்கள் புத்தியில்
படிமமேறி  நிகழ் வாழ்வில் நெளிந்து
உட்ப்   புகவும்,  வெளி வரவும் முடியாது
உறக்கமற்ற சூனியத்தை ஒளிப் பிழம்புகளாய் சுருட்டியள்ள .. நிலை குலைந்து புராதனமனைத்தும்
துடைத்தெறியும் வெறியில் புதியன பலவும் படித்தறிந்து புகுத்தி வைக்க எத்தனிக்கும் மனதில் புதியன எதுவும் புராதனத்துடனே ஒப்பிட்டு நிற்கும்...தன்னுள்ப் புலம்பும் மனம்...

' 
புதியனவென்று எதுவும் இல்லை .. எல்லாம்,எல்லாம் புராதனத்தின் தொடரே.... '




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtHXSMz3u8-oUEf5pQo2zJt774ONmmIxIuV9p2BMNssyP3Itg8knEclQ3yqouATkM-d0b8gWn_yySMuzlI9I5UkYzQiRE8f-Bvr-qmiFzgEG9HEp7NKkDMoFMW2VBHp5prMSfyHBN2F2k/s320/ARULMOZHI-35.jpg





தேடல்                                        
             -  பத்மநாபபுரம் அரவிந்தன் -

பிஞ்சு மழலையைக்  கொஞ்ச எடுக்கையில் 
தானாய் வழிகிறது கனிவு, மனம் வழி ஊறி
தூக்கும் கை வழி பரவி வியாபிக்கும் அன்பு
கண்கள் பார்க்கையில் நெஞ்சம் நிறைந்து
கசிந்துருகும் காதல் ...   என்  காய்த்த கைதனில்
பூத்த மலரென படுத்திருக்கும் குழந்தை...
சின்னச் சிணுங்கலில் என் மனச் சிறகுகள்
வானோக்கி எம்ப எத்தனிக்கும் ...
விட்டுப் பிரிந்திருந்தும் மனதுள் 
அவள் மேல் வீசும் சோழ தேசத்து
பால் நிறை நெற்பயிர் வயல்வெளி  மணம்....
 மழை  பெய்து பிற்பாடு ஒளி பட்ட மலை போல மின்னும்
அப்பிஞ்சு முகத்தின் கன்னக் கதப்பு
மனக் கண்ணில் மறையாது
எண்ண எண்ண சலிக்காது ..வந்து நின்று போகாது
மனைவி, மகன் மேலிருந்த தேடல் மெல்ல
மகளின் மேல் நகரும் காலம்
தொலைதூரம்   இருந்தாலும்  தொடர்ந்தேதான்  ஆகும் ...
கொடுத்து வந்த முத்தத்தின் மணம் இன்னும் மாறவில்லை
கையசைத்து ,காலசைத்து மெல்லியப் புன்னகையை
எனை நோக்கி வீசியதை மனமுழுக்க சேமித்து
யோசித்து செலவிட்டு கழிக்க வேண்டும் சில நாட்கள்
சேமிப்பு தீருமுன்பு மீண்டுமங்கு போகவேண்டும் பல
 முத்தங்கள் வாங்கவேண்டும் ....

ஒரு கடலோடியின் வாழ்வு
                                                           - பத்மநாபபுரம் அரவிந்தன் -


திரண்டத் திட்டாய் கரு நீல மேகங்கள் 

உதிப்பின் ஒளியில் மேல் வானச்  சிவப்பு 

வெண் கை நீட்டி மற்றொரு  மேகம்... 

கடல்விட்டெம்பும் சீகல் பறவைகள் ...

அடர் நீல அசையும் பெரும் பட்டாய்க் கடல் ...

எத்தனை பேருக்குக் கிடைக்கும் இவ் வாய்ப்பு? 

கர்விக்கும் மனம்...  மறுநொடி சென்றமரும் 

மனைவி, குழந்தைகள் பக்கத்தில் ....

கண்கள் இங்கும் மனமங்குமாய்  

விடுமுறை தினத்தை கணக்கெடுக்கும்

நாளை மீண்டுமோர் விடியல்..  



18-09-2011 திண்ணை இணைய இதழலில்   வெளியான என் இரு கவிதைகள்...

தஞ்சை பெரியகோயில்        
-      பத்மநாபபுரம் அரவிந்தன்  –

சிந்தையுள் சிவனேற... சிவ போதை  தலைக்கேற 
யோசித்தான் அம்மன்னன் என்னதான் செய்வதென்று? 
மனதுள் உருவெடுத்து மலர்ந்ததோர் பெருலிங்கம் 
இதுவரை கண்டிராத, எவருக்கும் தோன்றிராத
மாலிங்க வடிவமது ..விக்கித்துப் போன  மன்னன்  
திசையெங்கும் பறையறைந்தான்...

சோழ சாம்ராஜ்ய விரிவைப்போல் 
பிரமாண்ட கோயிலொன்றை 
விரைவாகப் பணிய வேண்டும்.. போரெடுத்து 
வென்று வந்த பெரும் செல்வம் அத்தனையும்
மக்களுக்குப் போக மீதி  மகேசனின் பணிக்கேயென்றான் ...

மனதுள் உதித்தெழுந்த   மாலிங்க வடிவமதும்
பெரும் பரப்பில் உயர்ந்து நின்ற வான் முட்டும்
விமானமும் தினந்தோறும் கனவு கண்டான்   
கனவதனை நனவாக்க பலவாறு  சிந்தித்தான் ..

கல்லெடுக்க மலையொன்றை தானேப்போய்
கண்டுவந்து சிற்பிகள் உதவியோடு தரமான
கல்லென்று தரம் பிரித்து ஆராய்ந்து
தொலை தூரம் கொண்டுவர
தடம் போட்டு பாதை செய்து
பெருங்கற்கள்  பலகொண்டு தஞ்சையில்
குவித்து வைத்தான் .. இதுவரையில்
எவரும்  செய்யவே நினைக்காத
பெருலிங்கம்  செய்தெடுத்தான்....
லிங்கத்தை அமர்த்தியபின்
விமானம் உயரவைத்து
பல சிற்பம் அதிலமைத்து அற்புதம்
படைத்திட்டான்.. சிற்பிகள் மட்டுமன்றி 
அரசனும் உழைத்திட்டான்..

கோவிலின் பிரம்மாண்டம் 
சகலரும் பிரம்மிக்க .. நன்கொடைகள் 
தாராளம் வந்தங்கு சங்கமித்து  
மேன்மேலும்  மெருகேறி விமானம் விரிந்தெழ ...
பெருந்தச்சன் விரலசைக்க உளிகள் உறவாட
சிற்பங்கள் உயிரோட.. பெருவுடையார் கோயிலது 
பேரழகு கொண்டு நிற்க மன்னன் ராஜராஜன் 
வெளி நின்று உள்நோக்கி தன்னுள்ளே  யோசித்தான் 
' இது நானா கட்டியது?பெருந்தச்சனா கட்டியது?
இல்லையில்லை .. எம் பெருவுடையார் 
தனக்குத் தானே கட்டியது 
அவனில்லாது  போயிருப்பின்    
எவனிதனை செய்ய ஒக்கும் ?'

பெருவுடையார் ஆசிக்காய்
நெடுங்கிடையாய் விழுந்தெழுந்தான்...
ராஜராஜேஸ்வரம் வாழும் பெருவுடையார் 
திருக்கோயிலென்று திரு நாமம் சூட்டி

தன் பெயரை மட்டுமன்றி
நன்கொடைகள் தந்தவரும், கோயிலுக்காய் 
உழைத்தவரும், சிற்பிகள் மொத்த பெயரும் 
கல்லில் செதுக்கி வைத்து .. அன்று முதல் 
அம்மன்னன் மாமன்னன் பெயரெடுத்து
இன்று வரை அங்கேயே வாழ்ந்துவரும்
அருள் மொழி வர்மனான
உடையார் ஸ்ரீ ராஜராஜத் தேவர் வாழ்க வாழ்கவே...

- பத்மநாபபுரம் அரவிந்தன் –